ஜல்லிக்கட்டு பிரச்னையில் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை பரிசீலனை செய்து உடனடியாக ஜல்லிக்கட்டு தடை நீங்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவைக் கண்டுகொள்ளவில்லை என்பதோடு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த மசோதாவை அவருக்கு அனுப்பவே இல்லையாம் மத்திய அரசு. இதை நம்முடைய அமைச்சர் விஜயபாஸ்கரே சொல்கிறார். ஒரு மாநில அரசு அதன் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா எந்த முடிவும் தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு பிரச்னையில் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமசோதாவை இதே மத்திய அரசு, மூன்றே நாட்களில் அனைத்து துறைகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றிக் காட்டியது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழக இளைஞர்கள் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் இறங்கினர். ஒரு வாரம் நடந்த போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் ஆதரவளித்தனர். இதனால் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை 19.01.2017 அன்று சந்தித்து பேசினார். இதையடுத்து மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ல் திருத்தம் செய்து தமிழக ஆளுநரால் 21.01.2017 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி ஜல்லிக்கட்டு என்பது மிருக வதையில் வராது. இதற்கான சட்டத்திருத்த முன்வடிவுக்கு மத்திய அரசு மூன்றே நாட்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து, அவசரச் சட்டம் 6 மாதங்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்று கிளம்பிய சர்ச்சையை சமாளிக்க, தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கூட்டப்பட்டது. அன்றைய தினமே மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவை சட்டமாக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. இதையும் முன்புபோல் அதேவேகத்தில் மத்திய அரசு பரிசீலனை செய்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்ட மசோதா, சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை, கலாச்சாரத்துறை ஆகிய மூன்று அமைச்சகங்களுக்கும் கருத்து கேட்டு அனுப்பப்பட்டது. இவற்றில் இருந்தும் உடனடியாக சரிபார்த்து அனுப்பப்படவே, அதை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று 30.01.2017 அன்று தமிழக அரசுக்கு அனுப்பியது. இதன்பிறகு தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் அது நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் இனி எந்த தடையும் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒரு சட்ட மசோதா தான் நீட் தேர்வு விவகாரத்திலும் ஒருமனதாக இயற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோதே நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ். தலைமையிலான அரசு, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டமசோதா ஒன்றை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதா, குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு வந்து சேரவில்லை என்று கூறப்பட்டது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசு தலைவர் நிராகரிக்கும்வரை காலாவதியாகாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என வெளிப்படையான குற்றச்சாட்டை மத்திய அரசின் மீது வைத்துள்ளார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.