சிறப்புக் களம்

பின்தொடர்வோரிடம் 'டிப்ஸ்' ஆக பணப் பரிசு பெறலாம்! - ட்விட்டரில் புதிய வசதி வர வாய்ப்பு

பின்தொடர்வோரிடம் 'டிப்ஸ்' ஆக பணப் பரிசு பெறலாம்! - ட்விட்டரில் புதிய வசதி வர வாய்ப்பு

webteam

ட்விட்டரில் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் பயனுள்ள டிவீட்டை வெளியிட்டு, அது உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு பிடித்திருந்தால், பயனாளிகள் உங்களுக்கு சிறு தொகையை 'டிப்ஸ்' ஆக பரிசளிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இதற்கான வசதி ட்விட்டரில் அறிமுகம் ஆக இருக்கிறது.

'அட அப்படியா?' என ஆர்வத்தோடு இந்தச் செய்தி தொடர்பான தகவல்களை மேற்கொண்டு படிப்பதற்கு முன், சின்ன எச்சரிக்கை: இந்த வசதியை ட்விட்டர் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளதே தவிர, உண்மையில் அறிமுகம் ஆகுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், ட்விட்டர் சேவையில் பல வித மாற்றங்களும், பல புதிய அம்சங்களும் அறிமுகம் ஆக இருப்பதால், இந்தத் தகவல் குறித்து தெரிந்துகொள்வது நல்லது.

விஷயம் இதுதான்... ட்விட்டரில் பயனாளிகள் சக பயனாளிகளை பின்தொடரும் வசதி இருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். ரி-ட்வீட் செய்வது, பதில் அளிப்பது என ட்விட்டரில் இன்னும் பலவற்றை செய்யலாம்.

இந்தப் பட்டியலில் புதிதாக, பயனாளிகள் தாங்கள் பின்தொடரும் கணக்குகளை நடத்துபவர்களுக்கு சிறு தொகையை பரிசளித்து ஊக்குவிக்கும் வசதியை ட்விட்டர் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட ட்வீட்டை பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதை ரி-ட்வீட் செய்வது போலவே, குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு பயனுள்ளது என தோன்றினால், அதற்காக அந்த ட்விட்டராளரை பாராட்ட விரும்பினால், சிறு தொகையை பரிசளிக்கலாம்.

இதற்கான வசதியை, ட்விட்டர் பயனாளிகளின் புரொஃபைல் (அறிமுக சித்திரம்) பகுதியில் வழங்கவுள்ளது. இந்தப் பக்கத்தில் உள்ள ரொக்கம் பட்டனை கிளிக் செய்தால், டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைகள் வாயிலாக பணம் அளிக்கலாம்.

ட்விட்டர் பயனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசதியை ட்விட்டர் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ஜேன் மன்சுங் வாங் (Jane Manchun Wong) என்னும் தொழில்நுட்ப ஆய்வாளர் - நல்லெண்ண ஹேக்கர், இந்த வசதியை முன்னதாகவே கண்டறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர், ஃபேஸ்புக், உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளின் பின்பக்கம் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து, அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் இந்நிறுவனங்கள் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள சேவையை அதன் கோடிங் குறிப்புகள் மூலம் மோப்பம் பிடித்து முன்கூட்டியே சொல்பவராக வாங் விளங்குகிறார். இப்படித்தான் ட்விட்டர் பணமளிக்கும் வசதியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வசதியை திட்டமிட்டபடி ட்விட்டர் அறிமுகம் செய்யுமா எனத் தெரியவில்லை. ஆனால், ட்விட்டர் சூப்பர் பாலோயர்ஸ் மற்றும் டிப்ஜார் ஆகிய புதிய வசதிகளையும் அறிமுகம் செய்ய உத்தேசித்திருப்பதாக கூறப்படுவதால் இந்த வசதியையும் எதிர்பார்க்கலாம்.

சூப்பர் பாலோயர் வசதி மூலம் ட்விட்டர், கட்டணம் செலுத்தும் பாலோயர்களை பெற்று அவர்களுக்கு பிரத்யேகமாக தகவல்களை அளிக்க வழி செய்ய திட்டமிட்டுள்ளது. டிப் ஜார் வசதி, பிரபலமான கிளப்ஹவுஸ் ஆடியோ செயலிக்கு போட்டியாக ட்விட்டர் அறிமுகம் செய்துள்ள ஸ்பேசஸ் செயலியில், பயனாளிகளுக்கு பணம் செலுத்த வழி செய்கிறது.

ஆக, ட்விட்டர் பயனாளிகளுக்கு தனது சேவையை மேலும் ஈர்ப்புடையதாக மாற்ற பல விதங்களில் யோசித்து வருவதால், ட்விட்டர் முலம் பயனாளிகள் பணம் அளிக்கும் வசதியும் அறிமுகம் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பி.கு: தொழில்நுட்ப அறிமுகங்களை முன்னதாகவே அறிமுகம் செய்யும் சூரப்புலி ஜேன் மான்சுங் வாங் பற்றி மேலும் அறிந்துகொள்ள > ஜேன் வாங்: ஃபேஸ்புக், இன்ஸ்டா புதிய வசதிகளை நிறுவனங்களுக்கு முந்தியே சொல்லும் சூரப்புலி!

- சைபர்சிம்மன்