வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போது, சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் பேசினோம்,
“முதல்வர் வேட்பாளர் யார்? என்று அவர்கள் கட்சியிலேயே பேசுவதைப் பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இருக்கும் அதிகாரப் போட்டி வெளியில் தெரிகிறது. இவர்களிடம் இந்தப்போட்டி, தொடர்கதையாகவே உள்ளது. இவரு முதல்வரா? அவரு முதல்வரா? என்பதெல்லாம் ஆட்சி இருக்கும்வரைதான். ஆட்சி போய்விட்டால் முதல்வர் கனவெல்லாம் வெறும் கனவுதான். அதன்பிறகு என்ன செய்வார்கள்? தோல்வியடையப் போகிறவர்களுக்கு எதற்கு முதல்வர் கனவு? ஆட்சி போய்விட்டாலே முதல்வர் கனவும் போய்விடும். பிறகு எங்கிருந்து முதல்வர் வருவார்? கேள்வியே எழாதே?
கொரோனாவை வைத்துதான் அதிமுக ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இல்லையென்றால், எத்தனையோ எம்.எல்.ஏ.க்கள் வெளியில் சென்றிருப்பார்கள். சமாளித்து ஓட்டிகொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அதிமுக ஆட்சியில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் சண்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஆட்சி மீது மக்களுக்கு அளவுகடந்த அதிருப்தியும் கோபமும் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கும் அன்றோடு ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு, இந்தபேச்சே வராது” என்று தெரிவித்துள்ளார்.
-வினி சர்பனா