சிறப்புக் களம்

ஏடிஎம்மில் பணம் இல்லை.. தவிக்கும் மக்கள்..?

ஏடிஎம்மில் பணம் இல்லை.. தவிக்கும் மக்கள்..?

webteam

உ.பி.யை சேர்ந்தவர் உமேஷ். கடந்த ஒருவாரமாக ஏடிஎம்மில் பணம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். ஒரு வழியாக தனது வங்கிக்கே சென்று பணத்தை எடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு, ஏடிஎம் வாசலில் நின்று கால் வலி இன்னும் சரியாகவில்லையே, அதற்குள் மறுபடி ஏடிஎம்மில் பணம் இல்லையா என நீங்கள் கேட்கலாம்.

உத்தர பிரதேசத்தின் பல பகுதிகள், போபால், சூரத், ஹைதராபாத், டெல்லி என பல்வேறு பகுதிகளில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. இது பற்றி சந்தேகம் எழுப்பியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் “16.5 லட்சம் கோடி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டது. அவையெல்லாம் எங்கே சென்றது? ஏன் இந்தத் திடீர் தட்டுப்பாடு?” எனக் கேள்வி எழுப்பியதோடு மத்திய அரசிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

டெல்லியில் உள்ள பல்வேறு ஏ.டி.எம்களிலும் இதே நிலை தொடர்வதால் வாடிக்கையளார்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பல்வெறு வங்கிகளின் ஏடிஎம்கள் சென்று விட்டதாகவும், எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லாததால் என்ன செய்வதென தெரியமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இது ஒரு தற்காலிகத் தட்டுப்பாடு என்றும், விரைவில் சரியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்தத் திடீர் தட்டுப்பாடு என சில வங்கி மேலாளர்களோடு பேசிய போது, “ பண மதிப்பிழப்புக்கு பின்பு மக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய பயப்படுகின்றனர். பண டெபாசிட் குறையும் போது ஏ.டி.எம்களில் நிரப்ப பணம் இல்லாமல் போகிறது”என்றனர். அதோடு மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஆர்பிஐ வெகுவாக குறைத்துவிட்டது. ஆனால் மக்கள் பண வழி பரிவர்த்தனையையே விரும்புகின்றனர் என்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகள் பணத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மக்கள் வங்கிகளுக்கே வந்து பணம் எடுத்துக் கொள்வதால் நிலைமையை சமாளிக்க முடிகிறது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.