நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் தேவை? இந்த கேள்விக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் அல்லது தேவை இருக்கும். சிலர் 5 சதவீதம், 7 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம் என ஒவ்வொருவரின் பதிலும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் நிதி ஆலோசகர்கள் சொல்வது இயல்பானது. முதலீட்டின் மீதான வருமானம் என்பது பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி. அதனால் பணவீக்கம் என்றால் என்ன என்பதை எளிமையாக பார்ப்போம்.
பணவீக்கம் என்றால்?
பொருட்கள் அல்லது சேவைகளின் விலையேற்றத்தை பணவீக்கம் என அழைக்கிறோம். உதாரணத்துக்கு பணவீக்கம் ஐந்து சதவீதம் இருக்கிறது என்றால் கடந்த ஆண்டை விட தற்போது ஒரு பொருள் அல்லது சேவை ஐந்து சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது என்பது அர்த்தம். அதாவது கடந்த ஆண்டு 100 ரூபாய் இருந்தால் ஒரு பொருளை வாங்கலாம் என்றால் இந்த ஆண்டு ரூ.105 தேவைப்படும் என்று அர்த்தம். ஆனால் பணவீக்கம் என்பது சராசரி பணவீக்கம்தான்.
அனைத்து பொருட்களின் விலையேற்றமும் ஒரே அளவில் இருக்காது. சில பொருட்களின் விலையேற்றம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம், சில பொருட்கள் கூடுதலாக விலை ஏறி இருக்கலாம். அதனால் ஐந்து சதவீதம் என்பது சீராக இருக்காது. அதனால் உங்களுடைய 100 ரூபாய் ஐந்து சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தால்தான் கடந்த ஆண்டு பயன்படுத்திய அந்த சேவையை தற்போதும் பயன்படுத்த முடியும். இல்லையெனில் கூடுதலாக சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது
பிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட நிரந்தர வருமானம் தரும் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற திட்டங்களின் வருமானம் பணவீக்கத்துக்கு ஏற்ற அளவிலே இருக்கும் என்பதால் உங்களின் போர்ட்ஃபோலியோவில் குறைந்த அளவுக்கு மட்டுமே நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யவும். ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கையும் பணவீக்கத்துக்கு ஏற்பவே இருக்கும். அதனால் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டு திட்டங்கள் மூலமாகவே அடைய முடியும்.
பணவீக்கத்தை சரிசெய்கிறேன் என்பதற்காக அதிக ரிஸ்க் இருக்கும் முதலீட்டு திட்டங்கள், டே ட்ரேடிங், கிரிப்டோ உள்ளிட்ட ஆபத்தான முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். பங்குச்சந்தை மியூச்சுவல் பண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு திட்டங்களிலும் பங்கு பெறுவதுதான் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழி.
மூத்த குடிமக்களுக்கு
பணவீக்கம் அல்லது விலைஏற்றம் என்பது அனைவருக்குமானதுதான். இதில் இளையோர் அல்லது முதியவர்கள் என எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால் இந்த விதி மூத்த குடிமக்களுக்கு ஏற்புடையது அல்ல. அவர்களுக்கு பணவீக்கத்தை விட பணம் நிலையாக இருக்க வேண்டும் என்பதே பிரதானம். இருக்கும் தொகையை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்கள் பணவீக்கம் குறித்து யோசிக்க தேவையில்லை. அது ஆபத்தானதாக முடியும்.
இதில் இரு விஷயம் இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு தேவையான பணம் எவ்வளவு, வாரிசுகளுக்கு கொடுக்க விரும்பும் பணம் எவ்வளவு என்னும் தெளிவு இருந்தால் எளிதாக முடிவெடுக்கலாம். வாரிசுகளுக்கு கொடுக்க விரும்பும் பணத்தை அதிக ரிஸ்க் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் அவரின் வாரிசுதார்கள் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
சொந்த தேவைக்கு இருக்கும் பணத்தை குறைந்த ரிஸ்க் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் பணவீக்கம் குறித்து கவலைபடுவதால் எந்த பயனும் இல்லை.
உங்கள் சேமிப்பு முறையை உங்களின் எதிர்கால திட்டங்களில் பணவீக்கத்துக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. பணவீக்கம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அனைத்து முதலீட்டையும் நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வதும் தவறு. பணவீக்கத்தை தாண்டிய வருமானம் வேண்டும் என்பதற்காக அனைத்து முதலீட்டையும் அதிக ரிஸ்க் இருக்கும் திட்டங்களில் வைத்திருப்பதும் தவறு. பணவீக்கம் குறித்த புரிதலுடன் கலவையான போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவும்.
முந்தைய அத்தியாயத்தை படிக்க பணம் பண்ண பிளான் B -21: சிறந்த முதலீட்டாளராக உருவாக விரும்புகிறீர்களா?