சிறப்புக் களம்

“வகுப்பறையில் மிருதங்கம்; நாதஸ்வர கச்சேரி” - மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை ஆசிரியர்

webteam

மாணவர்களை மதிப்பெண்களை நோக்கிய தள்ளும் இந்தக் காலத்தில், அவர்களின் திறமையை அறியுங்கள் என சொல்கிறார் இந்தப் புதுமை ஆசிரியர்.

தஞ்சையில் உள்ள பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரிகின்றார் ஜெயபிரபு. இவர் சில நாட்களுக்கு முன்னர் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தமிழர் கலை மற்றும் பண்பாடு குறித்து விளக்கியுள்ளார். அத்துடன் தமிழர்களின் பாரம்பரியங்களான கரகாட்டம், காவடியாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் திறமையை அறிய யாருக்கு என்ன திறமை உண்டு எனக்கேட்டுள்ளார். பலரும் தங்கள் திறமைகளை கூறியுள்ளனர். 

அப்போது பிரியதர்ஷினி என்ற மாணவி தனக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரியும் என்று கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் நாதஸ்வரம் என்பதை சில கல்யாணங்களில் தவிர மற்ற இடங்களில் காண்பது அறிதாகிவிட்டது. அந்த அளவிற்கு அந்த இசைக்கலை அழிவில் இருக்கிறது என்றால் அது மறுக்க முடியாதது. எனவே பிரியதர்ஷினியை ஒருநாள் அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் நாதஸ்வரம் வாசித்து காண்பிக்க வைக்க வேண்டும் என ஜெயபிரபு திட்டமிட்டுள்ளார். இதனால் பிரியதர்ஷினியை ஊக்குவிப்பதுடன், மற்ற மாணவர்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள இது உதாரணமாக இருக்கும் என அவர் எண்ணியுள்ளார்.

திட்டமிட்டபடியே, இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரியதர்ஷினியை வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் நாதஸ்வரம் வாசிக்க ஏற்பாடு செய்துள்ளார். பிரியதர்ஷினி நாதஸ்வரம் வாசிக்கும் போது உடன் தவில் வாசிக்க தனது மாமாவையும், தன்னுடன் இணைந்து வாசிக்க அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாமன் மகளையும் அழைத்து வந்துள்ளார். அவர்களுக்கு வகுப்பறையில் இருந்த மாணவர்கள் உதவியுடன், மாணவர்கள் உட்காரும் டேபிள் மூலம் ஜெயபிரபு மேடை அமைத்துக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் வாசிக்க காச்சேரி ஆரம்பமாகியுள்ளது. இதை வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ரசித்துப்பார்க்க, மற்ற வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் பார்த்து ரசித்துள்ளனர். அதுமட்டுமின்றி சாலையில் சென்ற மக்களும் திரண்டு கண்டுகளித்துள்ளனர். 

மாணவர்களை படிக்கச்சொல்லி மதிப்பெண்களை மட்டுமே எடுக்க வற்புறுத்தும் ஆசிரியர்கள் இருக்கும் காலத்தில், படிப்புடன் சேர்த்து திறமையை வெளிக்கொண்டு வர நினைத்து ஆசிரியர் ஜெயபிரவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தப் புதிய முயற்சி தொடர்பாக புதிய தலைமுறை இணையதளம் சார்பில் ஜெயபிரபுவிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “மாணவர்களுடன் முதலில் ஆசிரியர்கள் நண்பாரக பழக வேண்டும். அப்போதுதான் அவர்கள் திறமையை நம்மிடம் கூறுவார்கள். படிப்பு மட்டுமின்றி இசை, கலை, ஓவியம், விளையாட்டு என மாணவர்களிடம் பல திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வரும் வகையிலும், நமது பாரம்பரிய கலைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும்  வகையிலும் ‘வாழ்வியல் கல்வி’ என்ற பாடத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.