சிறப்புக் களம்

ஒரு பழைய மீமுக்கு வந்த புது வாழ்வு - என்.எஃப்.டி ஏலத்தில் கிடைத்தது ரூ.38 லட்சம்!

நிவேதா ஜெகராஜா

இணைய உலகில் மீம்கள் ட்ரெண்டாகி வைரலாவது எல்லாம் புதிதல்ல தான். ஆனால், இப்போது ஒரு பழைய மீம், என்.எஃப்.டி-யாக ஏலம் எடுக்கப்பட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த நண்பர்கள் இடையே நட்பு முறிந்தபோது உருவான ஃபிரெண்ட்ஷிப் பிரேக் அப் மீம்தான் இப்போது, என்.எஃப்.டியாக ஏலம் எடுக்கப்பட்டு, ரூ.38 லட்சம் ஈட்டித் தந்திருக்கிறது.

என்.எஃப்.டி (NFT) என்றால், மாற்றப்பட முடியாத டிஜிட்டல் டோக்கன்கள் என பொருள். பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள் போல, இந்த டோக்கன்களும் டிஜிட்டல் வடிவில் பிளாக்செயின் மேடையில் உருவாக்கப்பட்டாலும், இவை ஒவ்வொன்றும் தனித்தன்மையானது. ஒன்றுக்கு நிகராக இன்னொன்றை மாற்றிக்கொள்ள முடியாது. இதை குறிக்கும் வகையில்தான், நான் ஃபங்கியபில் டோக்கன் என்கின்றனர்.

டிஜிட்டல் கலை அல்லது டிஜிட்டல் சொத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் வகையில் அவற்றின் மீதான உரிமையை உறுதி செய்து கொடுப்பதற்கான என்.எஃப்.டி இப்போது இணைய உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் டிஜிட்டல் ஓவியம் ஒன்றின் என்.எஃப்.டி சாதனை அளவுக்கு ஏலம் போனது. அண்மையில், வைய விரிவு வலையின் மூல நிரல் என்.எஃப்.டி.,யாக ஏலம் போனது.

இதேபோலவே, இணையத்தில் ஒரு காலத்தில் கலக்கிய மீம்களின் மூல வடிவமும் என்.எஃப்.டியாக ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இப்போது பாகிஸ்தான் நண்பர்களின் பிரேக் அப் மீம் மூல வடிவம், என்.எஃப்.டியாக ஏலம் விடப்பட்டு ரூ.38 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்த மீம் பற்றிய பிளேஷ்பேக்கை பார்க்கலாம். 2015-ம் ஆண்டு, ஆசிப் ராஸா என்பவர் இந்த மீமை உருவாக்கினார். ஆனால், அவர் இதை மீமாக நினைத்தெல்லாம் உருவாக்கவில்லை. அப்போது தன்னுடன் சிறந்த நண்பராக இருந்த முதசர் என்பவருடன் ஏற்பட்ட மனக்கசாப்பால் அவரது நட்பை முறித்துக்கொள்ள தீர்மானித்தார். ஆனால், இது சமூக ஊடக யுகம் அல்லவா! ஆகவே, தனது நட்பு முறைவை நண்பருக்கு மட்டும் தெரிவிக்காமல், நண்பர்களுக்கு எல்லாம் தெரிவிக்கும் உத்தேசத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்த தகவலையும் வெறும் நிலைத்தகவலாக மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படமாக பகிர்ந்து கொண்டார். இருவரும், கைகுலுக்கும் படத்தின்மீது, முதாசருடன் நட்பு முறிந்துவிட்டது, இப்போது சல்மான் தனது சிறந்த நண்பர் என தெரிவித்திருந்தார். அப்படியே கீழே பழைய மற்றும் புதிய நண்பரின் படத்தை வெளியிட்டு, அதில் முதாசர் படம் மீது பெருக்கல் குறியிட்டிருந்தார்.

இந்த நட்பு முறிவு படம், ஃபேஸ்புக்கில் ஆசிப் ராஸா மற்றும் முதாசர் நட்பு வட்டத்தில் மட்டும் அல்லாமல், மற்றவர்கள் மத்தியிலும் வலம் வந்து ட்ரெண்டிங்கானது. அப்படியே மீம் வடிவம் எடுத்து உலக அளவிலும் பிரபலமானது.

இந்த நட்பு முறிவு மீம், பல்வேறு காரணங்களுக்காக இணையவாசிகளை கவர்ந்து, பல நாடுகளில் தேசிய அரசியலை நையாண்டி செய்ய எல்லாம் இது பயன்பட்டது. இப்போது, ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த மீமிற்கு புது மவுசு கிடைத்துள்ளது. இந்த மீமின் மூல வடிவம் என்.எஃப்.டி டோக்கனான ஏலம் விடப்பட்டு ரூ.38 லட்சம் கிடைத்துள்ளது.

இந்தத் தகவல் ராஸாவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது நட்பு முறிவு அறிவிப்பு படம் இந்த அளவு பிரபலமாகும் என்றெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை என அவர் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்ல, முதாசருடன் எதற்காக சண்டை போட்டோம் என்றும் நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். இதனிடையே, பழைய கசப்பை மறந்து முதாசருடன் மீண்டும் நண்பராகிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இணைய உலகமும், அதைவிட மீம்களின் உலகமும் விசித்திரமானது. ஒரு பழைய மீமுக்கு இத்தனை மதிப்பா என நினைப்பவர்கள் கவனத்திற்கு... சில மாதங்களுக்கு முன் பேரிடர் சிறுமி (Disaster Girl) மீமின் படம் 5 லட்சம் டாலருக்கு ஏலம் போனது.

- சைபர்சிம்மன்