சிறப்புக் களம்

தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய ஆளுநரா?- மோடியுடன் பன்வாரிலால் சந்திப்பும் சலசலப்பும்

Veeramani

தமிழ்நாடு ஆளுநர் விரைவில் மாற்றப்படலாம் எனத் தகவல்கள் சொல்லப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் சந்தித்தார்.

டெல்லிக்கு சனிக்கிழமை பயணம் செய்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காலை 10.30 மணி அளவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பிறகு 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார். பிறகு, மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, முதன்முதலாக பிரதமர் மோடியை ஆளுநர் சந்திப்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக மத்திய அரசால் நிறைவேற்றி தரப்பட வேண்டிய கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதையும், தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட கோப்புகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அது குறித்தும் பிரதமரிடம் ஆளுநர் எடுத்து வைத்திருப்பார் என சொல்லப்படுகிறது. 7 பேர் விடுதலை மீட்பு விவகாரம் உள்ளிட்டவையும், தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையில் இடம்பெற்ற மத்திய அரசு தொடர்பான அம்சங்கள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமரிடம் பேசியிருப்பார் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல், சட்டம் - ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் விரைவில் தமிழ்நாட்டிற்கு ஆளுநர் மாற்றப்படலாம் எனத் தகவல்கள் சொல்லப்படுவதால், அது தொடர்பான சந்திப்பாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

டெல்லி பயணம் குறித்து ஆளுநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக தனது பயணம் இல்லை என்று மட்டும் அவர் கூறியிருந்தார். எனவே, அரசு மற்றும் அரசியல் ரீதியாக பன்வாரிலால் புரோஹித்தின் இந்த டெல்லி பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தற்பொழுது மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த நபர்களில் யாராவது ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

குறிப்பாக ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், மாநிலங்களவை பதவியிலிருந்து ராஜினாமா செய்த பிரேந்தர் சிங் ஆகியோரது பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நிரஞ்சன் குமார்