சிறப்புக் களம்

2017 திரைப்படங்கள்: எது பெஸ்ட்? எது ஒர்ஸ்ட்?

2017 திரைப்படங்கள்: எது பெஸ்ட்? எது ஒர்ஸ்ட்?

webteam

இந்த ஆண்டின் இறுதி பகுதியில் நாம் இருக்கிறோம். கடந்த வருட சினிமா உலகம் குறித்து சின்னதாக ஒரு ரிவைண்ட். யார் பெஸ்ட்? யார் ஒஸ்ட்? இப்படி ஒரு பட்டியல் பரபரப்பாக திரட்டப்படுவது நடைமுறை. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 200 படங்களுக்கு மேல் வெளி வருகின்றன. அதேபோல் வெளிவர முடியாமல் முடங்கிக் கிடக்கும் படங்களின் பட்டியல் என பார்த்தால் அதுவும் 200க்கு மேல் இருக்கும். வாரத்திற்கு அதிகபட்சமாக ஆறு படங்கள் வெளியாகின்றன. இதில் ட்ரெண்ட்டில் இருப்பது என்னவோ இரண்டு மூன்று படங்கள்தான். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்கும் படங்கள் என பார்த்தால் மிகமிக சொற்பம். அப்படி பார்த்தால் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரிய நட்சத்திரங்களின் செல்வாக்கு இல்லாத சில படங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த மாற்றம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனநிலை சற்று முன்னேறி இருப்பதைக் காட்டுகிறது. ஆக, 2017 ஆண்டின் சினிமா கிராஃப் எப்படி?

விஜய் 

மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய்தான் இந்தாண்டின் முன்னணி நாயகனாக நிற்கிறார். அவர் நடித்த பைரவா உட்பட சில படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. அவரின் மாஸ் முகமுடி இதனால் கொஞ்சம் கேள்விக்கு உள்ளானது உண்மை. ஆனால் அவர் சில படங்களாக தவறவிட்ட செல்வாக்கை இந்த ஆண்டு வெளியான ‘மெர்சல்’ மூலம் மெய்ப்பித்திருந்தார். சாதாரண தமிழ் சினிமா என்ற கதை அம்சத்தை கொண்டிருந்த ‘மெர்சல்’, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை விமர்சித்ததன் மூலம் அரசியல் சர்ச்சையை சந்தித்தது. முதலில் தணிக்கைச் சான்றிதழ் கொடுப்பதற்கு முன்பே படத்திற்கு யு/ஏ கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லி அறிவிக்க அதற்குள் நுழைந்தது விலங்குகள் நல வாரியம். ’முறையாக நாங்கள் சான்றளிக்காத போது அதற்கு எப்படி தணிக்கை தர முடியும்?’ என கேள்வி எழுப்பியது. இறுதியில் தணிக்கை கிடைத்தது உண்மையா? இல்லையா? என பல்வேறு செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. இந்த விவாதம் முடிந்து படம் திரைக்கும் வந்தது. படத்தை பார்த்துவிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை ‘மத்திய அரசுக்கு எதிராக வரும் வசனங்களை நீக்க ஏண்டும் ‘ என்றார். ஜிஎஸ்டி புரிதலே இல்லாமல் வசனம் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உடனே சர்ச்சை படைப்பு சுதந்திரம் என்ற புள்ளிக்குப் போனது. ஆரம்பத்தில் விலங்கு வதை என தொடங்கிய விவாதம் கடைசியில் அரசியல் சர்ச்சையாக உருமாற்றம் அடைந்தது. ராகுல் காந்தி இந்தப் பிரச்னையில் தலையிட்ட பிறகு ’மெர்சல்’ அரசியல் ட்ரெண்டில் ஒரு முக்கிய விவாதத்தை கிளப்பியது. இந்தியாவே ‘மெர்சல்’ பற்றி பேசிக் கொண்டிருந்த போதும் அது குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் மெளனம் காத்தார் விஜய். கமலை சந்தித்து வாழ்த்து பெற முடிந்த அவரால் ‘அரசியல் சர்ச்சைகள் பற்றி’ பதில் கொடுக்க முடியவில்லை. அப்படியே விவாதம் அரசியல் எல்லையைவிட்டு மதச் சாயத்தை தொட்டது. ஜோசப் விஜய் என்பது ஒரு பிரச்னையாக்கப்பட்டது. அதனை மிக தீவிரமாக எடுத்து சென்றார் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. இப்படி பல்வேறு சர்ச்சைகளை சம்பாதித்த ‘மெர்சல்’ வசூலில் 200 கோடியை திரட்டிவிட்டதாக பேசப்பட்டது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் வசூலில் முதல் தரப்பட்டியலில் தனது பெயரை பதித்தது. கதையளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றாலும் ‘மெர்சல்’ இந்தாண்டின் மிக முக்கியமான ட்ரெண்டிங் திரைப்படம். ட்விட்டர் உட்பட பல சமூக வலைதளங்களை வைரலாக்கிய ஹீரோ விஜய். அதன் மூலம் இந்த ஆண்டு தரப்பட்டியலில் விஜய் முதலிடம் பிடித்திருக்கிறார். 

விஜய்சேதுபதி

பெரிய கரிஷ்மாடிக் ஹீரோ இல்லை. ஆனால் இந்த வருடம்  கோடம்பாக்கத்தில் வசூல் நாயகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. அவர் நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ஜிஎஸ்டிக்கு தாக்குதலுக்குப் பிறகு வெளியானது. திரைக்கதை அளவிலும், சினிமா யுக்தி அளவிலும் ஃபர்பெக்ட் ஆக பொருந்தி வந்த இந்தத் திரைப்படம் பெரிய வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும், மாதவனும் போட்டி போட்டு நடித்திருந்தனர். சினிமா இண்டரஸ்ட்ரி வட்டாரத்தில் ‘விக்ரம் வேதா’ பெயர் சொல்லும் படம் மட்டுமல்ல; பெரிய அளவு சம்பாதித்து கொடுத்த படமும் ஆகும். அதே போல விஜய் சேதுபதியின் ‘கவண்’ நல்ல வசூலை கொடுத்தது. அடுத்தடுத்த வெற்றிகளால் மோஸ்ட் வாண்டெட் ஹீரோ பட்டியலில் அசைக்க முடியாமல் இருக்கும் கதாநாயகன் இவர்தான். இவருக்கு கதை சொல்ல வேண்டும் என காத்திருக்கும் இளம் இயக்குநர்களின் பட்டியல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. பட்டியல் படி இவர் வம்பு தும்பு இல்லாத வசூல் ஹீரோவாக இந்தாண்டில் முதல் இடத்தில் நிற்கிறார். கருப்பன், புரியாத புதிர் என இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோவாகவும் விஜய்சேதிபதி இருக்கிறார்.

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வரும் நயன்தாரா மறுபடியும் தன் மார்க்கெட் வேல்யூவை உயர்த்தி கொண்ட திரைப்படம் ‘அறம்’. தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களில் ஆழ்துளை கிணறுகளில் சிக்கிக் கொண்ட குழந்தைகளை மீட்க நடந்த பல உண்மை சம்பவங்களை தமிழகம் அனுபவ ரீதியாக கண்டுள்ளது. அதை அப்பட்டமான திரைக்கதை மூலம் எடுத்து காட்டியிருந்தார் இதன் இயக்குநர் கோபி நயினார். இதில் மாவட்ட ஆட்சியராக ‘மதிவதனி’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நயனின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. குறைந்த முதலீட்டில் ஒரே ஒரு மைய பாத்திரமான நயன்தாராவை வைத்து விறுவிறுப்பாக கதைய நகர்த்தி இருந்த விதம், மக்களின் அன்றாட பிரச்னை, அதிகார மோதல் என பச்சை உண்மைகளை பேசிய படம் என்பதை தாண்டி இந்த ஆண்டின் வசூல் சாதனைப் பட்டியலிலும் நயன்தாராவின் பெயர் உச்சத்திற்கு உயர்த்திய திரைப்படம் ‘அறம்’. சினிமா உலகத்தில் இருந்தாலும் சினிமா வாழ்க்கைக்கு வெளியே தன் வாழ்க்கையை வைத்து கொண்டிருக்கும் நயன்தாரா, முதன்முறையாக ஒவ்வொரு திரையரங்கமாக வலம் வந்த விசித்திரமும் ‘அறம்’ ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

சித்தார்த்

இருமொழி திரைப் படம் என்ற எந்த வாசனையும் தெரியாத ‘அவள்’ வெறும் பேய் படம் மட்டுமல்ல; இந்த ஆண்டின் வசூல் திரைப்படம். குறைந்த முதலீட்டில் உருவான திரைப்படம் என்பதும். அதைவிட அதிகமான வசூலை அள்ளிய படம் என்ற வகையிலும் தமிழ் சினிமாவில் அவள் தனித்து தெரிகிறது. இந்தத் திரைப்படத்தை திரையிட்ட எல்லா திரையங்கமும் பெரிய லாபத்தை சம்பாத்திருக்கின்றன. 65 லட்சம் பட்ஜெட் படம் என குறிப்பிடப்படும் இந்தப் படம் ஏழு கோடி ரூபாய் வரை லாபம் சம்பாத்திருக்கிறது. ஆள் அரவமற்ற சூழல், தனியான பேய் பங்களா, அடிக்கடி வரும் மிரட்டல் காட்சிகள் என வழக்கமான பேய்க்கதையாக ‘அவள்’ இருந்தாலும் அதன் நேர்த்தியான திரைமொழி, மிலிந்த் ராவின் தனித்துவமான இயக்கம் என இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் தரைமட்டமாக வசூலை உச்சத்திற்கு இந்த ஆண்டில் உயர்த்திய கொடுத்திருக்கிறது.

ஹிப் ஹாப் ஆதி

ஆல்பம் பாடகராக தன் இசை பயணத்தை தொடங்கியவர் ஹிப் ஹாப் ஆதி. ‘ஆம்பள’ மூலமாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார். அடுத்து நேராக ஹீரோதான் எனக் கனவு கண்டுக் கொண்டிருந்தவரை ‘மீசையை முறுக்கு’ மூலம் ஆதியை இயக்குநர் சுந்தர் சி ஹீரோவாக்கினார். ஆதியே திரைக்கதை, வசனம், இசை என சகல துறையையும் கவனித்துக் கொண்டு உருவாக்கிய இந்தப் படம் குறைந்த செலவில் மெகா வசூலை சம்பாத்திக் கொடுத்தது.  ’ஜல்லிக் கட்டு’ பிரச்னையில் ஆதி மும்முரமாக இருந்ததும் இறுதியில் அவர் சர்ச்சையில் சிக்கியது திரைப்படத்திற்கான மைலேஜ் ஆக அமைந்ததாக சில திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

கார்த்தி

கார்த்தி ஒரு மாஸ் ஹிட் பார்த்து சில வருடங்களாகிவிட்டது. அவரின் ‘காஷ்மோரா’வும், ‘காற்றி வெளியிடை’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரிய செல்வாக்கை ஏற்படுத்திரவில்லை. அந்தத் தாகத்தில் தவித்தவருக்கு பாலைவன நிலத்தில் ஒரு பேய் மழையாக கிடைத்த திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. வழிப்பறிக் கொல்லையர்களை மையமாக வைத்தும் தமிழகத்தோடு நேரடி தொடர்புடைய உண்மை சம்பவத்தை பின்புலமாகக் கொண்டும் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆகவே திரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை இப்படம் ஏற்படுத்தி கொடுத்து. படம் வெளியான முதல் வாரத்தில் பெரிய வரவேற்பே இல்லாமல் நகர்ந்த இந்தத் திரைப்படம் லேட் பிக் அப் மூலம் அடுத்த வாரங்களில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பட்டியலுக்கு முன்னேறியது. தரமான கதை, நிறைவான திரைக்கதை, கனக்கச்சிதமான நடிப்பு என பல தரப்பையும் சரிக்கட்டிய ’தீரன் அதிகாரம் ஒன்று’ நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டின் ஒரு மகத்தான வெற்றித்திரைப்படம்.

ராஜ்கிரண்

வாலிபக் காதல்களையே கண்டு அலுத்துப் போய் உட்கார்ந்திருந்த ரசிகர்களுக்கு ஓல்ட் ஏஜ் காதலை காட்சி படுத்தியது ‘பவர் பாண்டி’.  முதலில் ’பவர் பாண்டி’யாக இருந்த டைட்டில் பின்பு ‘ப.பாண்டி’யாக மாற்றம் பெற்றது. படத்தின் தலைப்பு மாறியதை போலவே  தனுஷின் தலையெழுத்தையும் இந்தத் திரைப்படம் மாற்றியது. ஆம்! அதுவரை நடிகராக வலம் வந்த தனுஷ் முதன்முறையாக இதன் முலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருந்தார். ராஜ்கிரணின் நடிப்பு, தனுஷின் இயக்கம் என இரண்டு புதிய களத்தை கொண்டிருந்த ‘ப.பாண்டி’ இந்த ஆண்டின்  வசூல் படப் பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அருண் விஜய்

மருத்துவ ஊழலை முன் வைத்த திரைப்படம் குற்றம் 23. அதிக ரசிகர் பலம் இல்லாத அருண் விஜய் மிக அற்புதமாக நடித்து கொடுத்த திரைப்படம். அவரது சினிமா வாழ்க்கையில் அதிக வசூலை குவித்து கொடுத்த திரைப்படம் என ‘குற்றம்23’க்கு பல முகங்கள் உண்டு. இந்தப் படத்தின் கனமான இயக்கம், த்ரில் ஆனா புலனாய்வு மிக வித்தியாசமான காதல் என களைக்கட்டியது இந்தத் திரைப்படம்.

ஆதி

ரஜினியும் சேர்ந்து ‘கோச்சடையா’னில் சம்பாதிக்க முடியாத புகழை நடிகர் ஆதி சம்பாதித்த திரைப்படம் மரகதநாணயம். 10 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு மகரதநாணயத்தை தேடிச்செல்கிறார் ஆதி. அந்த நாணயத்திற்காக ஏற்கெனவே 132 பேர் உயிரை விட்டுள்ளனர். அந்த த்ரிலிங் உடன் நகரும் மிக அழகான பேய் கதை படம். காதல், கவர்ச்சி, சண்டை, கோரமான முகம் என எந்த வழக்கமான அம்சங்களையும் எடுத்துக் கொள்ளாமல் மிக காமெடியாக கதையை நகர்த்திருந்தார் இயக்குநர் சரவன். வசூல் அளவிலும் கதை அளவிலும் அதிகம் கவனிக்கப்பட்ட திரைப்படம்.

அஜித்

‘விவேகம்’ தொடங்கியது முதலே ட்ரெண்டிங்தான். ட்ரெய்லர் வெளியான போது அது ஆறு லட்சம் லைக்ஸை அள்ளி சாதனை படைத்தது. ஆனால் இந்த சாதனையை ஒரே நாளில் ‘மெர்சல்’ முறியடித்தது. ’நெவர் எவர் கிவ் அப்’ என்ற அஜித்தின் வசனம் பெரிய வைரல் ஆனது. அதேபோல் அவர் பனிப்பாறையில் வெடி விபத்தில் சிக்கித் தவிக்கும் காட்சியை விவரிக்கும் புகைப்படங்கள் பெரிய அளவில் அவரது ரசிகர்களால் விரும்பப்பட்டன. அதேபோல அவர் காட்டுப் பகுதியில் சுற்றித்திருவதும், மரக்கிளையில் தண்டால் எடுப்பதும் என பல காட்சிகள் அஜித்தை மீண்டும் ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தி நிறுத்தின. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது இருந்தே அதே வேகம் எதிர்பார்ப்பு படத்தின் வெளியீட்டின் போது கிடைக்கவில்லை. சில பகுதிகளில் படம் எதிர்பார்த்த வசூலை அடையவில்லை. பெரிய விலைக்கு வியபாரம் பேசப்பட்டதால் விநியேகிஸ்தர்கள் அளவில் இலாபம் இல்லை என்பது இறுதி தீர்வாக உள்ளது. அஜித்திற்கு ட்ரெண்ட்டிங் ஏற்படுத்திக் கொடுத்த அளவில் ‘விவேகம்’ பெரிய சாதனை செய்தது. ஆனால் கதையம்சம் அளவிலும், வசூல் அளவிலும் படம் பெரிய எல்லைகளை எட்டவில்லை.

சுதிப் கிஷன்

அதிகம் அறிமுகம் இல்லாத ஹீரோ இவர். ஆனால் ‘மாநகரம்’ கதை மூலம் தமிழ் சினிமாவின் மையக் கதையாடலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டவர். ‘மாநகரம்’ இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட சினிமா. லோகேஷ் கனகராஜ் தனது வித்தியாசமான கதை நகர்த்தலால் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்த திரைப்படம். வசூல் அளவிலும் பேசப்பட்ட திரைப்படம். தாதா, காதல், கடத்தல் என வெவ்வேறு மூன்றுவிதமான கதைக் களத்தை மையப்படுத்தி பேசியிருந்த புதிய முறை பரவலாக பலரை ஈர்த்திருந்தது. ஸ்ரீ, சுதிப் கிஷன் நடிப்பு இணையாக இருந்தாலும் சுதிப்பின் அழுத்தம் அவரை சற்று அதிகமாகவே திரும்பிப் பார்க்க வைத்திருந்து.

விதார்த்

’மைனா’க்குப் பிறகு ஒரு ‘குற்றமே தண்டனை’. அதற்கு பிறகு என்ன என சோர்வில் இருந்த விதார்த்திற்கு இந்த ஆண்டு ‘ஒரு கிடாரியின் கருணை மனு’,’குரங்கு பொம்மை’ என அடுத்தடுத்து சில நல்ல படங்கள் அவரை உற்சாக்கத்தில் எழுந்து உட்கார வைத்துள்ளன. பொதுவாக இவரின் கதை தேர்ந்தெடுப்பு வழக்கமானதாக இருக்காது என்பது மீண்டும் இந்தாண்டில் உணர்த்தியிருக்கிறார் விதார்த். ஆகவே அவர் இந்தாண்டு பட்டியலில் பலமாக தெரிகிறார். பெரிய வசூல் பட்டிலலில் இந்தப் படங்கள் இல்லை என்றாலும் குறைந்த மூதலீட்டில் லாபம் என்ற அளவிலும் கதையம்சம் சிறப்பானதாக இந்தது என்ற அளவிலும் விதார்த் இந்தப் பட்டலுக்கு தகுதியாவராகிறார். விழித்திரு, கொடிவீரன் என அவரது பல படங்கள் வசூல் வாசல் பக்கம் கூட போகவில்லை. ஆனால் வனப்பான கதைக்களம் தேடும் ஹீரோ என்ற அளவில் இவர் முக்கியம் பெறுகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர்

டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக அடையாளம் காணப்படவர் எம்.எஸ்.பாஸ்கர். பிறகு டிவி நடிகராக அடையாளம் பெற்றார். அதன் பின் காமெடி நடிகர் ஆனார். அதற்கு அப்புறம் கேரக்டர்  ஆர்டிஸ்ட் ஆனார். இந்த எல்லா எல்லைகளையும் உடைத்து முழு நடிகனாக அவரை 8 தோட்டாக்கள் திரைப்படம் உயர்தியது. சாதாரண தகப்பன் தனது மருத்துவ செலவுக்காக படும் அவதியை இந்தத் திரைப்படம் மிக யதார்த்தமாக பதிய வைத்திருந்தது. அதில் எம்.எஸ்.பாஸ்கர் இளம் நடிகர்களுக்கு இணையாக அசத்திருந்தார். ‘எங்கப்பா இருந்தார் இவர் இத்தனை நாளா?’ என கண் கலங்க வைத்திருந்தது அவரது நடிப்பு. வசூல் அளவில் இந்தப் படம் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக பாஸ்கரை காட்சி படுத்தியதால் இந்தப் படம் மிக சிறப்பான படமாக பல விமர்சகர்களால் எடுத்துக்காட்டப்பட்டிருப்பது மிக முக்கியம்.  


(திரை நீளும்)