சிறப்புக் களம்

ஸ்ரீதேவி குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்

webteam

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் "ஸ்ரீ அம்மா". பின்னர் சினிமாவிற்காக அந்தப் பெயரை ஸ்ரீதேவி என மாற்றிக்கொண்டார். அய்யப்பன் யங்கேர் - ராஜேஸ்வரி யங்கேர் தம்பதியின் மகள் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் தந்தை வழக்கறிஞராக பணியாற்றிவர்.

1971-ஆம் ஆண்டில் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் பெற்றார்.

தமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவியை பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தது இயக்குநர் பாரதி ராஜா. 16 வயதினிலே திரைப்படம் இந்தியில் சோல்வா சாவான் திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டதன் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக கோலோச்சத் தொடங்கினார். இந்தியில் 60க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டிலும் கனவுக் கன்னியாக திகழ்ந்தார்.

ஸ்ரீதேவியின் தாய்மொழி தமிழ் என்பதால் இந்தியில் பேசுவதற்கு முதலில் சிரமமப்பட்டார். அவருக்காக நாஸ் என்ற அந்நாள் நடிகை குரல் கொடுத்தார். 1986-ம் ஆண்டு வெளியான ஆக்ரி ராஸ்தா என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்காக பிரபல பாலிவுட் நடிகை ரேகா அவருக்காக குரல் கொடுத்தார். அவர் இந்தியில் சொந்தக் குரலில் பேசி நடித்த படம் சாந்தினி.

நடனம், நகைச்சுவை என பன்முகம் கொண்ட ஸ்ரீதேவி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை ரீமேக் திரைப்படமான சத்மா -வில் ஒரு பாடலை பாடினார். இதே திரைப்படத்தில் இந்தியில் தனது சொந்த குரலில் முதல் முறையாக வசனம் பேசினார். இதைத் தொடர்ந்து சாந்தினி, கராஜ்னா, தெலுங்கு படமான க்ஷ்ணம் க்ஷ்ணம் ஆகிய படங்களிலும் ஸ்ரீதேவி பாடியுள்ளார்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்களில் நடிக்க அவர் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. நாகினா என்ற படத்திற்கு முதலில் ஜெயபிரதாவும், சாந்தினி திரைப்படத்திற்கு ரேகாவும் முதலில் அணுகப்பட்டனர். அவர்கள் மறுத்ததால் அந்த வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கு கிடைத்தன.

கடந்த 1991ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படம் லம்ஹே படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. பாலிவுட் நடிகர் அனுபம்கெருடன் நகைச்சுவை காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது ஸ்ரீதேவியின் தந்தை உயிரிழந்த செய்தி வந்தது. இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி உடனடியாக மீண்டும் படப்பிடிப்பிற்குத் திரும்பினார்.

தான் ஒப்புகொண்ட படங்களை ஒப்புக்கொண்ட நேரத்தில் முடித்துகொடுப்பதில் உறுதியாக இருந்தார் ஸ்ரீதேவி. சால்பாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நா ஜானே கஹா சே ஆயா என்ற பாடலின் படப்பிடிப்பின் போது 103 டிகிரி காய்ச்சல் இருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொண்ட ஸ்ரீதேவி தினசரி ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டிருந்தார். குறிப்பாக 250 முறை ஸ்கிப்பிங் செய்வது, வாரத்தில் இருமுறை நீச்சல் பயிற்சி போன்றவற்றை செய்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளாக பொறித்த உணவுகள் உண்பதை ஸ்ரீதேவி தவிர்த்து வந்தார்.

ஸ்ரீதேவி, தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது S - r - e - e - d ‌- e - v - i என்று எழுதுவார். கடைசி வரை இந்த எழுத்துக்களை மாற்றவில்லை. ஆனால் திரைப்படங்களில் S - r - i - d - e - v - i என பெயர் குறிப்பிடப்பட்டபோது அதை அவர் மாற்ற சொன்னதில்லை. பல்வேறு திரைப்படங்களில் வெற்றி பெற்று சாதனைப் பட்டியலில் குறிப்பிடும் போதும் Sreedevi என்றே குறிப்பிட்டார்.