சிறப்புக் களம்

வனத்தில் வலம் வந்தவரின் முழுப் பக்க விளம்பரம்: அரசியலுக்கு வருகிறாரா உத்தவ் மகன் தேஜஸ்?

நிவேதா ஜெகராஜா

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இளைய மகன் தேஜஸ் தாக்கரேவின் அரசியல் வருகை தொடர்பாக எழுந்துள்ள யூகங்கள், அம்மாநில அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் சனிக்கிழமை முதல் பக்கத்தில் வெளியான முழுப் பக்க விளம்பரம்தான் மகாராஷ்டிர அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இளைய மகன் தேஜஸ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விளம்பரத்தில் உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி ராஷ்மி மற்றும் மூத்த மகன் ஆதித்யா ஆகியோரின் சிறிய புகைப்படங்களுடன் தேஜஸின் புகைப்படம் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது.

வலதுபுறத்தில் சிவசேனா சின்னத்துடன் "தாக்கரே குடும்பத்தின் விவியன் ரிச்சர்ட்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கொடுத்தவர் உத்தவ் தாக்கரேவின் வலது கை என அழைக்கப்படும் சிவசேனா செயலாளர்களில் ஒருவரான மிலிந்த் நர்வேகர். இதே நர்வேகர் ட்விட்டரில் தேஜஸ் தாக்கரேவுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார். முன்னெப்போதும் இல்லாமல் இந்த முறை வெளியாகியுள்ள தேஜஸ் பிறந்தநாள் விளம்பரங்கள் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா அரசியலை கவனித்து வருபவர்களுக்கு சற்று ஆச்சர்யம் தந்திருக்கிறது. ஏனென்றால், சிவசேனா கட்சி தலைவர்கள் இதுவரை உத்தவ் மற்றும் ஆதித்யாவை மட்டுமே அரசியலில் தொடர்புபடுத்தி விளம்பரடுத்தி வந்திருக்கின்றனர்.

தேஜஸ் இதுவரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. 25 வயதே ஆன தேஜஸ் ஒரு வனவிலங்கு ஆர்வலர். பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், மும்பையின் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா மற்றும் ஆரே காலனியில்தான் தேஜஸ் நேரம் செலவிடுவது வழக்கம்

தேஜஸைப் பற்றி அவரின் நண்பர் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில், "மேற்குத்தொடர்ச்சி மலைகளை மற்றவர்களைவிட நன்கு அறிந்தவர் தேஜஸ். அடக்கமான மனிதரும்கூட. எங்கு சென்றாலும் தனது தாக்கரே குடும்ப செல்வாக்கை பயன்படுத்தவே மாட்டார். களத்தில் இருக்கும்போதெல்லாம், அவர் காட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பது, அங்குள்ள உள்ளூர் மக்களுடன் பழகுவது என எளிமையாக இருப்பார். காட்டு நிலத்தின் நிலைமையை கவனித்து பிரச்னைகளை வனத்துறை அதிகாரிகளிடம் எடுத்துரைப்பார். கடந்த ஆண்டு நண்டு, சிலந்தி, மீன் மற்றும் பாம்புகள் பற்றி அதிகம் அறியப்படாத ஆராய்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், லாப நோக்கமற்ற தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையை தேஜஸ் நிறுவினார்" என்று அவரின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்படி காடு, மலை, வனவிலங்குகள் என சுற்றித் திரிந்த தேஜஸை அரசியலில் தொடர்படுத்தி வெளியாகியுள்ள பத்திரிகை விளம்பரம் அவரின் அரசியல் என்ட்ரிக்கான அடித்தளமா என யோசிக்க வைக்கிறது. இந்த யோசனைக்கு விதைபோட்டது ஆரே காலனி விவகாரம். மும்பையில் கொலபா - பாந்திரா - சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரயில் பாதைக்கான மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முந்தைய பாஜக அரசு மும்பையின் இயற்கை எழில் கொஞ்சும் மரம், செடி, கொடிகள் நிறைந்த ஆரே காலனியை தேர்ந்தெடுத்தது.

சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆர்வலர்கள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்தனர். ஆனால் பட்நாவிஸ் தலைமையிலான அரசு ஆரே காலனியில் பணிமனை அமைக்கும் முடிவில் உறுதியாக இருந்தது. ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் திட்டம் தடைபட்டது. நாளடைவில் சிவசேனா ஆட்சிக் கட்டிலுக்கு வந்தபின் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆரே காலனி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணி மனை கன்ஜூர்மாக் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. உத்தவ் அரசின் இந்தக் கொள்கை முடிவுக்கு பின்னணியில் தேஜஸின் பங்கு மிகப் பெரியது என்கிறார்கள் அவருடன் நெருக்கமானவர்கள்.

ஆரே காலனி விவகாரம் பெரிதானபோது தினமும் அங்கு செல்லும் தேஜஸ் காரை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு, வனத்துக்குள் சென்று ஆராய்ச்சி செய்வாராம். பல மணி நேரங்களுக்கு பிறகே வனத்தை விட்டு வெளியேறுவார் என்கிறார்கள் அவரின் நண்பர்கள். அந்த அளவுக்கு அப்போது அந்தத் திட்டத்தில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார்.

இதனை வைத்துமட்டும் அவர் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளார் என்பதில்லை. சமீபகாலமாக தந்தை உத்தவ் தாக்கரே மற்றும் சகோதரன் ஆதித்யா உடன் அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார் தேஜஸ். 2019 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னெரில் நடந்த பேரணியில் தந்தையுடன் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் மேடையேறிய போது `சிவசேனாவின் புலி' என்று அக்கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

அதேகூட்டத்தில் அதே மேடையில் உத்தவ் தாக்கரே, தேஜஸின் அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியவர், " அவர் காட்டில் அலைந்து திரியும் நபர். எங்களிடம் காட்டு விலங்குகள் இல்லை என்பது அவருக்குத் தெரியும். அதேபோல் காட்டு விலங்குகள் மறுபுறம் (எதிர்க்கட்சிகளை குறிப்பிட்டு) இருக்கிறார்கள் என்பதும் அவருக்கு தெரியும்" என்று பேசினார். அந்தக் கூட்டத்திலிருந்து தேஜஸின் அரசியல் வருகை முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன எனலாம்.

அந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கங்காவ்லியில் நடந்த உத்தவ் தாக்கரேயின் பிரசாரக் கூட்டம், ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வு, அவரின் பிரசாரங்களில் அவ்வப்போது கலந்துகொள்வது என ஈடுபாடு காட்டி வருகிறார். இதனோடு சேர்த்து தற்போது முழுப்பக்க விளம்பரமும் சேர்ந்துகொள்ள, அவரின் அரசியல் வருகை உறுதி என்கிற ரீதியில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் சிவசேனா தொண்டர்கள்.

`மராட்டியம் மராட்டியருக்கே, இந்தியா இந்துக்களுக்கே' என்ற கொள்கையுடன் பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா கடந்த ஐந்து தசாப்தங்களாகத் தேர்தல் களம் கண்டுவருகிறது. ஆனால் கடந்த தேர்தலுக்கு முன்னதாக தாக்கரே குடும்பத்திலிருந்து எவரும் தேர்தல் களத்தை சந்தித்ததில்லை. அந்த விதிமுறையை தனது மூத்த மகன் ஆதித்யாவிற்காக உடைத்தார் உத்தவ் தாக்கரே. அதேபோல் அரசு பதவிகளிலும் இதுவரை பால்தாக்கரே தனது குடும்பத்தில் இருந்து யாரையும் அனுமதித்ததில்லை. அந்த வரலாற்றையும் முதல்வர் ஆகி மாற்றினார் உத்தவ். இந்தநிலையில்தான் தேஜஸின் அரசியல் என்ட்ரி யூகம் தற்போது மகாராஷ்ட்ரா அரசியலிலும் பேசுபொருளாகி இருக்கிறது.

- தகவல் உறுதுணை: The Print