சிறப்புக் களம்

உதவித் தொகைக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் ! மாற்றுத்திறன் தம்பதியின் வேதனை

உதவித் தொகைக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் ! மாற்றுத்திறன் தம்பதியின் வேதனை

webteam

சிவகாசியில் போதிய வருமானம் இன்றி உணவிற்கு கூட வழியில்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு 2 ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சிவகாசி அருகே தாயில்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர் திருமலைகுமார்-பாண்டியம்மாள் தம்பதியினர். தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் தான் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை மணம் முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் மனம் முடித்துள்ளார் திருமலைக் குமார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு சிறுவனும் உள்ளார். 50 சதவீதம் மாற்றுதிறன் கொண்ட திருமலை குமார் கடந்த 5 ஆண்டுகளாக அரசின் உதவியை நாடாமல் கிடைக்கும் கூலி வேலைக்கும், இரு சக்கர வாகனத்தில் ஊறுகாய் விற்பனை செய்து குடும்பத்தை சமாளிக்கும் அளவிற்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த ஓராண்டாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் கடினமான கூலித்தொழில் செய்ய முடியாமல் அட்டை தயாரிக்கும் நிறுவனத்திற்கு 100 ரூபாய் கூலி வேலைக்கு சென்றார் திருமலைக்குமார்.  40 சதவீத மாற்றுதிறன் கொண்ட மனைவி பாண்டியம்மாளுக்கு நீண்ட தூரம் நடக்க முடியாத நிலையில் வீட்டில் இருந்து வருகிறார். உதவித் தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகளிடம் மனு 

தனக்கு மாதம்  ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைத்து வரும் நிலையில் தனது மனைவிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வேண்டி கடந்த 2 ஆண்டுகளாக விண்ணப்பித்து சமூக நலத்துறையிலும் ஆட்சியரிடமும் கோரிக்கை மனுக்களை அளித்து வருவதாக கூறுகிறார். இந்த நிலையில் அதிகாரிகள் உதவித்தொகை வழங்காமல் அலட்சியம் காட்டுவதாக வேதனை தெரிவிக்கும் திருமலைகுமார் தான் பெரும் 100 ரூபாய் கூலி  அன்றாடம் உணவிற்கு கூட போதுமானதாக  இல்லாமல் உணவிற்கு கூட அக்கம் பக்கத்தினரை நாடும் ஏழ்மை நிலையில் தவிப்பதாக வேதனையுடன் தெரிவிக்கிறார். சொந்த வீடோ நிலமோ இல்லாத நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் தாங்கள் கடந்த 6   மாதமாக வீட்டு வாடகை கூட வழங்க முடியாமல் மிகுந்த சிரமங்களை சந்திப்பதாக கூறுகிறார். மனைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைத்தால் வீட்டு வாடகைக்கும் உணவு கிடைக்கவும் உதவியாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

40 சதவீத மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள என அரசாணை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தமக்கு உதவித்தொகை வழங்க மறுத்து வருவதாக தெரிவிக்கிறார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மானியத்துடன் கூடிய  சிறு குறு தொழில் சுய வேலைவாய்ப்பு  கடன் உதவியும் வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார். கடன் பெற கடந்த 2016 ம் ஆண்டு விண்ணப்பித்துள்ள நிலையில் மாற்றுத்திறனாளி நல வாரியம் கடன் உதவி வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனினும் கூட்டுறவு வங்கியில் தங்களது உடல் ஊனத்தை காரணம் காட்டி கடன் வழங்க மறுத்து அலைக்கழிப்பதாகவும் கவலையுடன் கூறுகிறார் அவர்.

தனக்கு உதவித்தொகை வேண்டும் பல முறை ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மனு அளித்துள்ள நிலையில் இதுவரை எந்தவித பயனும் இல்லை என கூறுகிறார் பாண்டியம்மாள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் தங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லாத நிலையில் தங்களது 5 வயது மகனின் எதிர் காலத்தை கருத்தில்கொண்டு அரசு தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் வழங்கினால் தங்களால் இயன்ற சிறு குறு தொழில்களை செய்து பொருளாதார ரீதியில் முன்னேற உதவியாக இருக்கும் என்கிறார் பாண்டியம்மாள்.

சமுதாயத்தில் சாதாரண மனிதர்களுக்கு நிகராக கல்வியிலும், வேலை வாய்ப்பு போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சலுகையும் வழங்குவதாக அரசு அறிவித்து வரும் நிலையில் திருமலைக்குமார்-பாண்டியம்மாள் போன்ற மாற்றுத்திறனாளி தம்பதியினர் போன்ற ஏராளமானோர் அரசின் உதவிக்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். இதை அரசு புரிந்துகொண்டு மாற்றுத்திறனாளி முன்னேற்றத்திற்கு உரிய உதவிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து சிவகாசி வட்டாட்சியர் பரமானந்த ராஜாவிடம் கேட்டபோது நேரில் சென்று உரிய விசாரணை செய்து உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்