சிறப்புக் களம்

7 மாதங்களாக தொடர்ந்த இழுபறி இணைப்பில் முடிந்தது

7 மாதங்களாக தொடர்ந்த இழுபறி இணைப்பில் முடிந்தது

webteam

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. பின்னர் இரு அணிகளையும் இணைக்க நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு வந்த இழுபறி தற்போது இணைப்பில் முடிந்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் தொடங்கிய பிரிவு முதல் தற்போது வரை அரங்கேறிய அதிரடித் திருப்பங்களை திரும்பிப்பார்க்கலாம்.  

டிசம்பர் 29, 2016
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக டிசம்பர் 29-ம் தேதி நியமிக்கப்பட்டார். 

பிப்ரவரி 5, 2017
கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை பிப்ரவரி 5-ம் தேதி ராஜினாமா செய்தார். 

பிப்ரவரி 7, 2017
சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்நிலையில் திடீர் திருப்பமாக, ஓபிஎஸ், ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிட தியானத்தில் அமர்ந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார்.

பிப்ரவரி 14, 2017
அடுத்த அதிரடியாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, 19 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 14-ம் தேதி உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துத் தீர்ப்பளித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவும் தகர்ந்தது. சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, அதிமுகவின் புதிய சட்டப்பேரவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார்.

பிப்ரவரி 15, 2017
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த டிடிவி.தினகரனின் மன்னிப்புக் கடிதம் சசிகலாவால் ஏற்கப்பட்டது. அன்றே  அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்றார். ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார். 

பிப்ரவரி 16, 2017
எடப்பாடி பழனிசாமி அளித்த அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி 31 அமைச்சர்களுடன் முதல்வராக பதவியேற்றார்.   

பிப்ரவரி 18, 2017
தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பலத்த அமளி துமளிகளுக்குப் பிறகு 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

கட்சிப் பெயர்... சின்னம் முடக்கம்:
சசிகலா, ஓபிஎஸ் என அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளும் கட்சியின் சின்னமான 'இரட்டை இலை' தங்களுக்குத்தான் என்று தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரின. கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு தனக்கே இருப்பதாக சசிகலா தரப்பு வாதிட்டது. கட்சியின் அடிப்படை விதிகளின்படி சசிகலா பொதுச் செயலாளராகப் பதவியேற்றதே செல்லாது; அவர் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர முடியாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறினர். தேர்தலுக்குக் குறைந்த நாட்களே இருந்ததால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தையே முடக்கியது. கட்சியின் பெயரைப் பயன்படுத்தவும் தடை விதித்தது. 
ரூ.100 கோடிக்கும் மேல் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி தேர்தல் ஆணையம், இடைத் தேர்தலையே ரத்து செய்தது.

இணைப்பு முயற்சிகளில் இழுபறி:
ஓபிஎஸ் தரப்பில் கட்சியை ஒருங்கிணைக்கும் வகையில், நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை அதிமுக ஒற்றுமையுடன் செயல்படும் என்று அறிவித்தார். பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் ஏப்ரல் 18-ம் தேதி, ஓ.பன்னீர்செல்வம், ‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கும் வரை இரு அணிகள் இணைப்பு குறித்து பேச முடியாது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட வேண்டும்’என திட்ட வட்டமாக தெரிவித்தார். இதனால், இரு அணிகள் இணைப்பில் சிக்கல் உருவானது. 

தினகரனை ஒதுக்கி புதிதாய் உருவான எடப்பாடி அணி
அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஏப்ரல் 18-ம் தேதி அவசர ஆலோசனை நடத்தினர். இன்னொரு பக்கம் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். திடீர் திருப்பமாக தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது. சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக  நிதியமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். தினகரன் மீதான எதிர்ப்பு வலுத்ததால் அவர், ''கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்த முடிவை எடுப்பேன். என்னை ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கி விட்டேன்'' என்று தெரிவித்து இருந்தார். 

மீண்டும் இணைப்பு முயற்சியும் முறிவும்:
அதிமுகவை இணைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், டெல்லி காவல்துறையினரால் ஏப்ரல் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இரு அணியினரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவில் தொடர்ந்து நடைபெற்று வந்த போட்டி போட்டிகள் மற்றும் அறிக்கைகளால் மோதல் முற்றி தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


இந்நிலையில், திருவேற்காட்டில் நடந்த அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் ஜூன் 11ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், ’அதிமுக அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுகிறது’என அறிவித்தார்.

மீண்டும் வந்தார் தினகரன்:
ஏப்ரல் 25 ம் தேதி கைதான டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜூன் 1 ம் தேதி ஜாமீன் வழங்கியது. இரண்டு மாதங்கள் அமைதி காத்த டிடிவி தினகரன், ஆகஸ்ட் 4-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ’இரு அணிகளும் இணையும் என இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. கட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறேன்’என அறிவித்தார். தமிழகம் முழுவதற்குமாக 60 புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதனால், அதிமுக மூன்று அணிகளாக பிளவுபட்டது. 

சிக்கல் நீங்கியது:
கடைசியாக ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அணியினர் வைத்த கோரிக்கைகளான ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம் அவரது நினைவிடம் ஆக்கப்படும் என அறிவித்தார். இதனால், இரு அணிகள் இணைப்பில் இருந்த சிக்கல் நீங்கியது. 
21 ஆகஸ்ட் 2017
பகல் 12 மணிக்கு இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்கள்.
இரு தரப்பினரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள் என்றும் அங்கு இணைப்பு அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும். ஓபிஎஸ் அணியில் இருந்து அமைச்சரவையில் சிலர் இடம் பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆளுநரும் தனது மற்ற பயணங்களை ஒத்தி வைத்து விட்டு அவசரமாக சென்னை வந்தார்.
ஆனால் கடைசி நேர சிக்கலாக ஓபிஎஸ் அணியினர் தலைமைக் கழகம் வர தயக்கம் காட்டினர். சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்பை எடப்பாடி அணி உறுதியாக எடுக்கவில்லை என்று அவர்கள் காரணம் சொன்னார்கள். பிறகு எடப்பாடி தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஒபிஎஸ் வீட்டிற்குச் சென்று பேசினர். அதன்பிறகு இரு அணியினரும் தலைமைக் கழகம் வந்தனர். ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் கைகுலுக்கிக் கொண்டனர். இணைப்பு அறிவிப்பை வெளியிட்டனர். ஜெயலலிதாவின் ஆன்மாதான் இணைத்தது என்றார் ஓபிஎஸ்.
பிறகு ஓபிஎஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.