பழைய சென்னை
பழைய சென்னை PT
சிறப்புக் களம்

'Madras Day' .. ”இன்றும் இளமையாய் இருக்கிறது சென்னை!” - திரைப்பிரபலங்களின் இனிமையான அனுபவங்கள்!

Jayashree A

ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று சென்னை தினம் அனுசரிக்கப்படுகிறது. சென்னை தினத்தையொட்டி சென்னையை குறித்த தங்களது அனுபவங்களை திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் புதிய தலைமுறைக்கு பகிர்ந்து கொண்டனர். அவற்றை பார்க்கலாம்.

”சென்னையை இன்றும் இளமையாய் பார்க்கிறேன்” - இயக்குநர் சந்துரு மாணிக்கவாசகம்

”முப்பது வருடங்களுக்கு முன் திரைத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற முயற்சிகளோடு திருச்சியிலிருந்து கிளம்பிய என்னை வரவேற்ற அதே சென்னையை இன்றும் இளமையாய் பார்க்கிறேன்.

சாலிகிராமம், வடபழனி, அண்ணா நகர், தி.நகர் என என் கால்கள் ஓயாமல் நடந்த இடங்கள் ஏராளம். இன்றும் சலிக்காமல் அதே அழகுடன்.. இன்னும் சொல்லப்போனால் பலமடங்கு மெருகேறிய சென்னையைப் பார்க்கிறேன்.

சந்துரு இயக்குனர்

தனிமனிதனாக வந்திறங்கியவனுக்கு, மகிழ்ச்சியும் பெருமையும் நிறைந்த நிமிடங்கள், எதிர்பாராத பிரச்சனைகள், ஆன்மீக நாட்டம் என அனைத்தையும் கலவையாய் கொடுத்தது இந்த சென்னை. வாழ்வின் இரு பக்கங்களையும், விதவிதமான மனிதர்களையும் அறிமுகப்படுத்தி வைத்து, வாழ்க்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்த இந்த அழகிய சென்னை, ஒரு எழுத்தாளனாகவும் இயக்குநராகவும் என்னை அடையாளப்படுத்தியிருக்கிறது .

இன்று எனது குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியைக் கொடுத்து, நற்பணிகளில் அமர்த்தி, நான் பயணித்த சாலைகளில் தனியே பயணித்திட அவர்களுக்கும் வழி காட்டிக் கொண்டிருக்கிறது அன்பு நிறைந்த சென்னை.

மனம் நிறைந்த, மகிழ்ச்சியான சென்னை தின நல்வாழ்த்துகள்..!”

”ஹாப்பி சென்னை டே... இதை சொல்வதற்கு எனக்கு உரிமை அதிகமாக உள்ளது” - இயக்குநர் ரமேஷ் கண்ணா

”ஹாப்பி சென்னை டே... இதை சொல்வதற்கு எனக்கு உரிமை அதிகமாக உள்ளது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தான். கோடம்பாக்கம் அபிபுல்லா ரோடு பஸ்ஸுல்லா ரோடு ஏரியா தான் சினிமாவின் வாடிகன்சிட்டி.

இந்த ஏரியாவில் தான், சாவித்திரி, ஜெமினி கணேசன், ஏ.வி.எம் ராஜன், புஷ்பலதா, எஸ் பி ரங்காராவ், விகே ராமசாமி, ஓ ஏ கே தேவர், கிருஷ்ணா ஸ்ரீதேவி எல்லாரும் இங்கு தான் இருந்தார்கள்.

ரமேஷ் கண்ணா

எனக்கு இளைப்பாறும் ஒரே இடம் பீச் தான். என் இடத்திலிருந்து பீச் வரைக்கும் தினமும் நான் நடந்து செல்வேன். சென்னை என்னை தாலாட்டியது என்று கூறுவேன். எனது சிறுவயதில், சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் zoo ஒன்று இருந்தது. அங்கு நாங்கள் சென்று புலியை பார்த்து விட்டு வருவோம். இப்படி நிறைய விஷயங்கள் சென்னை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்பொழுது இருக்கின்ற வள்ளுவர் கோட்டத்தை கலைஞர் காலத்தில் கட்டியது அதை பார்த்து இருக்கிறேன். அதே போல் ரிக்க்ஷாகாரர்களுக்கு எம்ஜிஆர் ரெயின் கோட் கொடுத்ததை பார்த்து இருக்கிறேன். இருந்தாலும் இன்றைய கோடம்பாக்கத்தின் அழகு மாறவே இல்லை. 1000 நாடகம் நடித்து ஜனாதிபதி கையால் பரிசு வாங்கியுள்ளேன். சென்னை நகருக்கு தலைநகரம் கோடம்பாக்கம்” என்று கூறியுள்ளார்.

”சென்னை என்றால் எனக்கு மிகவும் குஷி” - நடிகர் சின்னிஜெயந்த்

”இன்று சென்னை தினம். நான் சென்னை புதுபேட்டை கார்டன்ஸ் தெருவில் தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே. சென்னை என்றால் எனக்கு மிகவும் குஷி. அந்த காலத்தில் ஒரு பாட்டு வந்தது. நாகேஷ் பாடியிருப்பார், ”மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்” என்று அதைக்கேட்கும் பொழுது எங்களுக்கு மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும். ”

சின்னி ஜெயந்த்

”அப்பொழுது சென்னையை மெட்ராஸ் என்று தான் அழைத்தார்கள். மியூசிக் அகடமி எதிர்புறம் நிறைய மைதானங்கள் இருந்தது. சோழா ஹோட்டல் இருந்த இடம் முன்பு மைதானமாக இருந்தது. அந்த மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். இப்படி நிறைய செய்தியை சொல்லிக்கொண்டே போகலாம். நான் படித்த பள்ளி ராமகிருஷ்ணா ஸ்கூல், பிறகு நியூ காலேஜில் பயின்றேன். தரமணியில் ஃப்லிம் டெக்னாலஜி படித்தேன். தரமணி அந்த காலத்தில் மைதானமாக இருந்தது. இப்படி பல மைதானங்கள் உருமாறி இன்று சென்னை ஹைடெக் சிட்டியாக மாறிவிட்டது. சென்னைடே .... எங்களுக்கு ஒரு பிறந்த நாள் என்றே சொல்லலாம்” என்கிறார் சின்னி ஜெயந்த்.

”வாழவந்த இடத்தில் சொந்த ஊர் பெருமை பேசும் திருமகளே.. வளர்ப்பு தாயைப்போல மன்னிக்கிறது நகரம்” -  இயக்குநர் சீனு ராமசாமி

”வாழவந்த இடத்தில் சொந்த ஊர் பெருமை பேசும் திருமகளே... வளர்ப்பு தாயைப்போல மன்னிக்கிறது நகரம்.” இது சென்னைக்கான எனது கவிதை. சினிமாவில் சென்னையை பார்த்து “மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்...” என்ற நாகேஷ் பாடுவதை பார்த்து, இதன் மேல் காதல் கொண்டு தான் சென்னைக்கு வந்தேன்.

சீனு ராமசாமி

என்னை மாதிரி புலம் பெயர்ந்து வந்தவர்களை ஜாதி மதம் பார்க்காமல் அணைத்துக்கொண்ட ஊர் சென்னை. எனது தகுதிக்கும் திறமைக்கும் தொழிலை தந்தது இந்த ஊர். என்னுடைய படைப்புகளை மக்களிடையே கொண்டு போய் சேர்த்தது இந்த ஊர் தான். அப்படிபட்ட சென்னை எனக்கு ஸ்பெஷல்.

”இங்கு இல்லாதவர்களும் இருப்பவர்களும் சேர்ந்து வாழலாம்.”- இயக்குநர் ராசி அழகப்பன்

“ஹாப்பி சென்னை டே” “கிழக்கு கடற்கரை சாலையில் தான் நான் இருக்கிறேன். இங்கு இல்லாதவர்களும் இருப்பவர்களும் சேர்ந்து வாழலாம். வந்தாரை வாழவைக்கும் சென்னை. ஒருநாளைக்கு 50 ரூபாய் இருந்தால் போதும் சென்னையில் வாழ்க்கை நடத்திவிடலாம்.

ராசி அழகப்பன்

இங்கு கலாசாரம், ஜாதி, மதம் பேதம் எதுவும் கிடையாது. வடசென்னை தான் சென்னையின் ஆதி இடம். அந்த இடத்தில் மக்கள் பேசும் பேச்சில் தான் அன்பு அதிகமாக இருக்கும். அதன்பிறகு மத்திய சென்னை வட சென்னை போன்றவை உருவானது. நகரம் பெருத்து இருப்பதைப்போல இங்கிருப்பவர்களின் இதயமும் விரிந்து இருக்கிறது” என்கிறார் வாஞ்சையோடு.