திமுக தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறாரா ஸ்டாலின் என கேட்பது இப்போதைக்கு முக்கியமானதாக இருக்கும்.
திமுக தலைமையில் இன்று நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாகவே நடைபெற்றுள்ளது. திமுக அழைப்பு விடுத்ததன் பேரில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் தாமாக முன்வந்து அடைக்கப்பட்டன. ஏப்ரல் 3ம் தேதி கடையடைப்பு என்று வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்ட போதும் அன்று பெரும்பாலான கடைகள் திறந்தே இறந்தன. ஆனால், இன்றைய முழு அடைப்புக்கு மக்கள் மத்தியிலும், வணிகர் சங்கங்கள் மத்தியிலு வரவேற்பு இருந்தன. திருப்பூரில் விசைத்தறி சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை காட்டிலும் இன்றைய போராட்டங்களுக்கு பல மடங்கு வரவேற்பு இருந்தது. இருப்பினும், தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓரளவுக்கு தடையில்லாமல் இயங்கின.
போராட்டம் என்ற முறையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தமிழகம் முழுவதும் இன்று பெரும் வீச்சுடன் போராட்டங்களை நடத்தியுள்ளன. குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், நெல்லை, சேலம் ரயில் நிலையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. சேலத்தில் ரயில் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதேபோல் சில இடங்களில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது துருதிருஷ்டவசமானது. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக,திராவிடர் கழகம், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 10 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டதாக ஸ்டாலினே தெரிவித்து இருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசுக்கு கண்டனம், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஒரே முழக்கம் இதுதான்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களுக்கு சென்னையில் நடைபெற்ற போராட்டம் முழுஅடைப்புக்கு முத்தாய்ப்பாய் அமைந்துவிட்டது. முதற்கட்டமாக காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மெரினாவை நோக்கி பேரணியாக சென்றனர்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இரண்டு இடங்களில் போலீசார் அமைத்திருந்த பேரி காட்களை மீறி சென்றனர். இந்தப் பேரணியில் ஒரு வேகம் காணப்பட்டது. மறியல் பேரணியாக மாறியதில் இருந்தே பதட்டம் தொற்றிக் கொண்டது. ஏனெனில் யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. வழக்கமான மறியல் போராட்டமாகவே அதுவும் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்திருப்பார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின.
5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பேரணியாக திரண்டு சென்று உழைப்பாளர் சிலை முன்பு மெரினா சாலையில் திடீர் சாலை மறியலில் இறங்கினார். ஸ்டாலின், திருமாவளவன், கீ.வீரமணி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நடுவில் உட்கார்ந்திருக்க அவர்களை சுற்றிலும் கட்சிகளின் தொண்டர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் இந்த மறியல் நீடிக்கவில்லை. ஸ்டாலினை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். மற்ற தலைவர்களை கைது செய்தனர். முக்கிய தலைவர்களை கைது செய்ததால் எல்லோரும் களைந்து சென்றுவிடுவார்கள் என்றுதான் போலீசார் நினைத்திருப்பார்கள். ஆனால், கைதுக்கு பின்னர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தது.
கைது செய்யப்பட்டு தலைவர்கள் வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேனை கட்சிகளின் தொண்டர்கள் ஒரு வகையில் சிறை பிடித்தனர். அதனால், அங்கிருந்து அந்த வேனை நகர்த்த கூட முடியவில்லை. தொண்டர்கள் வேனின் மேல் ஏறிக் கொண்டனர். அதேபோல் வாகனத்தின் எல்லா பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தனர். இதனால், கைதுக்கு பின்னரும் போரட்டம் தொடர்ந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. நீண்ட நேரம் வாகனம் உழைப்பாளர் சிலைக்கு அருகிலேயே இருந்தது. நகரவேயில்லை. ஒருவழியாக நீண்ட நேரம் கழித்து போலீசார் மெல்ல மெல்ல அந்த இடத்தில் இருந்து வேனை நகர்த்தினார்கள். சுவாமி சிவானந்த சாலை வழியாக வேன் சென்றது. ஆனால், தொண்டர்கள் வேனைவிட்டு இறங்கவே இல்லை. வேனுக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் சென்றனர். தொண்டர்கள் படைசூழ மீண்டும் ஒரு பேரணி போலவே இதுநடந்தது.
முன்பு கூட அண்ணாசாலையில் இருந்து மெரினா வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் தான் பேரணி நடைபெற்றது. ஆனால், பின்னர் நடைபெற்ற இந்தப் பேரணி சிந்தாதரிப்பேட்டை தாண்டி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இருப்பினும் கூட்டம் சிறிதளவும் குறையவேயில்லை. அண்ணாசலையில் தொடங்கிய முழக்கங்கள் மெரினா, சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர் வரை இடைவிடாமல் ஒலித்தது. கடைசியாக திருமண மண்டபம் ஒன்றில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
திமுக தனியாகவும், தோழமை கட்சிகளுடனும் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால், இதுவரை ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. நிறைய நேரங்களில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பல போராட்டம் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை முன்பு பள்ளி மாணவர்கள் போல் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும், சட்டை கிழிய சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதும், ஸ்டாலினுக்கு ஒரு நற்பெயரை தரவில்லை.
ஸ்டாலின் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய போராட்டம் நல்ல அரசியல் போராட்டமாக அமைந்தது. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் திமுகவுக்கு இணையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிக அளவில் கலந்து கொண்டனர். பெரும்பாலான போராட்டங்களில் திமுக, விசிக கொடிகளே காணப்பட்டன. சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் அதிக அளவில் கலந்து கொண்டனர். மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சார்ந்தவர்களும் கணிசமான அளவில் கலந்து கொண்டனர். போராட்டம் வெற்றிகரமாக நடைபெற எல்லோருடைய பங்களிப்பும் முக்கியம் என்பதில்லை சந்தேகமே இல்லை. இருப்பினும் போராட்டத்தை ஒருங்கிணைத்த திமுகவும், அதன் செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமே. அதனளவில் பழைய விமர்சனங்களை ஸ்டாலின் தவிடுபொடி ஆக்கியுள்ளார். ஆனால் இதனால் பலன் உண்டா என்பதை இப்போதே நாம் கூற முடியாது.