தமிழகத்தில் திமுக எளிதாக வெற்றிபெறவேண்டிய சுமார் 50 தொகுதிகளில், அக்கட்சியை திக்கித்திணற வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. அதுபற்றிய அலசல்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததனால் எழும் இயல்பான ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் அதிமுகவின் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய ஜெயலலிதாவும் இல்லாததால் நிச்சயமாக 200 தொகுதிகளுக்கும் மேலாக எளிதாக வெல்லாம் என்று திமுக கணக்கு போட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பல கூட்டங்களில் திமுக நிச்சயமாக குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறிவந்தார். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றிலும் திமுக 180 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றிபெறும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளில் திமுக 159 தொகுதிகளிலும், அதிமுக 75 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
இத்தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் திக்கிதிணறி வெற்றிபெற்றது, மேலும் அதிமுக கூட்டணியிடம் 5 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் 15 தொகுதிகளை திமுக பறிகொடுத்தது. மேலும் 10 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் அதிமுகவிடம், திமுக 10 தொகுதிகளை இழந்துள்ளது, இந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 10 முதல் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் திமுகவுக்கு சென்றிருந்தால் நிச்சயமாக இன்னும் 25 முதல் 35 இடங்களை திமுக எளிதாக கைப்பற்றியிருக்கும்.
தமிழகத்தில் 35 தொகுதிகளில் 5 ஆயிரம் வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் திமுக, அதிமுக கூட்டணிகள் வெற்றி பெற்றுள்ளது, இதில் 9 தொகுதிகளில் வெறும் ஆயிரம் வாக்குகளில் வெற்றி, தோல்வி மாறியிருக்கிறது. தி நகரில் வெறும் 137 வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றிபெற்றிருக்கிறார். இதுபோல மொடக்குறிச்சியில் திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் தோற்றுள்ளார், தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் வெறும் 370 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வென்றுள்ளார், திமுகவின் முக்கிய தலைவரான துரை முருகன் 746 வாக்குகளில்தான் காட்பாடியில் வெற்றிபெற்றார், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் 393 வாக்குகளில் திமுகவிடம் தோல்வியடைந்தார். மேலும் மேட்டூர் பாமக வேட்பாளர் சதாசிவம் 656 வாக்குகள் , கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள், விருத்தாச்சலம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 862 வாக்குகள், நெய்வேலி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றனர். இந்த தொகுதிகள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வாக்குகள் பெற்றுள்ளனர்.
ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் அதிமுக-அமமுக பிரிவு காரணமாக எளிதாக அதிக இடங்களில் வெல்லும் திமுகவின் நிலையை, நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகள் சற்று அசைத்து பார்த்துள்ளது. மூன்றாவது அணிக்கான போட்டியில் இருந்த அமமுக தென்மாவட்டங்களில் சில தொகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் சென்னை, கோவை மற்றும் சில நகரங்களில் மட்டும் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக 10 முதல் 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளனர். கிராமங்கள், நகரங்கள் பேதமின்றி நாம் தமிழர் கட்சிக்கு சராசரியாக அனைத்து பகுதிகளிலும், அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகள் பதிவாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
இத்தேர்தலில் அமமுக பிரித்தவை பெரும்பாலும் அதிமுகவின் வாக்குகள், மக்கள் நீதி மய்யம் அதிமுக-திமுக இருவரின் வாக்குகளையும் பிரித்தது. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகள் மாற்றத்தை விரும்பிய வாக்குகள், இது பெரும்பாலும் திமுகவிற்கு விழுந்திருக்கவேண்டிய வாக்குகள். எனவேதான் திமுக எளிதாக வெல்ல வேண்டிய சுமார் 50 தொகுதிகளில், கடுமையான போட்டியை உருவாக்கியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. இந்த கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 29, 58,458 வாக்குகளை பெற்றிருக்கிறது, 36.3 சதவீத வாக்குகளை பெற்ற திமுக, 33.29 சதவீத வாக்குகளை பெற்ற அதிமுகவிற்கு அடுத்தபடியாக, 6.85 சதவீத வாக்குகளை பெற்று இந்த தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.
2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை பாதித்து, திமுகவை மைனாரிட்டியாக வெல்ல வைத்தது தேமுதிக. 2016 சட்டமன்ற தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் திமுக தோல்வியடைந்து, அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க காரணமானது மக்கள் நலக்கூட்டணி. அதுபோல இந்த முறை அதிமுக பல தொகுதிகளில் தோல்வியடையவும், திமுகவின் பெரும் எழுச்சி மட்டுப்படுத்தப்படவும் காரணமாக மாறியிருக்கிறது நாம் தமிழர் கட்சி.
திமுக 5 ஆயிரம் வாக்குகளுக்குள் வென்ற தொகுதிகள்- வாக்கு வித்தியாசம்- நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகள்
காங்கிரஸ் 5 ஆயிரம் வாக்குகளுக்குள் வென்ற தொகுதிகள்- வாக்கு வித்தியாசம்- நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகள் :
அதிமுக கூட்டணி 5 ஆயிரம் வாக்குகளுக்குள் வென்ற தொகுதிகள்- வாக்கு வித்தியாசம்- நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகள் :
- வீரமணி சுந்தர சோழன்