Smoking
Smoking Smoking
சிறப்புக் களம்

பள்ளி மாணவர்கள் புகைப்பழக்கத்தை கைவிடுவது உயர்வு. ஆனால்... - புள்ளிவிவரமும் எச்சரிக்கையும்

Madhalai Aron

இந்தியாவில் புகைப்பழக்கத்துக்கு ஆளான பள்ளி மாணவர்கள், அந்தப் பழக்கத்தைக் கைவிடும் போக்கு என்பது கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளது. எனினும், புகையிலைப் பொருள்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதும், அதன் விளைவுகளும் மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. 

ஒருவர் ஒருமுறை புகைப்பிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் அவரின் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். அதேபோல், வாழ்நாள் முழுவதும் புகைப்பிடிப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

 புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் உலகளவில் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தகவல் கூறுகிறது. தற்போதைய காலகட்டத்தில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது. இதனால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பள்ளி செல்லும் குழந்தைகள் கூட புகையிலைப் பொருள்களால் பாதிக்கப்படுகின்றனர்.

 தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில், பெரியவர்களுக்கு மட்டுமே பீடி, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. வெறும் சட்டமாக மட்டுமில்லாமல், இதுபோன்ற சட்டங்கள் தீவிரமாக கடைப்பிடிக்கவும் படுகிறது. இந்தியாவிலும் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால், இங்கு சட்டத்தை பலரும் பின்பற்றுவதில்லை. ஆண் - பெண் வேறுபாடு இன்றி பள்ளி சிறுவர்கள், சிறுமிகள் வரை தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.

 சமீபத்தில், ஐஐபிஎஸ் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 4-வது குளோபல் இளைஞர் புகையிலை பயன்பாடு தொடர்பாக 13 முதல் 15 வயதுள்ள பள்ளி செல்லும் சிறுவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 987 பள்ளிகளும், 97,302 மாணவ, மாணவிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இதில் 80,772 பேர் 13-15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள்.

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் 13-15 வயதுடைய மாணவர்களில் ஐந்தில் ஒரு மாணவருக்கு புகையிலை பொருள்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என தெரியவந்துள்ளது. அதேபோல், இதுவரை புகையிலைப் பழக்கம் கொண்ட 10 மாணவர்களில் 2 பேர் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதைக் கைவிட முயற்சி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. புகைப்போருக்கு அருகே இருக்கும்போது (Second-hand Smoke) சுவாசித்ததன் மூலமாக 29.5 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுதலான தகவல் என்னவென்றால், 2009-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் 13-15 வயதுடைய பள்ளி மாணவர்களின் புகையிலைப் பழக்கமானது 42 சதவிகிதமாக குறைந்துள்ளது. நண்பர்கள் மூலமாகவே, அல்லது முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்தோ புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர்.  ஆரம்பத்தில் கல்லூரிகளில் மட்டுமே இருந்த இந்தப் பழக்கமானது, தற்போது பள்ளி மாணாக்கரிடமும் வந்து விட்டது.

பள்ளி மாணாக்கரைப் பொறுத்தவரை, மாணவர்களிடம் 9.6 சதவிகிதமும், மாணவிகளிடம் 7.4 சதவிகிதமும் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதில், 7.3 சதவிகிதம் பேர் சிகரெட்டும், 4.1 சதவிகிதம் பேர் மற்ற புகையிலைப் பொருள்களையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அதேபோல், 2.8 சதவிகிதம் பேர் இ-சிகரெட் பயன்படுத்துவதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

 மாநிலங்களின் அடிப்படையில் பார்த்தால், மிசோரம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் அதிக மாணவ, மாணவிகள் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துகின்றனர். இங்கு தலா 57.9 சதவிகிதம் பேர் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து நாகலாந்து (42.6%) மேகலாயா (33.6), சிக்கிம் (24.8) ஆகிய மாநிலங்கள் அதிகம் பேர் புகையிலை பயன்படுத்தும் மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. கடைசி ஐந்து இடங்களில் ஹிமாச்சலப் பிரதேசம் (1.1%), கர்நாடகா (1.2%), கோவா (2.1%), ஆந்திரப் பிரதேசம் (2.6%), சண்டிகர் (3%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த பட்டியலில் 24வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 4.8 சதவிகித பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

 பள்ளிக் குழந்தைகளுக்கு புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான மனநிலை எப்படி வருகிறது, அதற்கான வாய்ப்பு எப்படிக் கிடைக்கிறது என்பதைக் குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா கூறுகையில், "பொதுவாகவே, குழந்தைகள் பிறரைப் பார்த்து தான் புகைப்பழக்கத்தை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். சினிமாக்களில் 'புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு' எனப் போடுவது வீண். அதனைப் போட்டாலும், சினிமா, தொலைக்காட்சி சீரியல் போன்றவற்றில் வரும் காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடுகிறது.

 பெற்றோர்கள் குழந்தையின் முன்பாகவே புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றைச் செய்வதால், பெற்றோர் இல்லாத சமயத்திலேயோ அல்லது நண்பர்களுடன் இருக்கும்போதோ அதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கின்றனர். அதேபோல், கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த எண்ணம் அதிகளவில் வரும். பெற்றோர்களுக்குள் சண்டை ஏற்பட்டாளோ, பணம் இல்லை என்பதாலோ அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்பட்டு புகையிலைப் பொருள்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளி விடுகிறது.

சிறுவயது குழந்தைகளுக்கு மூளையானது வளர்ச்சியடைந்து வரும் காலகட்டம் என்பதால், சவால்களை அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஹார்மோன் மாற்றம், சிந்திக்கும் திறன் போன்றவையும் புகையிலையை முயற்சி செய்து பார்க்கலாம் என்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. ஒரு முறை முயற்சி செய்துதான் பார்க்கலாமே என்ற ஆர்வத்தினால் ஆரம்பித்து இறுதிவரை அதனை விட முடியாமல் அவதிப்படுகின்றனர். குழந்தைகள் புகையிலைப் பொருள்களை வாங்குவதற்கு பெற்றோர்கள் தான் பணம் கொடுத்து அனுப்புகின்றனர். பாக்கெட் மணி என்ற பெயரில் அதிகளவில் பணம் கொடுப்பதால், தவறான செயலுக்கு அந்த பணத்தை பயன்படுத்துகின்றனர் குழந்தைகள். 

பள்ளிகளுக்கு வெளியிலேயே எளிதாகப் புகையிலைப் பொருள்கள் கிடைத்துவிடுவதால் இதனைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால், குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதே இல்லை. இதனால் அவர்கள் செய்யும் தவற்றைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும். அவர்கள் மீது புகையிலைப் பொருள்களின் வாசனை வருகிறதா என்பதையும் சோதிக்க வேண்டும். அவர்களின் நண்பர்களை குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு கொடுப்பது போல், 5-ம் வகுப்பு மாணவர்களிலிருந்து புகை, மது பழக்கம் தீங்கானது குறித்து வகுப்புகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் புகையிலைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் இருப்பார்கள்" என்கிறார் மருத்துவர் பூங்கொடி பாலா. 

பள்ளிப் பருவத்தில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன் கூறுகையில், "குழந்தை பருவத்திலேயே புகைப்பிடிக்க ஆரம்பிப்பதால், அவர்களின் மற்ற கெட்ட பழக்கங்களும் இதிலிருந்தே ஆரம்பிக்கின்றன. பள்ளி பருவத்தில் வாரத்தில் ஒன்று என ஆரம்பித்து, நாளொன்றுக்கு ஒன்று, இரண்டு,  மூன்று என கல்லூரி வரும்போது தினமும் பத்து சிகரெட் புகைக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதனால், வேலைக்குச் செல்லும்போது நான்கைந்து பாக்கெட் என `செயின் ஸ்மோக்கர் (Chain Smoker) நிலைமைக்குக் கொண்டு சென்று விடுகிறது.

 பள்ளிப் பருவத்தில் பொழுதுபோக்காக ஆரம்பிப்பதே உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கிறது. புகையிலையில் கலந்துள்ள நிகோடின் அனைவருக்கும் தெரியும். ஆனால், கார்பன் மோனாக்சைடு, ஆர்சனிக் , ஹைட்ரஜன் சயனைடு, நாப்தலின், கந்தகம், ஈயம் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 4,000-க்கும் அதிகமான ரசாயனங்கள் அதில் கலந்துள்ளன. அதில்,200-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.

 புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் தலை முதல் கால் வரையில் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் பாதிப்பை அடைகின்றன. அதிலும் குறிப்பாக, சிகரெட் புகை நேரடியாக நுரையீரலுக்குச் செல்வதால், நுரையீரல் தொற்று ஏற்படும். அது, நிரந்தர நுரையீரல் செயலிழப்புக்குக் காரணமாகிவிடும். நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகை பிடிப்பதுதான். மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், கண், மூளை, முடி, மூக்கு, பல், வாய், தொண்டை, காது, நுரையீரல், இதயம், மார்பு, வயிறு, கல்லீரல், சிறுநீர்ப்பை, கைகள், தோல், எலும்புகள், முழங்கால், தசை, ரத்த நாளங்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். 

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை பள்ளிப்பருவத்தில் புகைப்பழக்கத்திற்கு அடிமையானால், ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் இருக்கும். ஹார்மோன் மாற்றங்கள் சீராக இருக்காது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படாது. குழந்தை பிறந்தாலும் ஒல்லியாகவும், இறந்தும் பிறக்க வாய்ப்பு உள்ளது. இது போன்ற எண்ணற்ற பிரச்னைகள் பெண்களுக்கும் உண்டு. எனவே, புகைப்பழக்கத்தை தொடாமல் இருப்பதே நல்லது.

 இதற்கு அடிமையானவர்களுக்கு புகைப்பிடிப்பதை தடுக்கும் சிகிச்சை (Smoking Cessation Clinic)இருக்கிறது. இங்கு புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கான வழிமுறைகளும், மருந்து மாத்திரைகளும் கொடுக்கப்படும். சூயிங்கம் போன்றும், சப்பி சாப்பிடும் வகையில் மாத்திரைகள், சாக்லெட்கள், வாய் மற்றும் மூக்கில் அடித்து கொள்ளும் வகையில் ஸ்ப்ரே என பல்வேறு வடிவங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனைகளைக் கேட்டுவந்தால், இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இதிலிருந்து மீண்டு வந்து விடலாம். புகைப்பழக்கத்தைப் பொறுத்தவரை உடனே நிறுத்தினால், எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை" என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.