மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரைக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டுமென தமிழக அமைச்சரவை இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. 1967ல் அண்ணாதுரை இறந்த பிறகு, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை பல முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. பல முறை மத்திய அரசிலும் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அப்போதும் கோரவில்லை. அதேபோலத்தான் திராவிடக் கட்சிகளின் பிதாமகரான பெரியாருக்கும் பாரத் ரத்னா விருது வேண்டுமென கலைஞர் கோரவில்லை. ஏன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்கூட இந்த இருவருக்கும் பாரத் ரத்னா விருதைக் கோரவில்லை. காரணம், பெரியார், அண்ணா ஆகிய இருவருமே இந்தியா அரசு கட்டமைக்கும் தேசம் என்ற கருத்துருவாக்கத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள். ஆகவே அவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் விருதைப் பெறுவதில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஆர்வம் காட்டவில்லை.
1962ல் நாடாளுமன்றத்திற்குச் சென்ற அண்ணா, தன்னுடைய முதல் பேச்சிலேயே தான் வேறு தேசத்தைச் சேர்ந்தவன் என்று சுட்டிக்காட்டினார். "I claim, Sir, to come from a country, a part of India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian, That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati… I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self determination... I would verymuch like to be with you as one nation. But wish is something and facts are different" (ஐயா, நான் தற்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும், ஒரு நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். ஆனால், முற்றிலும் வேறுபட்டவர்கள். ஆனால், அதற்காகப் பகையாளிகள் அல்ல. நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன், என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப் படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராதிக்கோ எதிரானவனல்ல. நான் என்னை திராவிட இனத்தவன் என்று சொல்லிக்கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான - தெளிவான - மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சில அம்சங்கள் இருக்கின்றன. அதனால்தான் எங்களுக்கு சுய நிர்ணய உரிமையைக் கோருகிறோம்..... உங்களோடு ஒரு நாடாக இருக்கக்கூட ஆசைதான். ஆனால், ஆசை வேறு.. உண்மைகள் வேறு.) -
1.5.1962ல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அண்ணா பேசியது இது. இப்படிப்பட்ட சிந்தனைகளைக் கொண்ட மனிதருக்கு பாரத் ரத்னா விருதைக் கோருவது நிச்சயம் பொருத்தமானதல்ல. பெரியாருக்கும் இதே காரணங்கள் பொருந்தும். பாரத ரத்னா விருது அளிக்கப்பட ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 41 பேர் அந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். அதில் 7 பேர் தமிழர்கள். முதல் முறையாக மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டபோது, அதில் ராஜாஜி, சி.வி. ராமன் என இரண்டு தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மீதமிருந்த 60 ஆண்டுகளில் காமராஜர், சி. சுப்பிரமணியம், ஏபிஜே அப்துல் கலாம், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.ஜி. ராமச்சந்திரன் என ஐந்து பேருக்கு அளிக்கப்பட்டது. இதில் எதுவும் தி.மு.க. அரசின் பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்டவையல்ல என்பது தெளிவு. இந்த விருதை தி.மு.க. பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது போலத்தான் தெரிகிறது. ஆனால், 2014ல் பாரத் ரத்னா குறித்த தி.மு.கவின் பார்வை மாறியிருக்கிறது. முதல் முறையாக, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்குக் கடிதம் எழுதினார் (பார்க்க இணைப்பு). அந்த ஆண்டின் இறுதியில் பாரத ரத்னா விருது வாஜ்பாயிக்கு அறிவிக்கப்பட்டபோது, அறிக்கை வெளியிட்ட கருணாநிதி அண்ணாவுக்கு மட்டுமல்லாமல் 'அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை பிரதமர் அவர்களையும், குடியரசு தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று அறிக்கை வெளியிட்டார்.
இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் திடீரென பெரியாருக்கும் அண்ணாவுக்கும் தி.மு.க. பாரத ரத்னாவைக் கோரியது ஒரு வியப்பளிக்கும் சமாச்சாரம்தான். 1992ல் சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டபோது, விருதைவிட உயர்ந்த மனிதருக்கு அந்த விருதை அளிக்கக்கூடாது என கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கே தொடரப்பட்டது. பிறகு, அந்த அறிவிப்பே திரும்பப் பெறப்பட்டது. அதே நிலைப்பாட்டைத்தான் தி.மு.க. தொடர்ந்திருக்க வேண்டும். பெரியார் காலகட்டத்தில் அரசியலில் இருந்த ராஜாஜி முதல் பாரத் ரத்னா விருதை பெற்றார். பெரியார் கடைசிவரை பரிசீலிக்கக்கூடப் படவில்லை. அண்ணாவின் காலகட்டத்தில் அரசியலில் இருந்த காமராஜர் விருதைப் பெற்றார். அண்ணா பெயர் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர். - கருணாநிதியை ஒப்பிடுவதெல்லாம் வேண்டாத வேலை. சுபாஷ் சந்திர போஸுக்கு விருதை அளிக்கக்கூடாது என்பதற்குக் கூறிய காரணங்கள், மேற்கூறிய மூவருக்கும் பொருந்தும். எம்.ஜி.ஆருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மதன் மோகன் மாளவியாவுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு விருதை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கோருவதில் என்ன தர்க்கம் இருக்க முடியும்?