சிறப்புக் களம்

திமுக ஆட்சி Vs அதிமுக ஆட்சி - 15 ஆண்டுகளில் தமிழக பொருளாதார வளர்ச்சி எப்படி?

கலிலுல்லா

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த அதிமுக ஆட்சியின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வெள்ளை அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது என்ற தகவல், புள்ளி விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த புள்ளிவிவரங்களின் படி:

''கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பது கவலைக்குரியதாகும். 2004-05 முதல் 2011-12 வரை சராசரி வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கிய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பிடித்தது. ஆனால், 2012-13 முதல் 2018-19 தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்திருக்கிறது.

தமிழ்நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் : 2006-11 ஆம் ஆண்டில் 10.15 சதவீதத்திலிருந்து 2016-20 ஆம் ஆண்டில் 7.22 சதவீதமாக குறைந்தது. பணமதிப்பிழப்பு (2016) அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (2017) மற்றும் கோவிட் 19 தொற்று நோயால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு (மார்ச் 2020) போன்ற தேசிய இடையூறுகள் வளர்ச்சியை பாதித்தது.

மற்ற வளமான மாநிலங்களைக் காட்டிலும் நிதி ஒதுக்கம் இல்லாத காரணத்தினால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. நிலையில்லா துறைவாரியான வளர்ச்சி மற்றும் போட்டித்திறன் இல்லாமை ஆகியவை விரைவான முறையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள். தொழில் மற்றும் சேவைத் துறைகள் போதுமான வளர்ச்சி பெறவில்லை. இதுவிரைவாக சரி செய்யப்படாமல் போனால் ஒப்பீடு மாநிலங்களுடான போட்டியில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி விடும்.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மாநில தனிநபர்களின் நல்ல பொருளாதார நிலையை குறிக்கிறது. 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மற்ற மாநிலங்ளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு தொடர்ந்து சரிந்து வருகிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் மூன்று துணை காலங்களிலும், அகில இந்திய அளவை விட அதிகமாக உள்ளது. இருப்பினும் 2011-12 முதல் 2015-16 வரையிலான இரண்டாவது துணைக்காலத்தில் இது குறைந்தது.

2010-11 முதல் 2012-13 வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்கு, தமிழ்நாடு தனிநபர் மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 4வது இடத்தை பிடித்தது. பின்னர் அது 5வது இடத்திற்கு சரிந்தது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகளையில் இந்த மந்த நிலைக்கு காரணங்கள் மற்றும் சரிவுக்கு வழிவகுத்த விஷயங்கள் குறித்த கவனமாக பகுப்பாய்வு தேவை'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்ஃபோகிராஃபிக்ஸ் : பெ. மதலை ஆரோன்