சிறப்புக் களம்

ஆங்கிலேயருக்கு அடிபணியாத தீரன்... திப்பு சுல்தானின் வீர வரலாறு!

JustinDurai
ஒரு சாதாரண வீரரராக வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னராக உயர்ந்த ஹைதர் அலியின் மகன்தான் திப்பு சுல்தான். தந்தையை போலவே ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து, கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை மாவீரத்துடன் எதிர்த்து போராடினார். அவரது பிறந்த தினத்தையொட்டிய சிறப்புப் பகிர்வு இது.
 
மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக அவதரித்தார் திப்பு சுல்தான். தொடக்கக் காலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்தார். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர் வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
 
1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்பு சுல்தான், உலகத் தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார். சொந்த தேதிமுறை பின்பற்றினார். போர்க்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது. அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன.
 
'யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்' என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான்.
 
திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார்.
 
போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது.
 
இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்பு சுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.
 
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான் என்றால் அது மிகையாகது.