தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர் என மொத்தம் 10,906 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, உடற்தகுதி, உடல்திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த ஜுலை 26-ம்தேதி தொடங்கியது.
எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்ற 2,204 ஆண்கள், 1,005 பெண்கள், 1 திருநங்கை என 3,210 பேருக்கான தகுதிதேர்வில் ஆண்களுக்கான தகுதித்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 1,334பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் இன்று தொடங்கியது. இதில் திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த ரிஹானா என்ற 19 வயதே ஆன திருநங்கை கலந்து கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து தேர்வாகியுள்ளார்.
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் ரிஹானா. திருநங்கை என தெரிந்தவுடன் பல்வேறு அவமானங்களை சந்தித்ததாகவும், தன்னுடைய தாய் தந்த ஆதரவினால் இந்த சமுதாயத்தில் நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என முயற்சி எடுத்ததாகவும், இன்று காவலராக போகிறோம் என்ற மகிழ்ச்சி பட்ட அவமானங்களை எல்லாம் பெருமையாக மாற்றியுள்ளதாகவும் புன்னகைக்கிறார்.
12ஆம் வகுப்பு முடித்த இவர் காவலர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வந்ததும் விண்ணப்பித்து, பல முயற்சிகள் எடுத்து தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 95% தேர்வு முழுமையடைந்த நிலையில் வருகின்ற 10-ம் தேதி நடைபெற உள்ள ஷாட் புட் மற்றும் நீளம் தாண்டுதலில் தடம் பதிக்க உள்ளார்.
தன் மகன் திருநங்கை என தெரிந்தவுடன் பல்வேறு இன்னல்களுக்கும், சமுதாயத்தின் அவமானங்களுக்கும் ஆளான தங்களுக்கு தற்போது தன் மகள் காவலராக உள்ளார் என்பது பெருமை அளிப்பதாக கண் கலங்குகிறார் ரிஹானாவின் தாய்.
ஆண், பெண் இருவருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என பல திருநங்கைகள் நிரூபித்துக் கொண்டிருக்கும் வேளையில் 19 வயதே ஆன ரிஹானாவின் இத்தகைய முயற்சியை அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
-பிருந்தா