சிறப்புக் களம்

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..?

Rasus

நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் நினைவுகள் இன்னும் நமது மனதை விட்டு நீங்காத நிலையில் இந்தாண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு உண்டா...? கிடையாதா..? என கடைசிவரை பதில் தெரியாமல் காத்திருந்தனர் கடந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். கடைசியாக நீட் தேர்வை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. தமிழக மாணவர்களும் எந்த தயாரிப்பும் இல்லாமல் தேர்வு எழுதி முடித்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவ படிக்க முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஏகப்பட்ட போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போதாக் குறைக்கு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட மையங்கள் என்னவோ ராஜஸ்தான், கேரளா என வெளிமாநிலங்கள்.

வரும் 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வை எதிர்கொள்ளப் போவதில் தமிழக கிராமப்புற மாணவர்களும் பலர் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மையங்கள் என்னவோ பிற மாநிலங்கள். இதனால் மாணவர்கள் என்ன செய்வதேன்று திக்குமுக்காடி உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பலருக்கும் கேரளாவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசிவரை தங்கள் மாநிலங்களில் மையங்கள் கிடைத்துவிடும் என காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம். இனி என்ன செய்வது..? தேர்வை எழுதியாகத்தான் வேண்டும். இது கோடை விடுமுறை காலம். ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் கேரளாவை நோக்கி பயணிப்பார்கள். அதற்கு அவர்கள் முன்னதாகவே ரயிலிலோ அல்லது பேருந்திலோ முன்பதிவு செய்து வைத்திருப்பார்கள். தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள முடிவால் தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்ல முறையான பேருந்து வசதியோ அல்லது ரயில் வசதியோ கிடைக்குமா என்பது சந்தேகம். ஓரளவு பொருளாதார வசதி இருப்பவர்கள் வேண்டுமானால் பேருந்தில் கூடுதல் தொகையை கொடுத்தாவது தேர்வு மையத்திற்கு சென்றுவிடுவார்கள்.

ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு எப்படி..? படிப்பறிவில்லாத பெற்றோராக இருக்கலாம். பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் கூட மாணவர்கள் படிக்கலாம். மதிய உணவை நம்பியே பள்ளிக்கு சென்ற மாணவராக இருக்கலாம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். தங்கள் திறமையால் அந்த கனவு நிறைவேறும் என்றும்  நம்பியிருப்பார்கள். அதற்காக அவர்கள் இரவு பகல் பாராமல் படித்திருப்பார்கள். தமிழக அரசு வழங்கிய நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் பயிற்சியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இப்போது தேர்வெழுத மாநிலம் விட்டு மாநிலம் செல்வது எப்படி சாத்தியம்..? மாணவிகளாக இருந்தால் அவர்களால் தனியாகவும் செல்ல முடியாது. பெற்றோர் துணை வேண்டும். அறக்கபறக்க டிக்கெட் எடுத்து சென்றாலும் புது இடத்தில் தேர்வு மையத்தை கண்டுபிடிப்பது என்னவோ மிகவும் கடினமான விஷயம். தேர்வுகள் காலை 8.30 மணிக்கே தொடங்கிவிடுவதால் முந்தைய நாளே அவர்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.  அங்கே தங்குவதற்கு அறைகள் புக் செய்ய வேண்டும். எப்படி பார்த்தாலும் ஒரு தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பவேண்டும் என்றால் குறைந்தது ரூ.10,000 காலியாகிவிடும். தந்தை இல்லாத மகள். வீட்டு வேலை செய்து வரும் தாயின் மகன் என எல்லோருக்கும் தான் மருத்துவர் கனவு இருக்கும். ஒரு தேர்வை எழுதவே ரூபாய் 10,000 என்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்..?

234 சட்டமன்ற உறுப்பினர்களையும், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட மிகப்பெரிய மாநிலம் தான் தமிழகம். கல்வி வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது. அப்படிப்பட்ட தமிழகத்தில், தமிழக மாணவர்களுக்கே மையங்களை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றால் இது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தவிர வேறென்னவாக இருக்க முடியும்..? தேர்வு நேரம் நெருங்கிவிட்டால் இனி மையங்களை மாற்ற முடியாது என காரணம் சொல்கிறது சிபிஎஸ்இ. ஒரு மையத்தை கூட மாணர்களுக்கு மாற்றித் தர இயலாத சிபிஎஸ்இ நடத்தும் தேர்வுகள் எப்படிப்பட்ட தேர்வுகளாக இருக்கும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. நீங்கள் மலை உச்சியில் கொண்டு மையங்களை போடலாம். கடல் கடந்துகூட மையங்களை போடலாம். ஆனால் எங்கு சென்றாலும் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.