சிறப்புக் களம்

“இது வன உயிர் மேலாண்மை; ஜீவகாருண்யம் அல்ல” - சின்னத்தம்பியின் உண்மை நிலை

“இது வன உயிர் மேலாண்மை; ஜீவகாருண்யம் அல்ல” - சின்னத்தம்பியின் உண்மை நிலை

மேற்குத் தொடர்ச்சி பரந்து விரிந்து காடுகளின் வழியே சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது சின்னத்தம்பி. ஆம்; தான் வாழ்ந்த கோவை பெரியதடாகம் வழித்தடம் பகுதிக்கு தன் குடும்பத்தை காண திரும்பிக்கொண்டிருக்கும் சின்னதம்பிக்கு பெரும் பசி. ஆனால், சின்னதம்பிக்கு மிகவும் பிடித்த உணவு பலாபழங்கள். அந்தப் பலா பழங்களை சாப்பிட, மரம் தேடிச் சென்று கொண்டிருக்கிறது சின்னதம்பி என சில விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்குப் பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர்.

ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னதம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னதம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. சின்னதம்பி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வந்தனர்.

அதன்படி தற்போது காட்டுயானை சின்னதம்பி உடுமலை அருகே தஞ்சமடைந்துள்ளது. வாழிடத்தைத் தேடி கடந்த 3 நாட்களில் 100 கிலோமீட்டர் தூரம் கடந்த சின்னதம்பி உடுமலை ரயில்நிலையத்திற்குள் புகுந்துள்ளது. யானை சின்னதம்பியைக் காண ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனிடையே யானை சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஆனால்‘சின்னதம்பியை காப்போம்’ என்று சில முழுக்கங்கள் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. மேலும் காட்டு யானையை கும்கியாக மாற்றுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாகவும், அந்தக் கொடுமைகளை சின்னதம்பி அனுபவிக்க சூழ்நிலை ஏற்படும். அதனால் பெரியதடாகம் வனப்பகுதியிலேயே சின்னதம்பியை விட வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது. 

ஆனால் உண்மை நிலை என்ன ? அமைச்சரின் கூற்று சரியானதா என கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் புதிய தலைமுறை இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் " எல்லா வளர்ப்பு யானைகளும் கும்கியாக மாறாது. முதுமலையில் 30 யானைகள் இருக்கிறதென்றால் அதில் 4 யானை மட்டுமே கும்கியாக இருக்கின்றன. கும்கி என்றால் ஆண் யானை தந்தம் உள்ளது, மிக தைரியத்தோடு பாகனுடைய எல்லா உத்தரவுக்கும் கட்டுப்பட்டு இன்னொரு காட்டுயானையயுடன் போராடுவது. அதுதான் கும்கி” எனக் கூறுகிறார் காளிதாசன்.

மேலும் தொடர்ந்த காளிதாசன், “இப்போது அமைச்சர் சீனிவாசன் சின்னதம்பியை, வெறும் முகாம் யானையாக மாற்ற முடியும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், சின்னதம்பியை முகாம் யானையாக மாற்றுவதை தவிர வேறு ஏதுவம் வழியில்லை.ஏன் என்றால் சின்னதம்பி ஏற்கெனவே விளைநிலங்களில் பிரச்னை செய்து விவசாய மக்களின் கோபத்துக்கு ஆளாகி, மக்களின் கோரிக்கையின் பேரிலேயே வனத்துறை நடவடிக்கை எடுத்தது. 

சின்னதம்பி விடப்பட்ட இடம் ஆனைமலையின் அடர் வனப்பகுதி. ஆனால், சின்னதம்பி அங்கிருந்து மீண்டு திரும்பவும் ஊருக்குள் வந்து பயிர்களை உணவாக்கிக் கொண்டது. ஏனென்றால் சின்னதம்பி கடந்த 10 ஆண்டுகளாக விவசாய பயிர்களையே சாப்பிட்டு பழகிவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு கேரளாவிலும் கர்நாடகாவிலும் நடந்துள்ளன" என தெரிவித்தார்.

"இப்போது சின்னதம்பி பயிர் உணவுக்கு அடிமையாகிவிட்டது. இப்போது சின்னதம்பியை வேறு எந்த வனப்பகுதியிலும் விட்டாலும், அது விவசாய நிலங்களுக்கே திரும்பும். எனவே‘சின்னதம்பியை பாதுகாப்போம்’ என்று கூறுவதெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. இதுவொரு வன உயிர் மேலாண்மை, ஜீவகாருண்யம் அல்ல. சின்னதம்பியை முகாம் யானையாக மாற்றுவது என்பது கொடுமையானது, சிறைவாசம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் வேறு வழியுமில்லை. எதிர்காலத்தில் வேறு எந்த யானைக்கும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாதுவாறு பாதுகாக்க வேண்டும்" என்று கூறுகிறார் காளிதாசன். 

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, யானைகளுக்குத் தேவையான, உகந்த சூழலை ஏற்படுத்தி யானைக்கும் - மனிதனுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளலாம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வும் அதுவே!