திருப்பத்தூர் ஆட்சியர் - மாணவி மெய்விழி
திருப்பத்தூர் ஆட்சியர் - மாணவி மெய்விழி  Twitter
சிறப்புக் களம்

சொன்ன நொடியிலேயே மாவட்ட ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்! ஆனந்தக் கண்ணீர்விட்ட 10ம் வகுப்பு மாணவி

Jayashree A

திருப்பத்தூரில் நாடோடி பழங்குடியினர் சான்றிதழ் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் தானும் படித்து மாவட்ட ஆட்சியராக வேண்டும் என விரும்புவதாக தெரிவித்த பத்தாம் வகுப்பு மாணவியை, தனது இருக்கையில் அமர வைத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். இதில் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அம்மாணவி.

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் பகுதிக்குட்பட்ட இதயம் நகரை சேர்ந்த 53 நாடோடி பழங்குடியினர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து நாடோடி பழங்குடியினர் நன்றி தெரிவித்தனர்.

அப்பொழுது அங்கு வந்திருந்த பத்தாம் வகுப்பு மாணவி மெய்விழி என்பவர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் தானும் படித்து மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையில் இருந்து எழுந்து மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்தார். இதில் நெகிழ்ந்து போன மாணவி அங்கேயே கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து நாடோடி பழங்குடியினர் மக்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர், அம்மக்களிடம் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.