தமிழகத்தில் கழிவுநீர் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் முடிவில்லாமல் தொடர்கதையாக சென்றுகொண்டே இருக்கிறது.
உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறது. இதில், இந்தியா வேகமாக வளர்ந்து டிஜிட்டல் இந்தியா என்ற நிலைக்கு வந்திருக்கிறது. ஆனால், இன்னும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் தான் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொடுமை. அதிலும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொடர்ந்து தொழிலாளர்கள் பலியாகிக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தாலும் மரணங்களின் எண்ணிக்கையில் மாற்றம் என்பது வந்த பாடியில்லை.
நேற்றைய தினம் கூட திருவள்ளூரின் காக்களூரில் இரண்டு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு துருப்பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக புட்லூர் பகுதியை சேர்ந்த 3 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென வெளியான விஷவாயுவில் சிக்கி வேலவன் (40) மற்றும் சந்துரு (35) ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்கள் மீட்கப்பட்டன. போதிய உபகரணங்கள் இன்றி கழிவுநீர் பணியை தொழிற்சாலை நிர்வாகம் மேற்கொள்ள வைத்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுபோன்ற போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், இதற்கு ஒரு முடிவு வந்த பாடில்லை. 5ஜி டெக்னாலாஜி, சந்திராயன் 3, பேட்டரி வாகனங்கள், மெட்ரோ ரயில்கள், அதிநவீன ராணுவம், மிரள வைக்கும் டெக்னாலஜிகள் என இந்தியா எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும், இப்படி கழிவுநீர் தொட்டியை அகற்ற ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது அவலமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எத்தனையோ நாடுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்கு ரோபோக்களை பயன்படுத்தும்போது, இந்தியாவில் மட்டும் இன்னும் ஒரு தீர்வு கிடைக்காமல் இருப்பது வருத்தமே. கேரளாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் இயந்திரம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு மிகுந்த வரவேற்பும் கிடைத்தது. ஆனால் இது அனைத்து இடங்களுக்கு சென்று சேர்ந்ததா ? என்றால் அது கேள்விக்குறி தான்.
இதற்கு காரணம் இங்கே ஒவ்வொரு நாளும் சிலர் கழிவுநீர் தொட்டியில் உயிரிழப்பது வெறும் செய்தியாக பார்க்கப்படுவது தான். இதுதொடர்பான போதிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை என்பதும், அரசும் இதனை பெரிய பிரச்னையாக நினைக்கவில்லை என்பதும் பளிச்சென்று தெரிகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல அறிவிப்புகளில் கழிவுநீரை சுத்தம் செய்ய இயந்திரங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதே உண்மை.
கழிவுநீர் தொட்டிகளில் இறக்கும் அனைவருக்குமே கட்டாயம் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் தான் உயிரிழப்பிற்கு பின்னர் மருத்துவமனை வாசல்களிலும், சாலைகளிலும் போராடிக் கொண்டிக்கின்றனர். அவர்கள் போராட்டத்தை கலைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழிகளை வழங்கினாலும், இழப்பீடுகளைக் கொடுத்தாலும், அவர்களின் அப்பாவையோ, மகனையோ, சகோதரனையோ அல்லது கணவனையோ திரும்பக்கொடுக்க முடியாது. அதற்கு இணையாக எதையுமே கொடுக்க முடியாது. 21ஆம் நூற்றாண்டில் இன்னும் எத்தனையோ வளர்ச்சிகளைக் கண்டு, பொருளாதாரத்தில் வளர்ந்து, முழுவதும் டிஜிட்டல் மயமாகினாலும், கழிவுநீர் தொட்டியை மனிதர்களே சுத்தம் செய்யும் நிலை இருக்கும் வரை ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்வது அர்த்தமற்றதாகவே இருக்கும் என மனிதநேயர்கள் கருதுகின்றனர்.