அன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருந்த ஒரே பொழுதுபோக்கு தெருக்கூத்து அல்லது நாடகங்கள். அந்தக் காலம் மலையேறி சினிமா
திரைப்படங்கள் அனைவரையும் கவரத் தொடங்கியன. ஆனால் கேமராவை பார்த்தால் ‘அய்யய்யோ’ என்று அலறியடித்து ஓடியவர்களும் உண்டு. ஒரு
கட்டத்திற்கு மேல் சினிமாவில் நடித்தால் என்ன என்ற ஆசை துளிர்விட ஆரம்பித்த போது ஊரில் உள்ள சொத்துகளை விற்றுவிட்டு பட்டணத்திற்கு பஸ்
ஏறியவர்களும் இருந்தார்கள்.
ஆனால் பெரும்பாலானோரின் நடிப்பு ஆசை நிறைவேறாமலே போனது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சினிமா உலகம் மிகப்பெரியது.
அங்கு திறமையிருந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஒருவகை. திறமையிருந்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பது மற்றொரு வகை. இதுவே
சினிமாவை பொறுத்தவரை நிதர்சன உண்மை.
அந்த வகையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும், நடிக்க ஆசையிருந்தும் வெட்கத்தால் ஒதுங்கியவர்களுக்கும் வரப்பிரசாதமாய்
வந்ததுதான் டிக்டாக். அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்தக் காலத்தில் நடிப்பையும் சர்வ சாதாரணமாக வெளிக்கொண்டு வருவதில் முக்கிய
பங்காற்றுகிறது இந்த டிக்டாக் செயலி. இதன் மூலம் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் நடிக்கச் சென்றவர்கள்
ஏராளம்.
இதனிடையே பல மாதங்கள் முன்‘டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச்
செயலிக்குத் தடைவிதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டது. பின்னர்,
மேல்முறையீட்டில் தடை நீங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் சட்டத்துக்கு புறம்பாகவும் ஆபாசமாகவும் பதிவிட்டிருந்த 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் நீக்கம் செய்தது.
இதுகுறித்து அப்போது அந்நிறுவனத்தின் இந்திய இயக்குநர் சச்சின் சர்மா கூறுகையில், “திறமையும் படைப்பாற்றலையும் வெளிக்கொண்டு வருவதே
டிக் டாக் செயலியின் நோக்கம். பயனாளர்களுக்குப் பாதுகாப்பான, நேர்மறையான சூழலை கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். அதை
மீறும் எந்த உள்ளடக்கத்தையும் அங்கீகரிக்க மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.
சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி தற்போது இந்தியா முழுவதும் பரவி கிடக்கிறது. டிக்டாக் இல்லாத செல்போனை எண்ணி
சொல்லிவிடலாம் என்ற அளவில்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு டிக்டாக் மோகம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த மோகம் நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை.
விளையாட்டாகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்தப்பட்ட டிக்டாக் செயலியை பயன்படுத்தி வீடியோ பதிவிடுவது பல்வேறு விபரீதங்களுக்கு
வித்திட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி காவல்துறை வரை யாரையும் விட்டுவைக்கவில்லை டிக்டாக் மோகம். கணவன் மனைவி
இடையே மண முறிவு, தற்கொலை, கொலை என டிக்டாக் வீடியோவினால் ஏற்படும் குற்றச்செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
டிக்டாக் வீடியோக்கள் சமூகத்தை சீரழிக்கின்றன என கலாச்சார காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் டிக்டாக் வீடியோக்களில் வலம் வருவதை பொறுக்கமுடியாமல் ஆண்கள் சிலர் வன்முறையில்
இறங்குகின்றனர். சமூக வலைத்தளங்கள் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதை மறந்த இளைஞர்கள், அதில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பல செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வப்போது சிலர் உயிரையே இழந்துவிடுகின்றனர்.
அண்மையில் கூட ‘டிக்டாக்’ வீடியோவிற்காக சாகசம் செய்த ஒரு இளைஞர் கழுத்து எலும்பு உடைந்து இறந்துபோனார். குஜராத்தில் காவல் நிலைய
லாக் அப் அருகே நின்று டிக்டாக் செய்த பெண் காவலர் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவையில் ரேக்ளா காளையுடன் ஆழமான குட்டைக்குள் டிக்டாக் வீடியோ எடுத்து கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். டிக்டாக்
வீடியோ பதிவேற்றியதால் கணவனே மனைவியைக் கொலை செய்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் ஆந்திராவில் அரங்கேறியது. கடந்த ஆகஸ்ட்
மாதம் கரூர் மாவட்டத்தில் டிக்டாக்கில் மூழ்கிய மனைவி வேறொருவருடன் சேர்ந்து டிக்டாக் செய்துள்ளார். அந்த வீடியோவை அனைவரும் சேர்
செய்ய அது வைரலாகியுள்ளது. இதைப்பார்த்த கணவர் ஆத்திரமடைந்து மனைவியை கொலை செய்தார். இதேபோல், கடலூரில் டிக்டாக்கிற்கு
அடிமையான மனைவியை கணவர் கொலை செய்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. இதேபோல், குன்றத்தூரில் டிக் டாக்கில் அறிமுகமான ஆண்
நண்பருக்காக அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தது அனைவரும் அறிந்ததே.
இதனால் குற்றச்செயல்களுக்கும் குடும்ப பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறதா டிக்டாக் என்ற ஐயம் எழுந்துள்ளது. இதுகுறித்து வானொலி அறிவிப்பாளர்
புதிய தலைமுறைக்கு கூறுகையில், “டிக்டாக் மூலமாக நிறைய திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். திரைத்துறையில் கூட நிறைய இயக்குநர்கள்
டிக்டாக்கை பார்த்து ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் மற்றொரு புறம் பொய்யான செய்திகளை பரப்பும் செயலும் டிக்டாக்கில் நடைபெறுகிறது.
இது எல்லாம் ஏன் நடக்கிறது என்றால் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் இடைவெளியை இதுபோன்ற அப்ளிகேஷன் நிரப்புவதாக அவர்கள்
கருதுகிறார்கள். டிக்டாக் என்பது குடும்ப உறவுகளுக்கு அச்சுறுத்தலாய் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. காட்சியை முழுமையாக பிரதிபலிப்பதே
டிக்டாக்கில் இருக்கும் முக்கிய பிரச்னையாக பார்க்கிறேன். பயன்படுத்துபவர்கள் தங்கள் வரையறையை கடைப்பிடித்துக்கொள்ள வேண்டும்” எனத்
தெரிவித்தார்.
உளவியல் நிபுணர் சித்ரா கூறுகையில், “டிக்டாக் செய்பவர்களை சில வகையாக பிரிக்கலாம். ஒரு தரப்பினர் நண்பர்களுக்குள் மட்டும் பகிர்ந்து
கொள்வார்கள். பப்ளிஷ் கூட செய்ய மாட்டார்கள். இன்னொரு தரப்பினர்கள் அவர்களுக்கான தளத்தை உருவாக்கி கொள்கிறார்கள். தாழ்வு
மனப்பான்மையுடையவர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் அடிமையாவதற்கு கூட வாய்ப்பிருக்கு. பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கும் ஒரு விஷயம்
அடிமை ஆகும்போது அது பிரச்னையில் முடிவடைகிறது. பாலியல் தொழிலுக்கு கூட இதை ஒரு பிளாட்பாரமாக பயன்படுத்துகிறார்கள். அதை நாம்
வரையறுக்க முடியாது. டிக்டாக் செய்வது அவர்களுக்கு பிரச்னையாக இருக்காது. ஆனால் அது சுற்றியிருக்கும் கணவர், குழந்தை, மனைவி ஆகியோரை
பாதிக்கும். தனிமனித கட்டுப்பாடு அவசியம். ஆனால் அது மிகவும் சிரமம்”எனத் தெரிவித்தார்.