‘ரெட் அலர்ட்’ பற்றிய வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளில் உண்மை உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
நாளை மிகமிக கனமழை இருக்கும் என்று தமிழக அரசுக்கும் மற்றும் புதுவை, கேரள மாநில அரசுகளுக்கும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. ஆகவே உடனடியாக ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவும் பல வதந்திகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பல ஊகங்க குறித்து விரிவாக பேசியுள்ளார்.
“இந்த மழை சீசன் தமிழ்நாட்டுக்கு நன்றாக இருக்கும். அக்டோபர், டிசம்பர் மாதம் நமக்கு சராசரி மழையின் அளவு 440 மில்லி மீட்டர். இந்த இரு மாதத்திற்கான சராசரி அளவு இவ்வளவுதான். ஆனால் அந்த சராசரி அளவைவிட நமக்கு 450முதல் 500 மிமீ வரை மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ‘ரெட் அலர்ட்’ பற்றி மக்கள் பயப்படத் தேவையில்லை. இந்திய வானிலை மையம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் 200மி.மீ. அளவுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள், பதிவுகள் இருக்கின்றன என்று.
35ல் இருந்து 65 மி.மீட்டர் வரை பெய்தால் அது மிதமான மழை. 65ல் இருந்து 125மி.மீ வரை பெய்தால் அதாவது 7 செ.மீட்டரில் இருந்து 12 செ.மீட்டர் வரை மழையின் அளவு போகும்போது அது கனமழை. 12 செ.மீட்டரில் இருந்து 20 செ.மீட்டர் வரை செல்லும் போது அது மிக கனமழை. 206 மி.மீட்டருக்கு மேல் மழை பதிவானால் அது மிகமிக கனமழை. இதைபோல 200 மி.மீட்டருக்கு மேல் தமிழ்நாட்டில் எங்கேயாவது மழை பெய்ய வாய்ப்பு இருந்தால்கூட ‘ரெட் அலர்ட்’போடுவார்கள். அப்படி ‘ரெட் அலர்ட்’ போட்டால் தமிழகம் முழுவதும் மிகமிக கனமழை பெய்யும் என்பது அர்த்தமல்ல; எங்கேயாவது ஒருசில ஊர்களில் பெய்ய வாய்ப்பிருந்தால்கூட ‘ரெட் அலர்ட்’ போடுவார்கள்.
இந்த அறிவிப்பு வெளியான உடன் மக்கள் என்ன நினைத்துவிட்டார்கள் என்றால் சென்னைக்குதான் பெரிய ஆபத்து வரப்போகிறது என்று தவறாக புரிந்துக் கொண்டுவிட்டார்கள். ஒரேநாளில் இந்த 200 மி.மீட்டர் மழை பதிவாகாது. தினமும் நமக்கு நல்ல மழை பதிவாகிக் கொண்டுதான் உள்ளது. இதைபோலதான் 7தேதியும் மழை பதிவாகும். எங்கேயாவது ஒருசில இடங்களில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்றே கூற வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை வரும் என வாட்ஸ் அப் பதிவுகள் வருவதில் உண்மை இருக்கிறதா? என்ற கேள்விக்கு அவர், “அது எல்லாமே ஒரு கணிப்புதான். அதில் உண்மை இல்லை. அப்படி கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் இன்றுவரை கண்டுபிடிக்கபடவே இல்லை. இன்று இதை சொல்பவர்கள் ஏன் ஆறு மாதம் முன்பாகவே கேரள வெள்ளத்தை கணித்து கூறவில்லை? ஆகவே மிகமிக கனமழை என்பது குறிப்பாக இந்த இடத்தில்தான் பெய்யும் என துல்லியமாக கணித்துக்கூற முடியாது. மழைக்கான நாள் நெருங்க நெருங்கதான் தென்படும் அறிகுறிகளை வைத்து நாம் கணித்துக் கூற முடியும். முன்கூட்டிய பல மாதங்களுக்கு முன்பே கணித்து கூறும் மழையை பற்றிய செய்துகள் எல்லாமே ஒரு முன் முடிவுதான். அது அப்படியே நடக்காது” என்றார்.