சிறப்புக் களம்

காந்திய வழியில் தென்னாட்டு காந்தி: காமராஜரின் வாழ்க்கையில் மகாத்மாவின் பங்கு!

காந்திய வழியில் தென்னாட்டு காந்தி: காமராஜரின் வாழ்க்கையில் மகாத்மாவின் பங்கு!

கலிலுல்லா

காந்திக்கும், காமராஜருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. காந்திய வாழ்க்கையை ஏற்று தனது வாழ்விலும் செயல்படுத்தியவர் காமராஜர். அது குறித்து பார்ப்போம்.

காந்தியின் பிறந்த தினந்தன்று காமராஜர் இறந்தது எதிர்பாராமல் நிகழ்ந்ததாக இருந்தாலும் இதன் மூலம் வரலாறு அவர்களின் பிணைப்பை நமக்கு உணர்த்துகிறது. காந்தியக் கொள்கைளை தன் இறுதி மூச்சுவரை இறுக பிடித்து வாழ்ந்தவர் காமராஜர். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் 'காந்தியத்தின் கடைசித் தூண்களுள் ஒன்று சாய்ந்துவிட்டது' என காமராஜரின் மறைவை விவரிக்க முடியும். தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார்.

இவற்றையெல்லாம் வலியுறுத்திய காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, அவர் பிறந்தநாளில் மறைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டார். காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்ந்து வாழ்ந்ததால் அவர் 'தென்நாட்டு காந்தி' என்று அழைக்கப்பட்டார்.

16 வயதில் தந்தையை இழந்த காந்தி தாய் புத்திலிபாயின் அரவணைப்பில் வளர்கிறார். வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றபோதும் கூட தன் தாயாருக்கு அளித்த சத்தியத்தின்படி வாழ்நாள் முழுக்கத் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தார். காமராஜரும் தனது ஆறுவயதில், தந்தை குமாரசாமியை இழக்கிறார். தாயார் சிவகாமி அம்மையாரின் அன்பில் வளர்ந்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்த உப்பு சட்டத்தை எதிர்த்து 1930ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார் காந்தி. தமிழ்நாட்டில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடந்து சென்ற அந்த போராட்டத்தில் காமராஜரும் கலந்துகொண்டு கைதானார். 2வருட சிறை. காமராஜரின் முதல் சிறைவாசதத்துக்கும் பொதுவாழ்க்கைக்கும் தெரிந்தோ, தெரியாமலோ பிள்ளையார் சுழி போட்டவர் காந்தி.

அதிகப்படியான உணவு நோயைக்கொண்டுவரும் என்று நம்பிய காந்தி, வாரம் ஒருநாள் உண்ணா நோன்பினை கடைபிடித்து வந்தார். காமராஜரும் அப்படித்தான். உணவில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதவர். சைவ உணவுப்பிரியர். அப்போது சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கும் வகையில் காந்தி மதுரைக்கு வருகை புரிந்தார். அப்போதுதான் காமராஜர் காந்தி இடையேயான முதல் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காமராஜர் காங்கிரஸில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆயிருந்தன.

நேர்மையுடன், சத்திய நெறிகளை பிறழாமல், பொதுவாழ்க்கையில் ஒளிவு மறைவின்றி வாழ்ந்தவர் காந்தி. தனக்கென பெரிதாக எதையும் சேர்த்துக்கொள்ள விரும்பாதவர். காந்தியவாதியான காமராஜரும் அப்படித்தான். பொதுவாழ்வில் நேர்மையாகவும், எளிய வாழ்க்கையையும் சத்தியத்தை காத்தும் வாழ்ந்தவர் காமராஜர்.இருவருக்குமே பதவி ஆசை என்பது இருந்ததில்லை. எந்த பதவியையும் தேடிச்சென்றதுமில்லை. அதனால்தான் காமராஜர் தென்னாட்டு காந்தி என அழைக்கப்படுகிறார்.

“தன்னைத்தானே தூய்மைப் படுத்திக் கொள்பவனும், சுயமாகத் தியாகம் செய்யக் கூடியவனுமான இந்தியனே, தான் பிறந்த நாட்டுக்கு உற்ற துணையாக இருக்க முடியும்,” என்ற காந்தியத் தத்துவத்திற்கே உதாரணமாக இருந்தவர் காமராஜர்.