தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகமாக பேசப்படும் செய்திகளுள் ஒன்றாக மாறியிருக்கிறது திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவம். வட மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் துப்பாக்கிச்சூடு களாச்சாரமா ? மக்கள் உறுப்பினர்களே துப்பாக்கியை பயன்படுத்தலாமா ? துப்பாக்கியை பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது ? துப்பாக்கியை பயன்படுத்தும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது ? இவ்வாறாக பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, எம்.எல்.ஏ-வின் தந்தையும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான லட்சுமிபதி தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நடந்தது என்ன ? அதன் பின்னணி என்ன ? என்று பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மன். இவரது தந்தை திமுகவின் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் லட்சுமிபதி. இவர்கள் இருவரும் குடும்பத்துடன் திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்தவர் அமமுக பிரமுகர் குமார். இவருக்கும், இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. செங்காடு பகுதியில் உள்ள அம்மன் கோயில் இடம் ஒன்றின் அருகேயுள்ள 350 ஏக்கர் நிலத்தை குமார் தனது சகோதரர் வாங்கியிருப்பதாக தெரிகிறது. அந்த இடத்திற்கு பொதுச் சாலை அமைக்க முயன்றபோது தான், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பொதுச்சாலை அமைப்பதற்கு கோயில் இடத்தை பயன்படுத்துவதாக ஊர்மக்களுடன் சேர்ந்து லட்சுமிபதி, குமார் தரப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் உள்ளது. கொரோனா பொதுமுடக்க காலம் என்பதால் தற்போது வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் ஜே.பி.சி இயந்திரத்துடன் குமார் உள்ளிட்டோர் இடத்திற்கான பொதுப் பாதையை அமைக்க முயன்றுள்ளனர். இதையறிந்த ஊர்மக்கள் சிலர் லட்சுமிபதியுடன் இணைந்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்த ஊர்மக்களுள் ஒருவரிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அவர் கூறும்போது, “கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பொதுப்பாதையை அமைப்பதை தடுக்க லட்சுபதியுடன் இணைந்து நாங்கள் 5 பேர் வந்தோம். அப்போது குமார் தரப்பிலிருந்து திடீரென சுமார் 40 பேர் இருசக்கர வாகனத்தில் பட்டா கத்திகளுடன் வந்தனர். அவர்கள் கத்திகளால் தாக்க வந்ததும், ஊர்மக்கள் பயந்து ஓடினர். அப்போது தான் தற்காப்புக்காக லட்சுமிபதி தனது துப்பாக்கியை வானம் நோக்கிச் சுட்டார்” என்று கூறினார்.
இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது தம்பி குருநாதன் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, எம்எல்ஏ இதயவர்மன் சம்பவ இடத்திற்கு வந்து தனது பாதுகாப்புக்காக இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குமார் காரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக சென்ற சீனிவாசன் என்பவர் மீது குண்டு பாய்ந்து அவர் காயமடைந்ததாக தெரிகிறது. மேலும், குமார் தரப்பினரின் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் திருப்போரூர் போலீஸில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஏஎஸ்பி .சுந்தரவதனம் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே சம்பவ இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவ இடத்திலிருந்த ஜேசிபி, டிராக்டர் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி கண்ணன், “செங்காடு கிராமத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் நீண்ட நாட்களாக விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்பட்ட மோதலின்போது, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை பயன்படுத்தி எதிர்தரப்பினரை எம்எல்ஏ இதயவர்மன் சுட்டுள்ளார். அத்துடன் மோதலின்போது எம்எல்ஏவின் தந்தை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. எனினும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், புதுப்பிப்பதற்காக காவல்துறையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏ கைத்துப்பாக்கியால் சுட்டதை உறுதிபடுத்தியுள்ளோம். இதனால், சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் மீது கொலை முயற்சி, ஆயுதத்தை தவறாக பயன்படுத்தியது (147, 148, 348, 307) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை உள்ளிட்ட சிலரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாகியுள்ள எம்எல்ஏ இதயவர்மனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். முதற்கட்டமாக வெளியாகியிருந்த தகவலில் எம்.எல்.ஏ இதயவர்மன் சம்பவம் நடந்த இடத்தில் இல்லையெனவும், அவரது தந்தையே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் எஸ்.பி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் இதயவர்மன் சுட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் எம்.எல்.ஏ இதயவர்மனை சென்னை மேடவாக்கம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இதயவர்மன் தரப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர்தரப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் இதயம் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் இதயவர்மன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படையினர் அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கையில் முழு பின்னணி தெரியவரும்.