சிறப்புக் களம்

`காலம் நேரம் பார்த்தா காற்றும் பூவும் காதல் செய்யும்!’ - 73 வயது மூதாட்டியின் காதல் கதை!

`காலம் நேரம் பார்த்தா காற்றும் பூவும் காதல் செய்யும்!’ - 73 வயது மூதாட்டியின் காதல் கதை!

நிவேதா ஜெகராஜா

நம் வாழ்வை அழகாக்குவதென்பது, எப்போதுமே மனிதர்களும், அவர்களின் உணர்ச்சிகளும்தான். அதுவும் முன்னறிமுகமில்லா ஒருவர் எதிர்கொள்ளும் மனநிறைவான வாழ்க்கை நமக்கு கொடுக்கும் ஆனந்தத்தை தவிர வேறு எதுவும் நம் அகத்தை அதிகமாக நிறைத்துவிட முடியாது. அப்படி இன்று பலரது நாளை அழகாக்கிய ஒருவர்தான், அமெரிக்காவை சேர்ந்த 73 வயதாகும் செவிலியர் கரோல்.

கரோல், கடந்த சில தினங்களாகவே இணையத்தில் பிரபலமாகி வருகின்றார். காரணம், அவருடைய ஒரு ட்விட்டர் பதிவு. கிட்டத்தட்ட 1.1. மில்லியன் லைக்குகளை தாண்டி, அன்பாலும் மகிழ்ச்சியாலும் உச்சி குளிர்ந்து வருகிறார் கரோல். அப்படி அவர் வாழ்வில் இந்த வாரம் என்னதான் நடந்தது? எதற்கு அவருக்கு இவ்வளவு வாழ்த்துகள் என்று யோசிக்கின்றீர்களா? சொல்கிறோம், தெரிந்துக்கொள்ளுங்கள்!

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸை சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்க கரோல் ஹெச்.மேக் என்ற செவிலியரொருவர், தன் வாழ்வின் 73 வருடங்களை கழித்த பிறகு தனக்கான உண்மையான காதலை கண்டிருப்பதாக இந்த காதலர் தினத்தன்று மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்திருத்திருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் கரோல் ,``வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. கிட்டத்தட்ட 40 வருட மணவாழ்க்கைக்குப் பின்னர் என்னுடைய 70-வது வயதில் நான் மீண்டும் சிங்கிளாவேன் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதேபோல, என்னுடைய 73-வது வயதில், அதுவும் உலகமே கொரோனா போன்றதொரு பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் இடைபட்ட காலத்தில், எனக்கான ஒரு உண்மையான காதலை நான் கண்டறிவேன் என நான் நினைக்கவேயில்லை. ஆனால் அது நடந்துவிட்டது” என கூறி, தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை உணர்த்தும் வகையில் மோதிரமொன்று அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது பதிவில் அவர், “இது மிகவும் ஆச்சர்யமளிக்கும் நிகழ்வுதான். உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். பலரும் என்னுடைய முதுமை, அதனால் எனக்கு உள்ள மனநிலை மாற்றங்கள், பொருளாதார நிலைப்பாடு, பாலியல் சார்ந்த விஷயங்கள் குறித்தெல்லாம் கணித்து பேசுவதை காணமுடிகிறது. என்னை பற்றி பிறர் யூகங்களில் பேசுவது, எனக்கு வேடிக்கையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதை வாசிக்கும் பலரும், `முதுமையில், தன் இணையரை தேர்ந்தெடுப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது’ என நினைக்கலாம். இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. முதலாவது, கரோலின் இந்த முதுமை காதல் பதிவுக்கு எதிர்ப்பே இல்லை. மாறாக, இவருடைய இந்த பதிவுக்கு சமூக ஊடகத்தில் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டாவது, இவருடைய கணவர் இறந்திருப்பாரோ என்று நினைத்து பலரும் அதற்கும் வேதனை தெரிவித்த நிலையில், ”என்மீதான உங்கள் கணிவிற்கு நன்றி. ஆனால் உண்மையில் நான் அவரை (கணவரை) இழக்கவில்லை. என்னோடு இருக்கும்போதே, அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அது தெரிந்ததால், அவரை நான் என் வாழ்விலிருந்து உதறித்தள்ளினேன். அதன்பின்னர், அவர் இருந்த பக்கம் நான் திரும்பிக்கூட பார்க்கவில்லை” என கெத்தாக சொல்லியிருக்கிறார் கரோல்.

பொதுவாக நம் ஊரில் `திருமணமாகிவிட்டதே - குழந்தைகள் இருக்கின்றார்களே - குழந்தைகள் வளர்ந்துவிட்டார்களே - வயதான பிறகு என்ன பிரிவு வேண்டியிருக்கு’ என பிரிவை தள்ளிப்போடுவதற்கு தான் காரணங்கள் இருக்கிறதே தவிர, `இந்த உறவால் நான் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக துன்பத்துக்கு உள்ளாகிறேன். இங்கு எனக்கான காதல் எனக்கு என் இணையரிடமிருந்து கிடைக்கவில்லை’ என துணிந்து சொல்வதற்கான ஒரு வார்த்தை கூட நம் மக்களுக்கு இல்லை. ஆணோ, பெண்ணோ `காதலால் நாங்கள் இணைந்திருக்கிறோம்’ என்று சொல்வது, இந்திய தம்பதிகளிடையே சற்று குறைவுதான்.

`Everyone in this world deserves Love' என்றொரு ஆங்கில சொலவடை உண்டு. ஆம், எல்லோருக்கும் காதலிக்கவும், காதலிக்கப்படுவதற்கும் எல்லா உரிமையும் இந்த பூமியில் உண்டு. திரைப்படமொன்றில் சொல்வதுபோல இணைஞ்சிருக்கும் காக்கா குருவி கிட்டகூட காதல் இருக்கும். நாமெல்லாம்,  பகுத்தறிந்து யோசிக்கும் வல்லமைகொண்ட மனிதர்கள். எனில், நமக்கு மட்டும் அது கிடையாதா என்ன? நிச்சயம் நமக்கும் உண்டு. அதை மீண்டுமொருமுறை கூறியிருக்கிறார் அமெரிக்காவின் கரோல்.

கரோல் மட்டுமல்ல, கரோல் பதிவிட்டுள்ள ட்வீட்டின் பின்னூட்டங்களை காண்கையில், அதில் சில முதியோர்கள் தங்களுக்கும் இப்படி நிகழ்ந்து - தாங்களும் முதுமையில் தங்கள் இணையரை கண்டதாக கூறுவதை காண்கையில், இந்த பூமி காதலால் உருவானதுதான் என்பதை நம்மால் உணரவும் முடிகிறது.

தனது இந்த காதலை `மேட்ச்’ என்ற அமெரிக்க டேட்டிங் செயலி மூலம் கண்டறிந்திருக்கிறார் கரோல். இதுதொடர்பாகவும் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ள அவர், “நான் என்னுடைய ப்ரொஃபைலை மேட்ச் வெப்சைட்டில் பகிர்ந்திருந்தேன். பல முன்னறிமுகமில்லா ரெஸ்பான்ஸ்கள் எனக்கு கிடைத்தது. அதில் என் வயதையொட்டிய ஒரு கல்லூரி பேராசிரியரும் ஒருவர். மிகவும் நல்லவராகவும், என்னை போலவே எண்ண ஓட்டங்களுடனும் அவர் இருந்தார். அப்படி எனக்கானவரை நான் தேர்ந்தெடுத்தேன். இந்த அதிர்ஷ்டம் எல்லாருக்கும் நடக்குமா என எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால், அது சற்று சிரமம்தான். எனக்கு என்னுடைய காதல் கிடைத்தது, முழுக்க முழுக்க அதிர்ஷ்டம்தான்” என்றுள்ளார்.

கரோல் மேக்கை இந்தளவுக்கு காதலில் மூழ்க செய்தவரின் பெயர், ரே-வாம்! `காதல் என்பது உணர்வுதானே.... அதிலெதற்கு வயது வேண்டியுள்ளது’ என்பதை உணர்த்தியுள்ள இந்த காதல் இணையர்கள், இன்று இணையத்தில் பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன? வாலிபம் தேய்ந்தப்பின்னும் கூச்சம் தான் என்ன! என பாடல் வரிகளை கரோல் மேக்கின் இந்த கதை நினைவூட்டலாம்.

அதுசரி... காலம் நேரம் பார்த்துக்கொண்டா காற்றும் பூவும் காதல் செய்யும்!!!