‘தனிமையிலே இனிமை காணமுடியுமா?’ என்ற கண்ணதாசனின் வரிகள் நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானதே. தனிமையில் இனிமை இருக்காது என்பது உண்மைதான். ஆனால் அவசர அவசரமான இந்த நவீன காலகட்டத்தில் சில நேரங்களில் தனிமையை மனம் நாடுகிறது. அந்த தனிமை மனதை அமைதிப்படுத்தி, ஒருவித மன நிம்மதியை தருகிறது என்கின்றனர் பலர். அதேசமயம், சுற்றி ஆயிரம்பேர் இருந்தாலும் தனிமை உணர்வு, அதாவது தான் மட்டும் தனித்து விடப்பட்டதைப் போன்ற உணர்வு பலருக்கு இருக்கும். சிலருக்கு தனியாக இருந்தால் காரணமற்ற ஒருவித பயம் உருவாகும். தனியாக இருக்கும்போது பயமாக இருக்குமே என்று எண்ணியே பயப்படுவோரும் உண்டு. இந்த மனநிலையைத்தான் ‘ஆட்டோஃபோபியா’ என்று அழைக்கின்றனர்.
ஆட்டோஃபோபியா அல்லது மோனோஃபோபியா என்று அழைக்கப்படுகிற இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு ஒருவித இனம்புரியாத கவலை ஏற்படுகிறது. இவர்கள் வீடு போன்ற அனைவரும் ஒன்றாக இருக்கக்கூடிய இடத்திலும்கூட இந்த தனிமையை எண்ணி கவலைக்கொள்வர். ஒருவித பதற்றமும், பயமும் தொற்றிக்கொள்வதால் எப்போதும் தனக்கு பக்கத்தில் யாராவது ஒருவர் இருக்கவேண்டும் என நினைப்பர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு உருவாகும்.
தன்னியக்க நோய் என்று அழைக்கப்படுகிற இந்த ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்ரீதியாக பாதுகாப்பாக இருப்பது தெரிந்தாலும் மனதளவில் பயத்துடனேயே இருப்பர். உதாரணத்திற்கு இவர்களுக்குள், வீட்டிற்கு திருடர்கள் வந்துவிடுவார்களோ, வெளியே செல்லும்போது தெரியாத நபர் நம்மை தாக்கிவிடுவார்களோ, நம்மை யாரும் நேசிக்கவில்லையே, நாம் யாருக்கும் பிரயோஜனமாக இல்லை, திடீரென வித்தியாசமான சத்தம் கேட்கிறதே என்பதுபோன்ற எண்ணங்கள் அடிக்கடி வந்துபோகும்.
ஆட்டோஃபோபியாவின் அறிகுறிகள்
இது ஒருவித தேவையில்லாத கவலை என்றே மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தன்னுடன் யாராவது ஒருவர் இருக்கும் வரையும் சாதாரணமாக தைரியமாக செயல்படும் ஒருவர் தனியாக இருக்கும்போதும், தனியாக இருக்கவேண்டுமே என்பதை நினைக்கும்போதும் அவருடைய ஆழ்மனதிலிருந்து ஒரு பதற்றத்துடன் கூடிய பயம் எழுகிறது.
தனிமை உணர்வும், தனிமையை குறித்த பயமும் ஒன்றல்ல. சிலருக்கு சுற்றிலும் நிறையப்பேர் இருந்தாலும் ஒரு தனிமை உணர்வு மேலோங்கும். சிலருக்கு எல்லோராலும் ஒதுக்கப்படுவது போன்ற எண்ணத்தால் தனிமை உணர்வு ஏற்படும். ஆனால் அவர்களுக்குள் சோகமும், கவலையும் இருக்குமே தவிர பயம் இருக்காது. அதேசமயம் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதற்றத்துடன்கூடிய பயத்தால்தான் கவலையே உருவாகும்.
ஆட்டோஃபோபியாவால் பாதிக்கப்படுபவர்கள் மனநல நிபுணரை அணுகி ஆலோசனைப் பெறுவதே சிறந்தது. பயத்தின் தன்மை மற்றும் அளவு எவ்வளவு என்பதை மனநல நிபுணர்கள் பாதிக்கப்பட்டவருடன் உரையாடி கண்டறிந்து அதிலிருந்து மீண்டு வருவதற்காக சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார்கள். இந்த பிரச்னை நபருக்கு நபர் மாறுபடுவதால் பயத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் கட்டாயம் நிபுணர் ஆலோசனைப் பெற்று அதிலிருந்து மீண்டுவருவதே நல்லது.
> முந்தைய அத்தியாயம்: ஃபோபியா பலவிதம்: 'க்ரோமோஃபோபியா' - அச்சுறுத்தும் நிறங்களும், கேரக்டர் கூறும் வண்ணங்களும்!