சிறப்புக் களம்

கொத்துக் கொத்தாக வேலையை விடும் அமெரிக்கர்கள்... The Great Resignation-ன் பின்புலம் என்ன?

webteam

'தி கிரேட் ரெசஷன்' (The Great Recession) என்னும் வார்த்தையை கற்றுக்கொடுத்த அமெரிக்கா தற்போது 'தி கிரேட் ரிசைக்னேஷன்' (The Great Resignation) என்னும் வார்த்தையை உலகுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை பல லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலையைக் விட்டு விலகி இருக்கிறார்கள். பலர் விலகுவதைப் பார்த்து 'நானும் விலகுகிறேன்' (I also Quit) என்று சொல்வதற்கும் பல அமெரிக்கர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த கொரோனா பேரிடர் காலம் அமெரிக்க பணியாளர்களின் முன்னுரிமையை மாற்றி இருக்கிறது. உழைக்கும் வர்க்கமான ப்ளு காலர் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களையும் தொடர்ந்து ராஜினாமா செய்துவருகிறார்கள். கொரோனா காலத்தில் பணியாளர்களை நிறுவனங்கள் வெளியேற்றின. தற்போது, அதற்குப் பழிவாங்க பணியாளர்கள் கொத்துக் கொத்தாக விலகுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கொரோனா பேரிடர் காலத்தில் 2 கோடி பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஏப்ரலில் இருந்து இதுவரை 2 கோடி நபர்கள் வேலையில் இருந்து விலகி இருக்கிறார்கள். அதேசமயம் 1 கோடிக்கு மேலான வேலை வாய்ப்புகள் இன்னும் நிரப்பப்படாமலும் இருக்கின்றன.

என்ன காரணம்? - 'இதுதான் காரணம்' என்று குறிப்பிட முடியாமல் பல காரணங்கள் உள்ளன. கொரோனா பேரிடர் அனைவரின் முன்னுரிமையை மாற்றி இருக்கிறது. குழந்தைகளை கவனித்தல், பெற்றோர்களை கவனித்தல், வீட்டில் இருந்தே வேலை பார்த்தல் என பல விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டனர்.

ஹோட்டல், ரெஸ்டாரன்ட், பார், உற்பத்தி துறை, ஹெல்த் கேர், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் மிக நீண்ட நேர வேலை, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி இல்லாததது, குறைந்த சம்பளம், வாடிக்கையாளர்களின் மோசமான அணுகுமுறை, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் வேலையில் இருந்து தொடர்ந்து வெளியேறுகின்றனர்.

ஐ.டி உள்ளிட்ட வெள்ளை காலர் பணியாளர்களை எடுத்துக்கொண்டால் வீட்டில் இருந்து வேலை என்பதை பிரதானமாக கருதுகின்றனர். பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் நகரின் பிரதான இடத்தில் உள்ளன. அதனால், தொலை தூர நகரங்களுக்கு பல பணியாளர்கள் சென்றுவிட்டனர். ஃபிளக்ஸிபிலான வேலை நேரம், வீட்டில் இருந்து வேலை உள்ளிட்டவற்றை பணியாளர்களை எதிர்பார்க்க்கின்றனர்.

கொரோனா பேரிடர் வந்த பிறகு, 'வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அதனால் பிடிக்காத வேலையை, வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவையான வேலையை செய்ய வேண்டும்' என பலரும் கருதுகின்றனர். அதனால் தங்களின் தகுதியை உயர்த்திக்கொள்வதற்காக படிக்கச் செல்வதாகவும் இருக்கும் வேலையை விடுகின்றனர். சிலர் சொந்த தொழில் தொடங்குவதற்காக வேலையை விடுகின்றனர். 14 லட்சம் புதிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளன' என்று அமெரிக்க ஊடகங்கள் எழுதியுள்ளன.

டிரேடர்கள்: இந்திய பங்குச்சந்தை மட்டுமல்லாமல் அமெரிக்க பங்குச்சந்தையும் தொடர்ந்து உயரந்து வருகிறது. ராபீன்ஹூட் உள்ளிட்ட சில புரோக்கிங் நிறுவனங்கள் வர்த்தகத்தை எளிமையாக்கி இருப்பதால் பல இளைஞர்கள் டிரேடிங் மற்றும் முதலீடு செய்வதன் மூலம் சம்பாதிக்க தொடங்கி இருப்பதால் வேலையில் இருந்து விலகி இருக்கிறார்கள். மேலும், வேலை இல்லாதவர்களுக்கு வழங்கும் அரசின் சலுகைகள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாகும். இதனால் பணியாளர்களை தக்கவைக்கும் வேலையை அமெரிக்க நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் நிலை என்ன? - இந்தியாவில் மற்ற துறையில் என்ன நடக்கிறது என்பதைவிட ஐ.டி துறையில் என்ன நிலைமை என்பதை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிடும். ஐ.டி துறையில் வெளியேறும் விகிதம் அதிகமாகவே இருக்கிறது. அதிகபட்சமாக காக்னிசென்ட் நிறுவனத்தில் வெளியேறுவோர் விகிதம் 31 சதவீதமாக இருக்கிறது. விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களில் வெளியேறுவோர் விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது.

வேலை இல்லை என்னும் குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் அதே சூழலில், 'வேலையில் இருந்து வெளியேறுகிறோம்' என்னும் குரல்களும் கேட்க தொடங்கி இருக்கின்றன. பணியாளர்கள் பல விதமான சலுகைகளை எதிர்பார்ப்பதால் ஃப்ரீலான்சர்களுக்கு என புதிய சந்தை உருவாகி இருக்கிறது. வரும் காலத்தில் ஃப்ரீலான்சர்கள் பெரும் தாக்கதை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்கப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் இவர்களுக்கான தேவை உயரக்கூடும்.