சிறப்புக் களம்

பிளாஸ்டிக் பைகளில் கூடு கட்டும் நீர்ப்பறவைகள்: உதகை ஏரியில் நிலவும் அவலம்

நிவேதா ஜெகராஜா

உதகை ஏரியில் படகுகள் இயக்கப்படாதால் அங்குள்ள நீர்ப்பறவைகள் யாவும் உபயோகப்படுத்தப்படாமல் கிடக்கும் படகு, இன்னபிற பொருட்களில் தங்களது குஞ்சுகளுடன் கூடுகட்டி வாழத் தொடங்கியுள்ளன. இதில் அதிர்ச்சி என்னவென்றால், கூடு கட்டுவதற்கு ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பைகளை பறவைகள் உபயோகின்றன. பறவை ஆர்வலர்கள் பலரும் இதற்கு வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம்  உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது யுரேஷியன் குட் என்ற பறவை அதிகளவு காணப்படுகின்றது. நாமக்கோழி (Eurasian Coot) என்பது, இதன் அறிவியல் பெயர். இந்த யுரேஷியன் குட் பறவையும், புலிக்க அட்ரா (Fulicatra) என்ற நீர்ப்பறவையும் அப்பகுதியில் அதிகம் உள்ளன. இந்தப் பறவைகள் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,  வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் காணப்படுகின்றன. இதற்கு உடல் மெல்லிய கருப்பு நிறத்திலும், தலை கருப்பு நிறத்திலும், மூக்கின் முன்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். 

தங்கள் கூடுகளை மரக்கிளைகளிலோ கட்டிடங்களிலோ இப்பறவைகள் கட்டாது என்றபோதிலும், இதன் கூடுகள் வலிமையான கட்டமைப்புடன்தான் எப்போதும் இருக்கும். அதனாலேயோ என்னவோ இப்பறவைகள் ஆழமற்ற நீர் பகுதியில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்தக் கூடுகளை கட்டமைக்க பெரும்பாலும் தாமரைத் தண்டுகள் மற்றும் இலைகள், தாவர தண்டுகள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை இப்பறவைகள் உபயோகிக்கும்.

பெரும்பாலான நேரத்தில் பெண் பறவைகளே கூடுகளை அழகாக கட்டும் என்பதால், ஆண் பறவைகள் இதற்கான பொருட்களை சேகரித்து வருவது இயல்பு. இந்த அழகான கூடுகளை கட்டிய பின்னர், அதில் முட்டைகள் இட்டு 21 நாள்கள் முதல் 24 நாள்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டது இப்பறவைகள்.

சுற்றுச்சூழல் மாற்றம், காலநிலை மாற்றம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் அதிகமாகச் சேர்வதால் இந்தப் பறவைகளின் கூடுகட்டும் முறைகளும் வாழ்வியல் முறைகளும் தற்போது மாறியுள்ளன. இத்தனை காலம் இலைகளையும், தண்டுகளையும் கூடு கட்டுவதற்கு பயன்படுத்திய பறவைகள் தற்போது பிளாஸ்டிக் பைகளையும், நார்களையும், பாலித்தீன் பேப்பர்களையும் பயன்படுத்தி கூடுகள் கட்ட தொடங்கியுள்ளன. இந்த பிளாஸ்டிக் பொருள்களை ஆண் பறவை சேகரித்து வருகின்றன. இப்பறவைகளில், மிகக் குறிப்பாக யுரேஷியன் குட் பறவை தனது கூடு கட்டும் முறையை முற்றிலுமாக பிளாஸ்டிக்கை நோக்கி மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கூடு கட்டுவது மட்டுமன்றி, இந்த பறவைகள் தன் குஞ்சுகளுக்கும் ‘பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு கூடு கட்டுவது எப்படி’ என்பதைக் கற்றுக் கொடுக்கின்றன. பறவைகள்  ஆர்வலர் மதிமாறன்  இதுபற்றி பேசுகையில், “நீர்ப் பறவைகள் தங்கள் கூடுகளை பிளாஸ்டிக்  பைகளைக்  கொண்டு  கட்டுகின்ற நிகழ்வு  தொடர்ந்தால் நீர்வாழ் பறவைகள் அழியும் அபாயம் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆறுகளிலும் நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் பைகளை போடுவதை குறைத்தால் மட்டுமே, இப்படியான சிக்கல்களையும் அது ஏற்படுத்தும் பின்விளைவுகளையும் நம்மால் தவிர்க்க முடியும். அரசு, மக்கள் மத்தியிலான இதன் விழிப்புணர்வை அதிகப்படுத்தவேண்டியது, உடனடியாக அவசியப்படுகிறது.

ஜான்சன்