சிறப்புக் களம்

‘தாஜ்மஹாலை சுற்றிலும் காவி மேகங்கள்’: கிளம்பியது புதிய பூதம்

‘தாஜ்மஹாலை சுற்றிலும் காவி மேகங்கள்’: கிளம்பியது புதிய பூதம்

rajakannan

தாஜ்மஹாலை சுற்றி புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய பொருளாக மாறுவது இது முதல் முறை அன்று. குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சர்ச்சைகள் தாஜ்மஹாலை சுற்றிச் சுழல்கிறது. தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலிலிருந்து உத்தரப்பிரதேச அரசு நீக்கியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. தற்போது, சற்றே வித்தியாசமான சர்ச்சை எழுந்துள்ளது. தாஜ் மகோத்சவ் திருவிழாவில் ராமர் குறித்த நாடகம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுதான் அது. இந்தப் புதிய முயற்சி பாஜகவின் காவிமயமாக்கும் நடவடிக்கை என்ற விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கட்டிடக்கலையில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலின் பெருமையை விளக்கும் விதத்தில் ஆண்டு தோறும் ஆக்ராவில் ‘தாஜ் மகோத்சவ்’ என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தக் கலைவிழாவைக் காண ஏராளமான வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் ஆக்ராவுக்கு வருவார்கள். ஆக்ரா அருகேயுள்ள ஷில்ப்கிராமில் இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்திய சுற்றுலாத் துறை நிதியுதவியுடன், உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை நடத்தும் இந்தத் திருவிழாவில் மொகலாயர்கள் காலத்து கலாச்சார இசையான சூஃபி பாடல்களுடன் இந்தியக் கலை, கலாச்சாரம், நடனம் ஆகியவை அரங்கேற்றப்படும். நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பல்வேறு வகை கைவிணைப் பொருட்கள், கலைப் பொருட்கள் மற்றும் நடனம் இசை போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் இவ்விழா நடப்பதால் அது ஏராளமானோரை கவர்ந்து இழுக்கிறது. நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு பின்னாள் தாஜ்மஹால் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும்.

ஆனால், தாஜ் மகோத்சவ் திருவிழாவில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக ராமர் தொடர்பான நடன நிகழ்ச்சியுடன் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு மாநில கவர்னர் ராம் நாயக் மற்றும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆகியோருக்கு விழா கமிட்டி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தக் கலாச்சார நிகழ்ச்சி ஷில்ப்கிராம் பகுதியில் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 27 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. 

புதிய நிகழ்ச்சியை நியாயப்படுத்தும் வகையில், பாஜக தலைவர் விஜய் சிவாரே கூறுகையில், “நான் எதிர்க்கட்சி தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இந்து இல்லையா? காலையில் எழுந்தவுடன் அவர்கள் ராமரின் பெயரினை உச்சரிப்பது இல்லையா? கடவுள் ராமரின் பெயரில் நிகழ்ச்சியை துவங்குவதை விட வேறு எது சிறப்பானதாக இருக்க முடியும்?” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் இந்தச் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதிப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்கள் ஏன் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள்? நாட்டின் கலாச்சாரமும் மதிப்பும் அரசியல் மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டவை என்பது புரியாதவர்கள்தான் இப்படி கேள்வி எழபுப்புவார்கள்” என்றார்.

சாமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் கான் ஷியாம் இந்த முயற்சியை விமர்சித்துள்ளார். அவர், “மதத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தை பார்க்கக் கூடாது. தாஜ்மஹால் உலக அளவில் பாரம்பரியமான இடம். உலகத்தின் பல்வேறு பகுதியில் மக்கள் வந்து பார்வையிடுகிறார்கள். பாஜகவிடம் மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை மறைக்கும் பொருட்டே இதுபோன்று மக்களை பிரிவினை படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

தாஜ் மஹோத்சவ் நிகழ்ச்சியில் தமக்கு எவ்வித பங்கும் இல்லை என்று உத்திரபிரதேச அரசு கூறியுள்ளது. மேலும், ‘முழுக்க முழுக்க நிகழ்ச்சி கமிட்டிதான் என்னென்ன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறது. உள்ளூர் அதிகாரிகள் தான் அந்த கமிட்டியில் உள்ளனர்’ என்று தமது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சர்ச்சை நடைபெற்று கொண்டிருக்கும் அதேவேளையில் பாஜக தலைவர்கள், தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டு தேஜோ மஹால் என்று இந்து கோயில் மட்டும் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், “தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில். இப்போது அது இருக்கும் இடத்தில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இந்துக் கடவுள்களின் சிலைகள், இருந்ததற்கான பல குறியீடுகள் தாஜ்மஹாலில் இருக்கின்றன. அதற்கு, 'தேஜோ மஹால்' என்று பெயர் இருந்தது. தாஜ் மற்றும் தேஜோ இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. தாஜ்மஹால் நம்முடைய கோயில். தற்போது அது கல்லறையாக உள்ளது. தாஜ்மஹால் உள்ளே உள்ள கல்லறை சில அதிகாரிகளால் முற்றிலும் இடித்து தள்ளும் காலம் வரும். நம்முடைய கோயில் மட்டுமே இருக்கும். நம்முடைய கோயிலின் தூண்கள் மட்டுமே நிற்கும்” என்று கூறியுள்ளார்.

தாஜ்மஹால் குறித்து பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம், “தாஜ்மஹால் துராகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றில் ஒரு பகுதியாக இருக்க முடியாது” என்று கூறியிருந்தார்.

ஒருபுறம் தாஜ்மஹாலை கொண்டாடும் நிகழ்ச்சியில் ராமர் பற்றிய நாடகம் சேர்க்கப்படுகிறது, மற்றொரு புறம் தாஜ்மஹாலில் உள்ள கல்லறையை இடித்து தள்ள வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறது. இந்தியாவை இந்துத்துவா கொள்கைகளின் அடிப்படையில் மாற்ற பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் இந்தப் புதிய முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டதுபோல், தாஜ்மஹாலும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. மதச்சார்பின்மை குறித்த விவாதங்களும் தற்போது மையத்திற்கு வந்துள்ளது.