சிறப்புக் களம்

பயணக் காப்பீடு: ஏன் தேவை? எவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்? - முழு வழிகாட்டல்

பயணக் காப்பீடு: ஏன் தேவை? எவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்? - முழு வழிகாட்டல்

JustinDurai

காப்பீடு என்பது நமக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து காக்க வந்த ஒரு அருமையான பொருளாதாரக் கருவி ஆகும். இந்தக் காப்பீடுகள் காலத்துக்கு ஏற்ப பல துறைகளை தன்னுள் இணைத்து தனித்துவமான திட்டங்களை மக்களுக்கு வழங்கி அவர்களை இக்கட்டான நேரங்களில் முழு அளவிலோ அல்லது ஓரளவிற்கோ இழப்புகளில் இருந்து காக்கிறது. கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இழப்புகளில் இருந்து வணிகர்களை காப்பதற்காக காப்பீடு முதன்முதலில் அறிமுகமானது. பின்னர் அது ஆயுள் காப்பீடு, இயந்திர ஊர்திக் காப்பீடு (Motor Vehicle Insurance), சொத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று விரிந்து பின்னர் பயணங்களுக்கான காப்பீடும் (Travel Insurance) அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது.

இந்த பயணக் காப்பீடு திட்டத்தால் பயன் என்ன? எவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்? பயணக் காப்பீடு ஏன் தேவை? என்பது குறித்து காப்பீட்டு ஆலோசகர் சங்கர் நீதிமாணிக்கம் நம்மிடம் விளக்கினார்.

''பயணக் காப்பீடு நமது பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றின் செலவை ஈடுசெய்ய வாங்கப்படுகிறது. இதில் அடிப்படையாக பயணத்தை ரத்து செய்தல், பொருட்கள் இழப்பு, திருட்டு, மருத்துவ சிக்கல் அல்லது விமானக் கடத்தல் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை உள்ளடக்கி இருக்கிறது. பயணக் காப்பீடுகள் எப்போதும் உங்கள் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. ஆனால் பயணங்களின் போது எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக இது ஒரு பாதுகாப்பு கருவியாக இருக்கிறது. இது நமது பயணங்களில் பாதுகாப்பு நண்பனாக இருக்கும்.

ஒரு பயணத்தின் பாதுகாப்பு தேவையை தீர்க்க அந்த பயணம் தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே பயணக் காப்பீட்டை வாங்க வேண்டும். இந்தப்  பயணக் காப்பீடு ஒருவரது பயணத்தை எந்தவொரு தடையும் இல்லாமல் எளிதாக்கவும் தேவையற்ற பதட்டத்தைக் குறைக்கும் ஒரு சுதந்திரத்தை நமக்கு கிடைக்கச் செய்கிறது. இன்றைய காலச்சூழலில் பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு பயணக் காப்பீட்டைக் கட்டாயமாக்கியுள்ளன.

பொதுவாக, பயணக் காப்பீடு பயணங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தனிப்பட்ட மனிதன் தன்னுடைய குறிப்பிட்ட ஒரு பயணத்திற்கும், ஒரு சிலர் தொழில் தொடர்பாக பல தடவைகள் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கலாம். அதற்கேற்றவாறு பயணக் காப்பீடு வாங்கலாம். பெரும்பாலான காப்பீடுகள் 24 மணி நேர அவசர உதவியை வழங்குகின்றன, குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணங்களில் இது முக்கியத் தேவையாய் இருக்கிறது.

பயணக் காப்பீட்டில் குறிப்பிட்ட காரணங்களுக்காக வாங்கும் வகையில் பல்வேறு திட்டங்களைக் காப்பீடு நிறுவங்கள் வழங்குகின்றன. அதில்

1) உள்நாட்டுப் பயணக் காப்பீடு (Domestic Travel Insurance): இந்தக் காப்பீடு ஒரே நாட்டின் எல்லைக்குள் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருட்கள் முழுமையான திருட்டு அல்லது மதிப்புமிக்க பொருட்கள் இழப்பு, மருத்துவ அவசர சிகிச்சை, விமானத் தாமதங்கள், விமானங்களை ரத்து செய்தல், மற்றும் நிரந்தர இயலாமை போன்றவைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

2) பன்னாட்டு பயணக் காப்பீடு (International Travel Insurance): இந்தக் காப்பீடு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் தேவைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு பயணக் காப்பீட்டில் வழங்குவது தவிர விமானக் கடத்தல், சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் போன்றவற்றின் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

3) ஒற்றை மற்றும் பல பயண காப்பீடு (Single and multi-trip travel insurance): ஒற்றை பயணக் காப்பீடு குறிப்பிட்ட ஒரே ஒரு பயணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இதில் உடல்நலம் மற்றும் பயணத்தை கைவிடல் காரணமாக கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதும் அடங்கும். பல பயணக் காப்பீடு என்பது வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் போன்றவர்கள் ஆண்டில் பலமுறை வெளிநாடுகளுக்குச் செல்லும் சூழலில் இருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட காப்பீடு ஆகும்.

4) பயண சுகாதார காப்பீடு (Medical Travel Insurance): இது நாம் செல்லும் பயணங்களின் போது மருத்துவக் காப்பீட்டின் நன்மைகளை வழங்குகிறது. இதன் வழியாக பயணங்களின் போது ஏற்படும் விபத்து, மருத்துவக் காரணங்களுக்கு மருத்துவ செலவுகளைப் பெற முடியும்.

5) மாணவர் பயணக் காப்பீடு (Student Travel Insurance): ஒரு மாணவர் வெளிநாட்டில் படிக்கும்போது அல்லது பணிபுரியும் போது ஏற்படும் பொருட்களின் இழப்பு, விபத்து போன்றவற்றிற்கு வழங்கும் காப்பீடு ஆகும்.

இது மட்டுமில்லாமல் குழு பயணக் காப்பீடு (Group travel insurance), நீண்ட காலம் தங்குவதற்கான காப்பீடு (long stays insurance), மூத்த குடிமக்கள் காப்பீடு (Senior citizen travel insurance), விமானக் காப்பீடு (flight insurance), கப்பல் பயணக் காப்பீடு (cruise travel insurance ) போன்றவை பயணக் காப்பீட்டின் மற்ற வகைகளாகும்.

பயணக் காப்பீட்டில் பொதுவாகத் தரப்படும் பாதுகாப்புகள்:

1) பொருட்கள், பயண ஆவணங்கள் இழப்பு. (Loss of baggage, travel papers)
2) பயணத்தில் தாமதம் அல்லது பயணத்தை தவற விடல் (delay or missing)
3) எதிர்பாராத காரணத்தால் பயணத்தை கைவிடல்  (cancel trip due to unexpected reason)
4) விமானம் தொடர்பான விபத்துக்கள்  (flight accident)
5) கடவுச்சீட்டு இழப்பு (loss of passport)
6) ஓட்டுநர் உரிமம் இழப்பு  (loss of driving insurance)
7) விபத்துகள் அல்லது நோய் போன்ற மருத்துவ அவசரநிலைகள் (Medical Emergency)
8) மூத்த குடிமக்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை அனுமதி (cashless Hospitalization)
9) நாட்டிற்கு வெளியே நடக்கும் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகள் (funeral cost, outside the country)
10) கடத்தல் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள் (Hijack)

பயணக் காப்பீட்டில் சில காரணங்களுக்கு இழப்பீடு கிடைக்காது. அவை:

1) பயணத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அதில் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது.
2) உள்நாட்டுப் போர் மற்றும் உள்ளூர் போராட்டம் காரணமாக விமானம் அல்லது தொடர்வண்டி தவறவிடல்.
3) 24 மணி நேரத்திற்கும் குறைவான பயணத் தாமதம்.
4) பொது இடத்தில் கடவுச்சீட்டு இழப்பு ஏற்படுவது.
5) உங்கள் பயணப்பெட்டியின் சாவிகள் இழப்பு.
6) மது அல்லது போதைப்பொருளுக்கு அடிமையாதல்.
7) தானாக ஏற்படுத்திய காயம்.

வெளிநாட்டிற்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் இந்த பயணக் காப்பீட்டை தங்களின் தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு எந்த நிறுவனம் சிறப்பான திட்டத்தை குறைந்த சந்தாவில் தருகிறது என்பதை ஒப்பிட்டு வாங்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் சிறப்புகள், காரணிகள் போன்றவை உங்களின் சந்தா தொகையை அதிகரிக்கவோ, குறைக்கவோ கூடும். தற்போது காப்பீடுகள் எல்லாமே எளிதாக வாங்கும் வகையில் இணைய வழியாகக் கிடைக்கிறது'' என்கிறார் அவர்.