தட்டம்மை ருபெல்லா தடுப்பு மருந்து முகாம் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தட்டம்மை, ஜெர்மனி தட்டம்மை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன என்று தெரிந்துகொள்வோம்.
ருபெல்லா என்பது ஜெர்மன் தட்டம்மை என்று அழைக்கப்படுகிறது. இந்த தட்டம்மை வழக்கமாக குழந்தைகள், பதின்பருவத்தினரேயே அதிகம் தாக்குகிறது. தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுதல், தும்முதல் மூலம் காற்றின் வழியாக இந்த வகை தட்டம்மை பரவுகிறது.
குழந்தைகளுக்கு இந்த வகை தட்டம்மையால் பாதிப்பு இருந்தாலும், கர்ப்பிணிகள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாவார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உலக அளவில் ஆண்டுதோறும், ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லாவால் பாதிப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த வகை தட்டம்மையை தடுப்பு மருந்து மூலம் வராமல் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல்
17 ஆம் நூற்றாண்டில் ஃபிரைடுரிச் ஹோப்மேன் என்ற ஜெர்மனி மருத்துவரால் இந்த வகை தட்டம்மை கண்டறியப்பட்டது. லத்தீன் மொழிச்சொல்லான ருபெல்லாவுக்கு சிறிது சிவந்தது என்று பொருள். 1866 ல் ருபெல்லா என்ற வார்த்தை இந்த வகை தட்டம்மைக்கு பயன்படுத்தப்பட்டது
1969ல் ருபெல்லா தட்டம்மைக்கான தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின் ருபெல்லா தட்டம்மை பாதிப்பு உலக அளவில் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோலில் தடிப்புகள், காய்ச்சல், குமட்டல், கண்வலி போன்ற அறிகுறிகளுடன் இரண்டு முதல் 3 வாரங்களுக்கு இந்த தொற்று இருக்கக்கூடும். முகம், கழுத்து பகுதிகளில் தொடங்கி உடல் முழுவதும் தடிப்புகள் 2 முதல் 3 நாட்கள் வரை இருக்கக்கூடும். குழந்தைகளை விட பெரியவர்களுக்கு இதன் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும். மூட்டு இணைப்புகளில் 3 முதல் பத்து நாட்களுக்கு வலி இருக்கக்கூடும்.
கர்ப்பிணிக்களுக்கு தட்டம்மை, ருபெல்லா தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். கரு கலைவது, குழந்தை இறந்தே பிறப்பது, பிறப்பு கோளாறுகள் போன்ற அபாயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.