பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள பதறவைக்கும் கொலைகளில் சில.. இந்தப் பதிவுகளை திரும்பிப் பார்க்கும்போது இன்னும் தமிழகம் அமைதிப் பூங்காவாகதான் இருக்கிறது என கூறப்போகிறார்களா இந்த ஆட்சியாளர்கள்?
ஜூன் 24, 2016 : சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக் கொலை.
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய செய்திகளில் ஒன்று சுவாதி கொலை வழக்கு. சென்னையைச் சேர்ந்த 21 வயது மென்பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் அனைத்து ஊடங்களும் அங்கு குவிய, சற்று நேரத்தில் செய்தி தமிழகம் முழுவதும் பரவியது.
பின்னர் இந்த விஸ்வரூப விவகாரம் போலீஸுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. இதையடுத்து கொலை செய்தது, ராம்குமார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செங்கோட்டை, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரைக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கைது செய்தது காவல்துறை. இதைத்தொடர்ந்து வழக்கு ஊடங்களின் முழுக்கவனத்துடன் நடைபெற்று வர, புழல் சிறையில் மின் கம்பியைக் கடித்ததால் ராம்குமார் இறந்துவிட்டார் என காவல்துறை அறிவித்தது. இரண்டு மரணங்களுமே கடைசி வரையிலும் மர்மமாகவே போய்விட்டது.
ஜூலை 30, 2016 : விழுப்புரம் அருகே நவீனா என்ற பள்ளி மாணவியை செந்தில் என்பவர் எரித்துக் கொன்றார்.
விழுப்புரம் காலனி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில். இவர், மா.பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீனா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தார். இதையறிந்த நவீனாவின் பெற்றோர், அவரது படிப்பை பாதியில் நிறுத்தினர். இதையடுத்து செந்தில், குடிபோதையில் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த போது அவர் மீது ரெயில் ஏறி செந்திலின் ஒரு காலும், கையும் துண்டானதாக கூறப்பட்டது.
ஆனால் செந்திலின் குடும்பத்தாரோ, நவீனாவின் உறவினர்கள் தான் செந்திலின் கை, காலை வெட்டியதாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ரயில் மோதிய செந்திலின் கை, கால் துண்டானது தெரியவந்தது. இதனால் பொய் புகார் அளித்த குற்றத்திற்காக செந்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில், நவீனாவின் வீட்டிற்குச் சென்று காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் நவீனா மறுத்துவிட்டார். அப்போது செந்தில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி நவீனாவை எரித்தார். இதில் படுகாயமடைந்த நவீன சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நவம்பர் 14, 2017 : ஆதம்பாக்கத்தில் ஆகாஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததில் இந்துஜா மற்றும் அவரது தாய் ரேணுகா பலி
சென்னை, ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் ரேணுகா(45). இவருக்கு இந்துஜா (22), நிவேதிதா (20) என இரு மகள்கள் இருந்தனர். கணவர் சண்முகம் துபாயில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்துஜா பொறியியல் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ்(22) என்ற மாணவர், இந்துஜாவுடன் ஒன்றாக படித்து வந்தார். இந்துஜாவை, ஆகாஷ் ஒருதலையாக காதலித்தார். இதற்கிடையில் இந்துஜாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த ஆகாஷ் கோபமடைந்து அவரது வீட்டிற்குச் சென்றார். இந்துஜாவிடம் தனது காதலை சொல்லி தன்னை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்.
இந்துஜா மறுப்பு தெரிவிக்க, தன்னிடம் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதை கண்டதும் தாய் ரேணுகாவும், சகோதரி நிவேதிதாவும் ஒடி வந்து இந்துஜாவை காப்பற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் இந்துஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாய் ரேணுகா சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்கை நிவேதிகாவும் பலத்தக் காயமடைந்தார்.
பிப்ரவரி 19, 2018 : சென்னை மடிப்பாக்கத்தில் யமுனா ஆசிட் ஊற்றிக் கொல்லப்பட்டார்.
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள வாணுவம்பேட்டையில் தனியார் ரத்தப்பரிசோதனை நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்தவர் யமுனா(33). இந்தப் பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் ராஜா (40). இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று யமுனாவை பணிக்கு வரும் படி, ராஜா அழைத்துள்ளார்.
அதன்படி யமுனாவும் பணிக்கு வர, திடீரென ராஜா பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டுள்ளார். இதற்கு யமுனா மறுப்பு தெரிவித்து, ராஜாவை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜா, அவர் மீது ஆசிட்டை ஊற்றி தீ வைத்தார். இந்தச் சம்பவத்தால் படுகாயமடைந்த யமுனா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். யமுனாவிற்கு காதல் திருமணம் நடைபெற்று, ஒரு பெண் குழந்தை உள்ளது.
பிப்ரவரி 27, 2018 : மதுரையில் 9ஆம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை!
மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிப்பாண்டி என்பவரின் மகள் சித்ராதேவி. 14 வயது சிறுமியான இவர், அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்த, சந்தானம் என்பவரது மகன் பாலமுருகன்(23), மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்தார். அந்தக் காதலை மாணவி ஏற்க மறுத்தும், தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி பாலமுருகன் வற்புறுத்தி வந்தார். அதுமட்டுமின்றி மாணவியை திருமணம் செய்துகொள்ளவாதக் கூறி, அடிக்கடி பள்ளிக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார்.
பாலமுருகன் தொல்லை தாங்காமல், மாணவி தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த பாலமுருகன், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி மாணவியை நேரில் மறித்து காதல் செய்கிறாயா? இல்லையா? என மிரட்டும் தொனியில் கேட்டார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்க, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை மாணவியின் முகத்தில் ஊற்றி விட்டு ஓடினார். இந்தச் சம்பவத்தால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மாணவி, பரிதாபமாக உயிரிழந்தார்.
மார்ச் 9, 2018 (இன்று) : சென்னையில் கல்லூரி மாணவி கத்தியால் அறுத்துக்கொலை!
மாணவி அஷ்வினியும் மற்றும் அழகேசன் என்ற இளைஞரும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர்கள். 18 வயதான அஷ்வினி கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அழகேசன் மதுரவாயல் பகுதியில் வீட்டிற்கு வீடு தண்ணீர் கேன் போடும் வேலை செய்துள்ளார். இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு, அழகேசனை அஷ்வினி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்தான் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் திருமணத்தை விரும்பாத பெற்றோர் மதுரவாயல் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். அதன்பேரில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அஷ்வினி-அழகேசன் பிரிந்துள்ளனர்.
ஆனால் அஷ்வினியின் பிரிவை ஏற்க முடியாமல் அழகேசன் தவித்திருக்கிறார். இதனால் அடிக்கடி அஷ்வினியை பின்தொடர்வது, போன் செய்வது என பல தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அஷ்வினி, அழகேசன் மீது மதுரவாயல் போலீசாரிடம் புகார் தெரிவிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பிரச்னையிலிருந்து விடுபடவும், தனது படிப்பை தொடரவும் அஷ்வினி ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த அழகேசன், அஷ்வினி வீடு திரும்ப கல்லூரி வாசல் வந்தபோதுதான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் அஷ்வினியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த அழகேசனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால், அவரும் சுய நினைவை இழந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலே நடைபெற்ற அனைத்து சம்பவங்களிலும் ஏதோ காரணங்களிலால் பெண்களுக்கு ஈடு செய்ய முடியாத துயரம் இழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் எத்தனை நடைபெற்றாலும், பெண்களுக்கு எதிரான கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும், சட்டத்தில் அடிப்படையிலேயே தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதே உண்மை. எனவே பெண்களுக்கே எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனையை, உடனடியாக விசாரித்து வழங்கும் வரை இக்குற்றங்களை குறைப்பது கடினமே. தண்டனைகள் கடுமையாக்கப்படுவது மட்டுமின்றி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வையும் முழுவதுமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.