சிறப்புக் களம்

கொரோனா கால மாணவர் நலன் 4: எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறப்புக்கு முன் அரசு செய்ய வேண்டியவை!

நிவேதா ஜெகராஜா

கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியிலும் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது என்பதால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர் தரப்பிலிருந்து என்ன மாதிரியான கூடுதல் கவனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கான நோய்த் தடுப்பில் அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.

இந்த வகுப்பிலான குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி திறப்பை நவம்பர் 1 முதல் சாத்தியப்படுத்த முடிவெடுத்துள்ளது தமிழக அரசு.

ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் இயங்காமல் வந்த காரணத்தால், இந்தப் பள்ளி திறப்பை பெற்றோர், ஆசிரியர் என பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

ஆனாலும், அனைவர் மத்தியிலும் கொரோனா அச்சம் குறித்த பயங்களும் இருக்கிறது. குறிப்பாக '1 - 8 வகுப்பிலான குழந்தைகள், 9 - 12 வகுப்பு குழந்தைகளை போல பொறுப்பாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் விளையாட்டுத்தனம் அதிகமிருக்கும். கூடிப் பேசுவது, உணவுப் பரிமாறிக்கொள்வது என இருப்பார்கள். ஆகவே, இவர்களை கையாள்வது அரசுக்கு சற்றே சவாலானது. இந்த சவாலுக்கிடையில், வருடங்கள் கழித்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கென்றே இருக்கும் கற்றல் இடைவெளி அதிகரிப்பு, தொடர்ந்து பாடம் கவனிக்கும் திறனில் பின்னடைவு உள்ளிட்ட சவால்கள் ஆசிரியர்களுக்கு ஏற்படும்.

இந்த சவால்களையெல்லாம் எளிமையாக கையாள அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திருவாரூரை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான மணிமாறன் நம்மிடையே சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அவைகுறித்து இந்த கொரோனா கால மாணவர் நலன் அத்தியாயத்தில் பார்ப்போம்.

"* தொடக்கப்பள்ளி குழந்தைகளை கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கூறி, அவர்களை தனிமனித இடைவெளியைப் பின்பற்றச் சொல்லி கண்டிப்புடன் இருப்பது இயலாத விஷயம். எப்படி இருந்தாலும், விளையாட்டுத்தனமாக அவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்றாக ஓடியாடி விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். எனில், அவர்கள் மத்தியில் எப்படி தனிமனித இடைவெளியை சாத்தியப்படுத்துவது என்றால், அவர்களை தினந்தோறும் பள்ளிக்கு வரவழைக்காமல் வகுப்பு வாரியாக அவர்களை பிரித்து வெவ்வேறு தினங்களில் (ஆல்டர்நேட்டிவாக) வரவழைக்கலாம். இப்படி செய்யும்போது தனியார் பள்ளிகளில் இருப்பதாக சொல்லப்படும் இடப்பற்றாக்குறை சார்ந்த பிரச்னைகளையும் சரிசெய்யலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர் எண்ணிக்கை வித்தியாசப்படும் என்பதால், இதை பள்ளி நிர்வாகமே அமைத்துக்கொள்ளலாம் என சொல்லிவிடலாம்.

இந்த ஆல்டர்நேட்டிவான வழிமுறைக்கு சிலர் எதிர்வாதம் வைப்பதுண்டு. குறிப்பாக 'அதான் அரசு பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்கிறதே... சிரமமுள்ளதாக நினைக்கும் மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே இணையவழியில் கவனித்துக்கொள்ளலாமே. அந்த வழிமுறையை சொல்லாமல், எதற்கு இந்த வெவ்வேறு தினத்தில் பள்ளிக்கு வர சொல்லும் வழிமுறையை சொல்கின்றீர்கள்' என சிலர் கேட்பர். இன்றும் பல அரசுப் பள்ளி மாணவர்கள், வீட்டிலுள்ள நபர்கள் அல்லது அண்டை வீட்டுக்காரர் யாராவது ஒருவரின் மொபைலையே நம்பியுள்ளனர். அந்த நபர்கள், வீட்டிலேயே இருப்பவர்கள் கிடையாது. அவர்கள் வேலைக்கு செல்பவர்கள். அப்படி அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டால், இவர்களுக்கு இணைய வசதி கிடைக்காது. நடுத்தர குடும்பப் பின்னணி கொண்ட நிறைய தனியார் பள்ளி குழந்தைகளும்கூட இப்படியான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆகவே, இணைய வழி கல்வியை நம்மால் அப்படி பொதுப்படுத்தி ஊக்கப்படுத்த முடியாது.

எனவே, நமக்கிருக்கும் சிறந்த வழியான பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்து கற்பிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். அதில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட இடர்பாடுகள் வரும்போது அதைக் களைய வேண்டும். அப்படியான ஒன்றுதான் ஆல்டர்நேட்டிவாக அவர்களை பள்ளிக்கு வரவைப்பது.

* அதுபோலவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஏற்கெனவே பாடத்திட்டங்களை சுருக்கி உள்ளது என்றாலும், ஒன்றரை வருடம் கழித்து பள்ளிக்கு வந்து தொடர்ந்து 6 அல்லது 7 மணி நேரம் தொடர்ந்து கவனிக்கும்போது, அவர்கள் மத்தியில் கவனச்சிதறல் அதிகமாக இருக்கும். இதைக் களைய, மாணவர்களை முதலில் நாம் பள்ளி இயல்புக்கு மெது மெதுவாக கொண்டு வர வேண்டும். இங்கு நான் பள்ளி இயல்பு என குறிப்பிடுவது, வாசித்தல் மற்றும் எழுதிப் பழகுதல் ஆகியவற்றை. இவற்றுக்கு பள்ளி வரும் குழந்தைகள் முதல் சில நாள்களுக்கு பழக்கப்படுத்தப்பட்ட பிறகு, மற்றவற்றை செய்யலாம். இப்படிச் செய்தால் குழந்தைகளும், ஆர்வமாக பாடத்திட்டத்துக்குள் வருவார்கள். இதற்கு முதலில் பள்ளிகளில் நூலக வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். உடன் வரைதல், கணிணி வசதிகள், ஆய்வகங்கள் போன்றவையாவும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். இப்படி பாடப்புத்தகத்தை தவிர்த்த சில விஷயங்களை உள்ளிழுத்து குழந்தைகளை கல்விக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, பள்ளி வரும் குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும். உடன் அவர்களின் கற்றல் இடைவெளியும் குறையும்.

* பல கிராமப்புற குழந்தைகளும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும் இன்றளவும் கூலி வேலைகளுக்கு குழந்தைத் தொழிலாளர்களாக செல்லும் நிலையுள்ளது. அவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. ஜூலை முதலே பள்ளிகள் திறப்பு இருப்பதால், அம்மாணவர்கள் வழியே தொடக்கப்பள்ளி மாணவர்கள் பற்றி ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு தெரிந்திருக்கும். என்றாலும், அதை தடுக்க முடியாத சூழல் இருந்திருக்கும். இனி பள்ளி திறப்பதால், அதை ஆசிரியரால் சாத்தியப்படுத்த முடியும். இதில் ஆசிரியருக்கு உதவ, அந்தப் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள் யாரேனும் உதவ ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

இதைபோல குழந்தைத் தொழிலாளர்களை கொண்டு வேலை வாங்கும் 'முதலாளி'களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு கடுமையாக்க வேண்டும். அந்த வகையில் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதை தடுப்பது மிக மிக அவசியம். அது முழுக்க முழுக்க அரசின் கையில்தான் இருக்கிறதென்பதால், அதை அரசு உடனடியாக துரிதப்படுத்தப்படவேண்டும். மாணவர்களை பள்ளிக்கு கொண்டுவரும் பொறுப்பு அரசு, உள்ளூர் அமைப்புகள், கல்வித்துறைக்கு உள்ளது. பள்ளிக்கு வெளியே இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பு மட்டுமே தற்போதைய அத்தியாவசியமான பணியாக அனைவரும் கருதி அதை ஊழியர்கள் மூலம் அரசு செய்ய வேண்டும்.

* ஊரடங்கு காலத்தில் பல குழந்தைகளுக்கு அவர்களின் நட்பு வட்டத்தை மாறிவிட்டது. ஒன்றரை வருடத்துக்கு முன் தங்கள் வயதிலுள்ள நண்பர் குழுவில் மட்டுமே இருந்தவர்கள், இன்றளவில் 20 - 25 வயதிலுள்ள இளைஞர் குழுவில் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளென்றால் கல்லூரி முடித்த பெண்கள் - திருமணத்துக்கு தயாராவோருடன் இருக்கின்றனர். வயதுக்கு மீறிய இந்த நட்புறவால் அவர்களுக்கு சில உளவியல் தாக்கங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு வயதுக்கு மீறியவர்களிடம் பழகும்போது சிலருக்கு 'எல்லா சிரமங்களையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற கல்விதான் முக்கியம்' என தோன்றலாம்; இன்னும் சிலருக்கு பள்ளி பருவத்திலேயே காதல், மது - புகைப்பழக்கம் போன்றவை ஏற்படலாம். எதுவாக இருந்தாலும் அவர்களின் அந்த மாற்றத்தை அவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு மாணவர்களிடமிருந்து தெரிந்துக்கொள்ளும் பொறுப்பு ஆசிரியர்களுக்கே உண்டு. இருப்பினும், ஒரே நேரத்தில் அத்தனை மாணவர்களின் மன நலனையும், குண மாற்றத்தையும் கவனிப்பது மிக மிக சவாலானது. ஆகவே, எல்லா பள்ளியிலும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் மூலம் தேவைப்படும் மாணவர்களை ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியும்.

மனநலன், குணநலன் போலவே உடல்நலனிலும் மாணவர்களுக்கு நிறைய சிக்கல் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளால் உருவான கண் பாதிப்புகள் அதிகம். அரசு இவ்விஷயத்தில் முகாம் அமைக்கப்படுமென அறிவித்திருப்பது மகிழ்ச்சி. கண் முகாம் அமைப்பது போலவே காசநோய் முகாம்கள், பற்கள் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்யும் முகாம்கள், அடிப்படை தடுப்பூசி முகாம்கள், பருவகால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்டவற்றை அரசு அமைக்க வேண்டும்.

1 - 8 வகுப்புக்கான பள்ளி திறப்புக்கு இன்னும் நமக்கு ஏறத்தாழ ஒரு மாதம் காலம் இடைவெளி உள்ளது. அதற்குள் அரசு இவற்றையெல்லாம் (கற்றல் இடைவெளி குறைப்பு, சிறப்பு மருத்துவ முகாம்கள், மனநல ஆலோசகர் ஏற்பாடு, ஆல்டர்நேட்டிவான வகுப்புக்கான முன் ஆலோசனைகள்) செய்துவிட்டால், மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் அது மிக மிக உதவியாக இருக்கும். எக்காரணம் கொண்டும் அரசு பள்ளிகளை திறக்கும் முடிவில் பின் வாங்க கூடாது. தகுந்த முன்னேற்பாடுகளுடன் பள்ளிகள் செயல்பட வேண்டும்"

முந்தைய அத்தியாயங்கள்: