தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் Pt web
சிறப்புக் களம்

நவீன தமிழ்நாட்டின் பிறந்தநாள் இன்று.. சென்னை மாகாணம் பிரிந்த கதை!

நாளை தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடத் தயாராகிவருகிறது தமிழக வெற்றிக் கழக அரசு. இதன் வரலாற்றுப் பின்னணி என்ன... பார்க்கலாம்...

PT WEB

தமிழ் பேசும் மக்களுடைய உயிரிலும் உணர்விலும் நெடுங்காலமாக ‘தமிழ்நாடு’ எனும் ஓர்மை எப்போதும் இருந்திருக்கிறது என்றாலும், தமிழ் நிலம் பெரும்பாலும் பல பிரிவுகளாகவே ஆளப்பட்டுவந்தது. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடுவில் நாடு, கங்க மண்டலம் என்றெல்லாம் பல்வேறு நிலப் பிரிவாகவே இருந்தது. முதன் முதலாக தமிழ் நிலம் ஒரு கொடியின் கீழ் ஆட்சிக்குக் கீழ் வந்தது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான். கிபி. 915 முதல் கிபி 1014 வரையில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தார் ராஜராஜன். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழினத்தின் முதல் பேரரசாக சோழப் பேரரசு உருவானது; தமிழ் நிலம் மட்டும் அல்லாது, இன்றைய தென் இந்தியாவின் கணிசமான பகுதிகளில் படர்ந்து ஒடிஷாவில் படர்ந்து, வங்கத்தின் பாலா வரை நீண்டதோடு, கடல் கடந்தும் பறந்தது சோழக் கொடி.

Ai Created

அடுத்து வந்த அவரது மகன் ராஜேந்திரன் காலத்தில் அது மேலும் விரிந்தது. தமிழின வரலாற்றில் அதிகாரத்தின் உச்சம் தொட்ட காலம் அதுதான்! இதன் பின் அடுத்தடுத்த வந்த ஆட்சி மாற்றங்களில் மீண்டும் பல பிளவுகளானது தமிழ் மண். மீண்டும் அது ஒரு கொடிக்கு கீழ் திரட்டப்பட்டது பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில். ஆனால், சென்னை மாகாணமாக உருவெடுத்த அந்தப் பிராந்தியத்துள் இன்றைய தமிழ்நாட்டின் 100% நிலப்பரப்புடன், இன்றைய ஆந்திரத்தின் 65% நிலப்பரப்பு, இன்றைய கேரளத்தின் 33% நிலப்பரப்பு, இன்றைய கர்நாடகத்தின் 6% நிலப்பரப்பு, இன்றைய ஒடிஷாவின் 3% நிலப்பரப்பையும் உள்ளடக்கிய மாபெரும் பரப்பாக விளங்கியது. விளைவாக, அன்றைய சென்னை மாகாணத்தின் மக்கள்தொகையில் 40% பேர் மட்டுமே தமிழர்களாக இருந்தனர்; ஆட்சி அதிகாரத்தில் ஏனையோர் பங்கேற்பும் வெகுவாக இருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய குடியரசாக உருவெடுத்த பிறகு, மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் தீவிரமடைந்தன. சென்னை மாகாணத்தின் தலைநகரமாக இருந்த சென்னை நகரை மையமாகக் கொண்டு அரசியல் கொந்தளிப்புகள் வெடித்தன. குறிப்பாக, ஆந்திரத்தைப் பிரிப்பதற்காகப் பொட்டி ஸ்ரீராமலு 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த நிகழ்வு, இந்திய அரசை அதிரவைத்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஃபசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க உத்தரவிட்டது நேரு அரசு. நாடு முழுவதும் பயணித்த இக்குழு, மொழிவாரி பெரும்பான்மை அடிப்படையில் எல்லைகளை வரையறுத்தது. இதன் விளைவாக, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், ஒடிஷா மற்றும் எஞ்சிய சென்னை மாநிலம் என்று 5 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது சென்னை மாகாணம்.

Ai Created

இந்த எல்லை நிர்ணயம் முழுமையாக நடைமுறைக்கு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் 1956, நவம்பர் 1. இந்த நாளையே அன்று புதிதாகப் பிறந்த எல்லா மாநிலங்களும் மாநில நாளாக கொண்டாடுகின்றன. இந்த மொழிவாரிப் பிரிவினையின்போது, தமிழர்கள் செறிந்து வாழ்ந்த தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், திருப்பதி, கொல்லேகல் போன்ற சில பகுதிகள் எல்லை மாற்றங்களால் அண்டை மாநிலங்களுக்குச் சென்றது தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. ஆனால், பல நூற்றாண்டுகளுக்குப் பின் தமிழ் மக்கள் தமக்கென்று தனிப் பெரும்பான்மையுடன் ஓர் அரசைப் பெற இந்த மொழிவாரிப் பிரிவினைதான் உறுதுணையாக அமைந்தது. அந்த வகையில், ஒரு குடியரசாக நவீன தமிழ்நாடு பிறந்த நாள் நவம்பர் ஒன்றே ஆகும்.

ஆனால், தமிழ் நிலத்துக்கு அப்போதைய மத்திய அரசால் 'தமிழ்நாடு' என்ற பெயர் அன்று உடனே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 'மதராஸ் மாநிலம்' என்றே அது அழைக்கப்பட்டது. நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில்தான், 1967 ஜூலை 18 அன்று தாய்த்திருநாட்டுக்கு தமிழ்நாடு எனும் வரலாற்றுப் பெயரை மீட்டெடுத்துச் சூட்டப்பட்டது. திராவிட இயக்கத்தின் பெரும் சாதனைகளில் ஒன்று இது என்ற அளவில், பெயர் சூட்டிய நாளான ஜூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு அரசு நீண்ட காலமாகக் கொண்டாடிவந்த நிலையில், ஒரு குழந்தையின் வரலாற்றில் பெயர் சூட்டு நாளைப் போன்றே பிறந்த நாள் கொண்டாட்டமும் முக்கியமானது எனும் குரலை நீண்ட காலமாக எழுப்பிவந்தன தமிழ் இயக்கங்கள்.

Ai Created

இச்சூழலில், 2019 முதலாக, "நவம்பர் 1 இனி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்" என்று அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. இடையில், 2021-26இல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி காலகட்டத்தில், "ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாப்படும்" என்று அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவந்த நிலையில், இப்போது இரு நாட்களையும் கொண்டாடலாம் என்று அறிவித்திருக்கிறது விஜய் தலைமையிலான தவெக அரசு. நாட்களை அனுசரித்தல் கொண்டாட்டங்களுக்கு மட்டும் அல்ல; வரலாற்றை நினைவுகூர்ந்திடவும்தான். நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை நினைவுகூர்ந்திடுவோம்!