சிறப்புக் களம்

”கலைஞரோடு ஒப்பிடக்கூடாது..ஸ்டாலின் ஸ்டாலினாகத்தான் இருக்கிறார்!” கே.எஸ் அழகிரி பேட்டி

”கலைஞரோடு ஒப்பிடக்கூடாது..ஸ்டாலின் ஸ்டாலினாகத்தான் இருக்கிறார்!” கே.எஸ் அழகிரி பேட்டி

sharpana

கடந்த 2018 ஆம் ஆண்டு தி.மு.க தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின் , ஆகஸ்ட் 28 ஆம் தேதி இதே நாளில்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க ஸ்டாலின். இந்த, இரண்டு ஆண்டுகளில் திமுக தலைவராக கூட்டணிக் கட்சிகளிடம் மு.க ஸ்டாலின் பழகும் விதம், செயல்பாடுகள் குறித்து  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியிடம் கேட்டோம்,

         “தி.மு.க தலைவராக  தளபதி ஸ்டாலின் அந்தக் கட்சியின் தன்மைக்கேற்ப மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். தோழமைக் கட்சிகளுடன் நட்பாக இருப்பதோடு சொந்தக் கட்சியினரோடும் நல்ல உறவில் இருக்கிறார். மிகவும் எளிமையானவர். பார்ப்பதில் சிரமம் கிடையாது. ஒருக் கட்சியின் தலைவரை பார்ப்பது என்பது பொதுவாக சிரமமாக இருக்கும். ஆனால், ஸ்டாலின் அந்த சிரமத்தை கொடுத்ததில்லை.  தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகள், இந்தியாவில் நடைபெறும் விஷயங்கள் என்று எல்லாவற்றிலும் அவருக்கு புரிதல் உள்ளது.

         மேலும், கலைஞரின் தலைமை அல்லது ஸ்டாலினின் தலைமை என்று ஒப்பிடக்கூடாது. அது தவறானது. ஸ்டாலின் ஸ்டாலினாக இருக்கிறார். அதுதான் அவருடைய சிறப்பு. அவரும் கலைஞர் மாதிரி துண்டுப்போட்டுக்கொண்டு பேசினால், அது சிறப்பு அல்ல. கலைஞர் கலைஞராகவும் ஸ்டாலின் ஸ்டாலினாகவும் இருக்கவேண்டும். அவரவர்களின் குணத்தின் இயல்போடு இருக்கவேண்டியதுதான் சிறந்த தலைமைப்பண்பு . அது ஸ்டாலினிடம் இருக்கிறது.

         மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினின் செயல்பாடு மிகவும் சிறப்பானது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்குமான தொகுதிப் பங்கீடு நான்கு மணிநேரத்தில் முடிந்தது. இவருடைய பிரதிநிதியாக சகோதரி கனிமொழி, ராகுல்காந்தி அமர்ந்து பேசினார்கள். நான் உடன் இருந்தேன். ஏதாவது விஷயங்களில் விளக்கம் பெறவேண்டுமென்றால் உடனடியாக ஸ்டாலினுடன் பேசி, அந்த இடத்திலேயே தீர்வு கண்டார் கனிமொழி. தொகுதிப் பங்கீடு என்றாலே சில பேச்சு வார்த்தைகள் வாரக்கணக்கில் நீளும். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல. எனவே, அவர் இன்றைய அரசியல் காலகட்டத்திற்கு ஏற்புடைய தலைவர். கலைஞரிடம் இருக்கக்கூடிய ஆளுமைத்திறன் இவரிடமும் இருக்கிறது. அதனால்தான், கட்சியின் 100 சதவீத தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், அவர் தலைவராக பொறுபேற்றப் பிறகு வந்த முதல்  நாடாளுமன்றத் தேர்தலில் பெருத்த வெற்றியை பெற்றார்” என்கிறார், அவர்.