சங்க இலக்கியம் குறித்து நிறைய எழுதப்பட்டு விட்டது. இருந்தாலும் காட்சி ரீதியாக இணையத்தில் சுலபமாக கிடைக்கும் வகையில் இருந்தால் பரவலாக எல்லோரையும் சென்று சேரும் என உணர்ந்து ஆதி தமிழ் குடியின் பெருமைகளை பேசும் இலக்கியங்களை அதன் விளக்கத்தோடு யூட்யூப் சேனலில் அப்லோட் வருகிறார் மீனாட்சி தேவராஜ்.
“சென்னை தான் என் பூர்வீகம். வழக்கமாக பொறியியல் படித்து முடிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரே டெம்ப்ளெட் ரகத்தில் தான் வேலை அமையும். எனக்கும் அதே தான்.
சென்னையில் சாப்டவேர் இன்ஜினியராக எனது கேரியரை ஆரம்பித்தேன். சில வருடங்கள் தீவிரமாக வேலை செய்ததன் பிரதிபலனாக அமெரிக்காவில் இயங்கி வந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு எந்நேரமும் வேலை சம்மந்தமாகவே சிந்தித்து, இயங்கி வந்த எனக்கு திருமணம், குழந்தை என குடும்ப உறவுகளின் பிணைப்பால் அதிலிருந்து விலகி வேண்டிய கட்டாயம் உருவானது. என் கணவர் அமெரிக்காவில் வேலை செய்ய, நான் வீட்டை கவனித்துக் கொண்டேன். அந்த நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க விரும்பினேன்.
நிறைய புத்தகங்களை வாசித்தேன். தொடர்ந்து சிலப்பதிகாரம் உட்பட பல தமிழ் நூல்கள், காப்பியங்கள், இலக்கியங்களை வாசித்தேன். அப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்தது. எனக்கு தமிழ் நூல்களை படிக்க படிக்க எனது பேஸ்புக் பக்கத்தில் அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புகளை தமிழில் எழுத ஆரம்பித்தேன். பேஸ்புக் நட்பு பட்டியலில் தமிழ் தெரியாத நண்பர்களும் இருந்ததால் அவர்களிடத்தில் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள அதிசய மற்றும் அற்புதமான தகவலை பலதரப்பினரிடம் கொண்டு செல்வதற்காக ஆங்கிலத்திலும் எழுத ஆரம்பித்தேன்.
தொடர்ச்சியாக யூட்யூபிலும் சங்க தமிழ் இலக்கியங்களை கொண்டு செல்லும் முயற்சியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் சிலப்பதிகார தொகுப்பில் வரும் ஆய்ச்சியர் குரவை பகுதி பாடலுக்கான பொருளை படங்களோடு, பின்ணணியில் குரல் கொடுத்து வீடியோ ஒன்றை உருவாக்கி எனது யூட்யூப் சேனலில் அப்லோட் செய்தேன்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தமிழகர்களின் கலாச்சாரத்தோடு தொடர்புடைய, இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வீடியோவாக அப்லோட் செய்தேன். அதற்கு உலகளவிலான தமிழ் மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
ஏறுதழுவுதல், கோலம் போடுதல், திருப்பாவை, திருவெம்பாவை, பாசுரங்கள், திருப்பள்ளியெழுச்சி, நாச்சியார் திருமொழி, அபிராமி அந்தாதி என வெவ்வேறு வகையிலான தமிழ் நூல்களை எளிய விளங்ககளோடு யூட்யூபில் வெளியிட்டுள்ளேன்.
உணவு, பூ, மிருகம், ஆடை, அணிகலன்கள், விளையாட்டு, கலாச்சார பழக்க வழக்கங்கள் என தமிழ் இலக்கியங்களுள் புதைந்துள்ள அனைத்தையும் படம் பிடித்து காட்டும் கலிடோஸ்க்கோப்பாக எனது முயற்சி இருக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்காக நிறைய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். கடந்த டிசம்பரில் (2018) சென்னைக்கே மீண்டும் வந்துவிட்டது எனது பணியை துரிதமாக மேற்கொள்ள உதவும் என நம்புகிறேன். பத்துப்பாட்டு, கலித்தொகை, புறநானூறு மாதிரியான நூல்களுக்கும் வீடியோ மூலம் யூட்யூப் ஊடாக விளக்கம் கொடுக்க உள்ளேன். தற்போது அதற்கான வேலைகளை செய்து வருகிறேன்” என்கிறார்.
இன்றைய தமிழரின் கலாச்சாரத்தோடு ஒன்றியுள்ள பழக்க வழக்கங்களை சங்க இலக்கியங்களோடு தொடர்பு செய்து பேசும் அவரது வீடியோக்கள் ஒவ்வொன்றுமே கிளாசிக் ரகம். நிலம், கலாச்சாரம், வாழ்வியல், கலை என தமிழ் இலக்கியங்களில் செய்யுளாக புதைந்துள்ள விஷயங்களை விவரணையாக சொல்கின்றன அவரது வீடியோக்கள்.