சிறப்புக் களம்

ட்விட்டரில் முதல் "ட்விட்" போட்ட நாள் இன்று

ட்விட்டரில் முதல் "ட்விட்" போட்ட நாள் இன்று

webteam

முதல் ‘ட்விட்’ பிறந்த தினம் இன்று. இந்த நாளில் முதல் ட்விட் போடப்பட்ட போது இது மிகப் பெரிய சமூக வலைதளமாக செயல்படப்போகிறது என யாரும்  நம்பி இருக்க மாட்டார்கள். அதற்கு முன்பாக ‘ஆர்குட்’ ‘யாகூ மெசேஞ்சர்’ போன்ற சமூக வலைதளங்கள் செயல்பட்டன. அதன் வரவு நெட்டீசன்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை அள்ளி வழங்கியது. அடுத்ததாக வந்த ஃபேஸ்புக் அதை எல்லாம் அடித்து நொறுக்கியது. டவுன் டு எர்த் என்பார்களே அப்படிபட்ட ஒரு தளமாக ஃபேஸ்புக் விளங்கியது. அதை எல்லாம் தாண்டி சமூக அந்தஸ்த்து உள்ளவர்கள் கூட சமூக வலைத்தளமாக வந்ததுதான் ‘ட்விட்டர்’. அதன் பிறகுதான் மேல்தட்டு வர்க்கத்தினர் கூட தங்களின் நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியே வந்து கொட்டத் தொடங்கினர்.

அந்த அற்புதமான சமூக மாற்றத்தை உருவாக்கித் தந்தது ட்விட்டர்தான். 21 மார்ச், 2006 அன்றுதான் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரில் முதல் ட்விட் போடப்பட்டது. அந்த நாளைதான் இன்று பலரும் விமர்சையாக உலகம் கொண்டாடி வருகிறது. ட்விட்டர்; இன்று பலருக்கு உண்மையின் குரல். அதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் குரல். அதிகார வர்க்கத்தினர் தங்களின் செயல்பாட்டை அறிவிக்கும் தளம். உலகில் உள்ள பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு இடம் என ட்விட்டருக்கு இன்றைய உலகம் சொல்லப்போனால் அடிமையாகி உள்ளது. 

சான்ஃபிரன்சிக்கோ, கலிஃபோர்னியாவை மையமாக வைத்து செயல்படும் ட்விட்டர் தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசனின் ‘மய்யமாக’ மாறியது பெரும் வரலாறு. அதிமுக அரசுக்கு எதிராக பலரும் பல ஆயுதங்களை ஏந்திக் கொண்டு நிற்கும் காலத்தில் கமல், ட்விட்டர் அரசியலை தமிழ்நாட்டில் பரவலாக்கி உள்ளே புகுத்தினார். அதுவரை பலரும் ட்விட்டரில் கருத்து கூறி வந்தாலும் கமல்ஹாசனுக்குதான் ‘ட்விட்டர் அரசியல்’ செய்கிறார் என்ற அடைமொழி அளிக்கப்பட்டது. அதை விட்டு வெளியே வந்து கள அரசியலை அவர் செய்ய வேண்டும் என வாதம் முன் வைக்கப்பட்டது. ட்விட்டர் செயல்பாடு என்பதே ஏதோ குற்றச்செயல் என குறிப்பிடும் அளவுக்கு அதைக் காட்டி அவரது குறைக்கூற பலரும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப் பார்த்தனர்.

ட்விட்டரின் நிறுவனர்களான Jack Dorsey, Noah Glass, Biz Stone, Evan Williams போன்றவர்கள் முதன்முதலாக இதற்கு செயலாக்கம் கொடுக்க நினைத்த போது அந்தக் கனவுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வளர்ச்சி காத்திருக்கும் என அவர்கள் நம்ப எந்த நியாயமும் இருந்திருக்காது. இவர்களின் கனவுக்கு 2006 மார்ச் 21 முதல் விதை விழுந்தது. அந்தக் கீச்சொலி உலகில் ஒலிக்க அவர்கள் ஜூலை 2006 வரை காத்திருந்தனர். 2012ல் 140 மில்லியனாக இருந்த இதன் பயன்பாட்டாளர்கள், ஒருநாளைக்கு 340 மில்லியன் ட்விட்டகள் அள்ளித் தெளிக்க ஆரம்பித்ததாக உலகின் மிகப்பெரிய தகவல் களஞ்சியங்களில் ஒன்றான விக்கிபீடியா தெரிவிக்கிறது. மேலும் ஒரு நாளொன்றுக்கு 1.6 பில்லியன் தேடல்கள் மற்றும் வினவல்கள் மேற்கொள்ளப்படுவதாக அதுவே கூறுகிறது. 2013ல் உலகில் மக்கள் அதிகம் நாடும் 10 வலைத்தளங்களில் ஒன்றாக ட்விட்டர் இடம் பிடித்தது. 2016 மார்ச் நிலவரப்படி மாதம் தோறும் 310 மில்லியன் பயன்பாட்டாளர்கள் ட்விட்டரில் செய்பட்டு வருகின்றன என பல தகவல்களை தட்டுவிடுகிறான் விக்கிபீடியா. அப்படி பார்த்தால் ட்விட்டர் 11 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட மாபெரும் செயல்தளம். 2015ல் இதன் வருமானம் 2.21 பில்லியன் டாலர். 2016 கணக்கின் படி 3,800 பேர் இதில் பணி புரிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

வானொலி நிறுவனமான ஓடியோவின் அவை உறுப்பினர்களால் ஒருநாள் முழுவதும் நடத்தப்பட்ட குழு சந்திப்பில்தான் ட்விட்டருக்கான யோசனை பிறந்துள்ளது. அப்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவாரக யக்கு உடோர்சி, சிறுக்குழுக்களுடன் தங்களை தொடர்பில் வைத்துக் கொள்ள ஒரு குறுஞ்செய்தி சேவையை ஆரம்பிக்கலாம் என ஐடியாவை முன் வைத்துள்ளார். அவரது யோசனைபடி பல கட்டங்களை தாவி வந்தது அவர்களின் செயல். முதல் ட்விட்டர் மூலப் படிமம் ஓடியோ பணியார்களின் அலுவலக சேவைக்காக மட்டுமே பயன்பாடு கொண்டது. அதன் பின்னர்தான் 2006 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான முழு தளமாக தொடங்கியது.  அதன் பின் அக்டோபர் பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ், டோர்சே மற்றும் ஓடியோ உறுப்பினர்களை உள்ளடக்கிய வெளிப்படையான நிறுவனமாக உருக்கொண்டது. மேற்கொண்டு Odeo.com மற்றும் Twitter.com உள்ளிட்ட ஓடியோவின் சொத்துக்களை முதலீட்டாளர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்கள் வசம் இருந்து இந்நிறுவனம் நிதியை பெற்றது. ஏப்ரல் 2007க்கு பின் ட்விட்டர் தன்னை தனி நிறுவனமாக விரிவுப்படுத்திக் கொண்டது.

இன்று ட்விட்டர் சமூக செயல்பாடுகளில் ஒரு அங்கம். அது ஒரு செயலி அல்ல. செயல்பாடு. உலகில் உள்ள ஒவ்வொருவரும் அதனை தவிர்க்க முடியாத தளமாக வளர்த்தெடுத்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமா உச்சபட்ச நடிகர்கள், நடிகைகள் கூட அதனை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பல திரைபட்ட நிகழ்வுகள் ட்விட்டரில் ஆரம்பித்து ட்விட்டரிலேயே முடிந்து விடுகின்றன. பல செய்தி நிறுவனங்கள் தங்களின் இன்னொரு இயங்கு தளமாக ட்விட்டரை ஏற்றுக் கொண்டுள்ளனர். தொலைக்காட்சிகளில் பல செய்திகள் ட்விட்டரில் இருந்து எடுத்து படிக்கப்படுகின்றன. டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி அமைந்தக்கரையில் இருக்கும் ஆசாமி வரை அத்தனை பேருக்கும் பாகுபாடில்லாத சம அந்தஸ்தை தந்துள்ளது இந்தத் தளம். இந்தியாவில் ட்விட்டரில் யாரை அதிகம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறித்து பெரும் போட்டி நிலவுகிறது. மோடியை அதிகம் பேர் தொடர்கிறார்களா? ராகுலை அதிகம்பேர் தொடர்கிறார்களா? என இந்தியா அளவில் சர்ச்சை வைரல் ஆனது. ராகுலில் ட்விட்டரில் அதிகம் பேர் சீன ஆட்கள் இருப்பதாகவும் கூட பல செய்தியை பரப்பினர். ஆகவே அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை உண்மையானதுதானா எனும் கோணத்தில் ஒரு விவாதம் தலைத்தூக்கியது. ட்விட்டரில் போடப்படும் செய்தி வைரலானது போக, ட்விட்டரில் இருக்கும் எண்ணிக்கை சரியானதுதானா என சள்ளைப்பிடித்த சண்டைகள் கூட இந்தியாவில் தலைத்தூக்கியதை அதை நிறுவியவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கப் போவதில்லை. 

உலக அளவில் இன்னும் ட்விட்டர் அடிமட்டமாக உள்ள கடைசி மனிதன் வரை போய் சேரவில்லைதான். அதுவும் ஏழைநாடுகளின் அதன் முக்கியத்துவமும் பயன்பாடும் போய் சேரவில்லைதான். ஆனால் ட்விட்டர் உருவானவரை அதன் இயக்கம் பெரும் புரட்சியை உருவாக்கி உள்ளது. அதுதான் இபோதைக்கு தேவை.