டூத்பேஸ்ட்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றியும், இயற்கை பற்பொடிகளே நலம் விளைவிக்கும் என்றும் விளக்குகிறார் பல்மருத்துவர் சம்பத்.
இதுபற்றி கூறும் பல்மருத்துவர் சம்பத் “ பிளீச்சிங், டிடர்ஜெண்ட், ஃபுளூரைடு, பதப்படுத்தும் பொருட்கள் போன்றவை கலந்துதான் பற்பசைகள் உருவாக்கப்படுகிறது. இவையனைத்துமே உடலுக்கு சேராத பொருட்கள்தான். தினமும் இரவில் எட்டுமணிநேரம் நாம் தூங்கும்போது உடலில் நீர்ச்சத்து மிகக்குறைந்து போயிருக்கும். அதுபோல உடலிலேயே அதிக அளவில் உறிஞ்சும் தன்மைக்கொண்ட உறுப்பு வாய்ப்பகுதியில் உள்ள மென்திசுக்கள்தான். ஏற்கெனவே உடலில் நீர்ச்சத்துக்குறைவாக உள்ள சூழலில் காலையில் பற்பசையை வாயில் வைத்தால் அந்த ரசாயனங்கள் அனைத்தும் உடலுக்குள் உடனடியாக உறிஞ்சப்படும். இப்போது அதிகமானோர் எலும்புத்தேய்மானத்தால் பாதிக்கப்பட காரணம் இதுதான்” என்கிறார்
இயற்கை பற்பொடிகளின் நலம் பற்றியும் விளக்குகிறார் இவர் “ இயற்கை பற்பொடிகள், வேப்பங்குச்சி, திரிபலா போன்றவற்றைக்கொண்டு பல்லை விளக்கவேண்டும். ஒட்டும்தன்மை இல்லாத உணவுகளை பயன்படுத்துவோமேயானால் பிரஸ்கூட தேவையில்லை, பற்பொடிகள் கொண்டு விரலாலேயே பல்லை விளக்கலாம். ஒருவேளை அல்லது இருவேளை பல்துலக்குதல் என்பது அவரவர் உண்ணும் உணவைப்பொறுத்தது. இருவேளை பல்துலக்கினால் பற்கள் தேய்ந்துவிடும் என்பது தவறான தகவல், பற்கள் இரண்டு இலட்சம் வருடங்களாக அழிந்துபோகாமல் இருப்பதை அகழாய்வுகளில் பார்க்கிறோம். ஆனால் இப்போது மாறியுள்ள நமது உணவு பழக்கத்தால் பற்கள் பலவீனமடைகின்றன என்பதும் உண்மை” என்கிறார்