வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ’முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற சர்ச்சை அ.தி.மு.கவில் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து, அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் தொடர்புகொண்டு பேசினோம்,
”அம்மாவுக்குப்பிறகு கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றி தலைமைத்தாங்கி வழிநடத்தியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். எளிமை, எதார்த்தம், மக்களை மக்களாக அணுகும்முறை, விவசாயிகள் மீதான மரியாதை மற்றும் அவர்களுடைய நலனை தன்னுடைய நலனாக நினைத்தல் போன்றவற்றால் எல்லோரும் முதல்வரை பாராட்டுகிறார்கள். நற்குணங்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். அவருக்கு துணையாக நின்று துணை முதல்வரும் நாங்களும் ஒற்றுமையாக கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை சந்தித்துள்ளோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராகவும், ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் இருப்பார்கள் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். தற்போது, முதல்வராக எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். அவரை வைத்துதான் இத்தனைத் தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். அவர் தலைமையில்தானே இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று இடைத்தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளார்கள்? அதில், என்ன சந்தேகம்? நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காத மக்கள்கூட சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போடுவோம் என்பதை உணர்த்தவே இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். அதனால், யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. முதல்வர்தான், முதல்வர் வேட்பாளர். அவர் தலைமையில்தான் தேர்தலைச் சந்திப்போம்” என்கிறார் உறுதியுடன்.
- வினி சர்பனா