சிறப்புக் களம்

இனி உலக அரங்கில் உயர்ந்து பறக்கும் தமிழ்க் கொடி

இனி உலக அரங்கில் உயர்ந்து பறக்கும் தமிழ்க் கொடி

webteam

இன்று உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் பிரெஞ்ச் பேசுகிறார்கள். ஜெர்மன் படிக்கிறார்கள். ஸ்பானிஷ் படிக்கிறார்கள். ஜப்பான் மொழியில் பல தமிழர்கள் சிறந்தப் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழ் சரியாக எழுதப் படிக்க வராது என பெருமையாக பேசுகிறார்கள்.இனி வரும் காலங்களில் தமிழ் வளரவும் கல்வி புலத்தில் அது சிறக்கவும் அதற்கு ஒரு உலக அங்கீகாரம் தேவை. ஹீப்ரு மொழிக்கு இருப்பதை போல ஒரு அங்கீகாரம். லத்தின் மொழிக்கு இருப்பதை போல ஒரு கெளரவம். பாரசீகத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை போல ஒரு மரியாதை. சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படுவதைப் போல ஒரு நிதி ஒதுக்கீடு. இவை எல்லாம் தேவை என்றால் அதற்கு தரமான ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தரமான ஆய்வு இருக்கையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான முதல் படிதான் ஹார்வர்ட் இருக்கை.

இன்றைய உலகில் முதன்மையான பல்கலைக்கழகம் ஹார்வர்ட். இதில் தமிழ் மொழிக்கு என்று ஆய்வுகள் செய்வதற்கு ஓர் இருப்பிடம் தேவை. இதையே நாம் இருக்கை அமைத்தல் என்கிறோம். உலகின் மொழியியல் ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மானுடவியலாளர்கள் என பலரும் கிரேக்கம், தமிழ், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், லத்தீன், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளை செம்மொழி என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நாம் நம்புகிறோமோ இல்லையோ உலகிலுள்ள தொன்மையான மொழிகளில் தமிழ் இருக்கிறது. இந்தப் பட்டியலில் தமிழ் தவிர மற்ற ஏழு மொழிகளுக்கும் உலகின் பல்வேறு பல்கலைக்கழங்களில் இருக்கைகள் உள்ளன. அங்கே இந்த மொழிகள் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. உலக அளவில் 14 ஆயிரம் பேர் மட்டுமே பேசி வரும் ஒரு மொழி சமஸ்கிருதம் என்கிறது ஒரு புள்ளி விவரம். அதற்கு உலக அரங்கில் முக்கியத்து கொடுக்கப்படுவதற்கு இந்த இருக்கைகளே காரணம். ஐ.நா சபை உலக யோகா தினம் அறிவிப்பை வெளியிடுவதற்கு இவர்கள் தரும் அழுத்தமும் ஒரு முக்கியக் காரணம். 

தமிழ் மூத்த மொழி. முதல் மொழி. இந்தப் புகழ் எல்லாம் மேடையில் வீசுகிறது. ஆய்வில் அழிந்து வருகிறது. உ.வே.சா.வை போல, ஆறுமுகநாவலரை போல, வையாபுரிப்பிள்ளை போல, சி.வை. தாமோதரம் பிள்ளையை போல, கார்த்திகேசு சிவதம்பியை போல, அ.ச.ஞானசம்பந்தத்தை போல, கி.வ.ஜகநாதனை போல, தனிநாயக அடிகளார் போல மொழி வல்லுநர்கள் உருவாகாமல் போவதற்கு ஆய்வு நோக்குள்ள இடம் இல்லாமல் போனதே காரணம். 

தமிழின் தொன்மை இரண்டாயிரம் ஆண்டு என தமிழறிஞர்கள் கணக்கிட்டார்கள். எஸ்.வையாபுரிப்பிள்ளை அதன் காலக்கணக்கில் சில சந்தேகங்களை முன் வைத்ததுதான் தமிழ் குறித்த ஆய்வுக்கு மிக முக்கியப் பங்காற்றியது. தொடர்ந்து நடந்த வாதப்பிரதிவாதங்கள் தமிழ் உயர வழி செய்தது. அப்படியான ஆராய்ச்சிகள் இன்று தமிழ் ஆய்வு புலத்தில் இல்லை. அப்படி ஆய்வு செய்வதற்கான தமிழறிஞர்கள் வயது முதுமையால் மறைந்து வருகிறார்கள். இளம் தலைமுறையோ தமிழ் ஆய்வை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை. வெறுமனே ஆய்வு செய்வதால் அதற்கான பலன்தான் என்ன? ஆகவே அவர்கள் அந்நிய மொழி படிப்புக்களை தேடி போய் கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவுக்கு மத பிரச்சாரம், வியபாரம் மட்டுமே செய்ய வந்த வெள்ளையர்களான சீகன் பால்கு, வீரமா முனிவர், ராபர்ட் கால்டுவெல், எல்லீஸ் என பலர் அவர்கள் தொழிலை விட்டுவிட்டு தமிழுக்கு தொண்டு செய்தனர். அந்தளவுக்கு தமிழ் ஞானம் அவர்களை ஈத்தது. இந்திய மொழியில் முதல் நூலை சீகன் பால்கு தமிழில் அச்சாக்கினார். தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்திற்கு கொண்டு போனார்கள். திருக்குறளை உலகப் பொதுமறையாக மாற்றி கொடுத்தார்கள். இந்தப் பரம்பரையில் இன்று உள்ள ஒரே தமிழறிஞர் ஹோர்ஜ் எல் ஹார்ட். அவருக்குப் பிறகு உலக அரங்கில் தமிழை பேச எந்த வெளிநட்டார் முன் வருவார்கள் என தெரியவில்லை. ஆகவே உடனடியாக நாம் தமிழை உலக மொழியியல் ஆய்வுக்கு இணையாக கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு தமிழ் இருக்கை அவசியம்.

செம்மொழியாக ஒரு மொழியை அங்கீகரிக்க அந்த மொழியின் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்தாக பழமை வாய்ந்தாக இருக்க வேண்டும். அதன் தோற்றுவாய் எந்த மொழியின் சார்பிலும் கலக்காமல் தனித்து இயங்க வேண்டும். இதுவே விதி. இந்த விதிக்கு முற்றிலும் பொருந்தும் தகுதி வாய்ந்த மொழி தமிழ்.. அத்தகைய தமிழுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அனுமதி கிடைக்காமல் இருந்தது. அமெரிக்காவில் வசித்துவரும் மருத்துவர்கள் எஸ்.டி.சம்பந்தம், விஜய் ஜானகிராமன் இருவரும் அதற்கான முயற்சியில் இறங்கினர். தமிழ் இருக்கைக்கு பதிவுக் கட்டணமாக ஒரு மில்லியன் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றது ஹார்வர்ட் பல்கலைக்கழகம். அந்த முன் தொகையை இவர்கள் இருவரும் செலுத்திவிட்டனர். அதாவது ஆளுக்கு மூன்று கோடி ரூபாய். 

இருக்கை அமைக்க மொத்தம் ஆறு மில்லியன் டாலர் தேவை. அதில் ஒரு மில்லியன் செலுத்திவிட்டனர். ஐந்து மில்லியன் டாலர் இன்னும் தேவை. இதற்காக கடந்த ஓர் ஆண்டாக பல தமிழறிஞர்கள் முயன்று வந்தனர். இந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். அதை தமிழர்களின் பங்களிப்பாகச் சேர்த்து முடிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் முடிவு செய்தனர்.
பல செம்மொழிகளுக்கு இருக்கை அமைக்கும்போது அதை ஓரிரு தனி நபர்கள் சேர்ந்து நிதியளித்து அமைத்தனர். ஆனால் தமிழுக்கு அந்த மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் சேர்ந்து நிதி அளிப்பது ஒரு வகையில் பெருமைக்குரியது என்று முடிவு செய்தனர். 100 ரூபாயோ, 1,000 ரூபாயோ, லட்ச ரூபாயோ எவ்வளவு வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என அறிவித்தனர். நன்கொடைகளைப் பெற இந்தியாவுக்கான தொடர்பாளராக டாக்டர் எம்.ஆறுமுகமும், அமெரிக்கத் தொடர்பாளராக டாக்டர்கள் எஸ்.டி.சம்பந்தமும் விஜய் ஜானகிராமனும், கனடாவுக்கான தொடர்பாளராக எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் செயலாற்றினார்கள். 

அதன் விளைவாக நிதி குவிந்தது. எனினும் கிட்டத்தட்ட10 கோடி ரூயாய் பற்றாக்குறை நிலவியது. இந்த நிலையில்தான் 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது.ஆக இதன் மூலம் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இனி உலக அரங்கில் உயர்ந்து பறக்கும் தமிழ்க் கொடி.