சுண்டாட்ட (கேரம்) விளையாட்டின் மூலம் வாழ்க்கையில் மேன்மை அடைந்துவிட வேண்டும் எனும் கொள்கையுடன் திரியும் அன்பு, பழிவாங்கும் காய் நகர்த்தலுக்குள் சிக்கி மக்கள் தலைவனாக எப்படி மாறுகிறான் என்பதை கொஞ்சம் காதல், நிறைய வன்முறைகளுடன் சொல்லியிருக்கிறது ‘வடசென்னை’.
‘ஆடுகளம்’, ‘விசாரணை’ போன்ற படங்களில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களில் இயக்குநர் வெற்றிமாறனின் பங்களிப்பு என்பது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனியாக தெரியும். அந்தத் தனித்துவம் ‘வடசென்னை’ திரைப்படத்தில் இன்னும் மேம்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக இந்தப் படத்தின் கதையை கருவாக சுமந்தவர், கடந்த 29 மாதங்களாக அதற்கு ஒரு வடிவத்தை தர, அவர் மிக வலுவாக முயற்சித்திருக்கிறார் என்பதை காட்சிகளின் வழியே நம்மை புரிந்து கொள்ள செய்கிறது வடசென்னை. அவரது திரைமொழி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சிறைச்சாலை, வடசென்னை வாழ்வியல், எண்பதுகளின் காலகட்ட பதிவு என வெற்றிமாறன் செய்து காட்டியுள்ள நுணுக்கங்கள் ‘வேற லெவல்’.
பதின் பருவம், இளைஞர் என இருவேறு தோற்றத்திலும் உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் தனுஷ். அன்பு கதாப்பாத்திரத்தில் அத்தனை கச்சிதம். முகம் மறைத்து அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷை பைனாகுலர் வழி கண்டுபிடிப்பது, அவர் அசிங்கமாக திட்டித் துரத்தும்போது பயந்து நிற்பது, முத்தமிட்டு மாட்டிக் கொள்ளும்போது தேற்றுவது என காதல்காரனாகவும், சிறைக்குள் சென்று ஸ்கெட்ச் போடுவது, ஊருக்கு ஒரு பிரச்னை எனும் போது சீறி எழுவது என சண்டைக்காரனாகவும் சிறப்பு. அவரைப்போலவே, வசனங்கள் மூலம் திடுக்கிட வைத்து, பின்தொடரும் தனுஷை மிரட்டி ஐஸ்வர்யா ராஜேஷும் தன் பங்களிப்பை சரிவர செய்திருக்கிறார்.
அமீர், சமுத்திரகனி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் என நட்சத்திரங்கள் நிறைந்த ரவுடிச கும்பலுக்கு தலைவனாக வசீகரிக்கிறார் அமீர். ராஜன் எனும் கதாப்பாத்திரத்தில் பொருந்தி அரசியலை எதிர்ப்பது, ஆண்ட்ரியாவுடனான காதலில் லயிப்பது என நடிகராக இது அவருக்கு வேறு ஒரு பரிமாணம். சதா ஸ்கெட்ச், பழிவாங்கல், ஆயுதங்கள், ரத்தம் எனும் உலகிற்குள் சந்திராவாக வரும் ஆண்ட்ரியா சில இடங்களில் ரசிக்க வைக்கிறார்.
முழுக்க முழுக்க வடசென்னைக்குள் மட்டுமே கதை மாந்தர்கள் உலவுவதால், அந்தப் பகுதியில் சாதாரணமாக புழங்கும், சில கெட்ட வார்த்தைகளை நாயகி, நாயகன் என எல்லா நடிகர்களும் வெகு சாதாரணமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அது நிலம் சார்ந்த வாழ்வியலோடு பிணைந்தது என்பதால் அவற்றை தவிர்க்க முடியாது என்பதை உணர முடிகிறது. ஆனால், சமுத்திரகனி, ஆண்ட்ரியா போன்றவர்களுக்கு சென்னை வட்டார மொழி கொஞ்சம் பொருந்தவில்லை.
இயக்குநர் வெற்றிமாறனுக்கு இணையாக ‘வடசென்னை’ படத்தில் பிரமிக்க வைக்கும் உழைப்பு கலை இயக்குநர் ஜாக்கியுடையது. அச்சு அசலான சிறைச்சாலையில் தொடங்கி சுவரொட்டி, குடிசை, கத்தி என எண்பதுகளின் காலகட்டத்தை கிட்டத்தட்ட மறு உருவாக்கம் செய்து அசத்தியிருக்கிறார்.
பாடல்களில் கவனம் ஈர்க்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பின்னணி இசையில் இன்னும் ஈர்க்கிறார். அவரைப் போலவே, வேல்ராஜின் ஒளிப்பதிவு, வெங்கடேஷ்-ராமர் கூட்டணியின் படத்தொகுப்பு, திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் என தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணிகளை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
நிலம் சார்ந்த மக்கள் பிரச்னைகள் உலகெங்கும் பரவலாகியிருக்கும் நிலையில், ‘வடசென்னை’ படமும் அதனை மையமாகக் கொண்டே உருவாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் ‘A’ சான்றிதழையே வழங்கியிருக்கிறது. அதனை பார்வையாளர்களும் உணர்ந்து இப்படத்தை அணுகினால் வேறு ஒரு அனுபவம் நிச்சயம்.