பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க குழு அமைத்துள்ள உச்ச நீதிமன்றம், அந்தச் சிறப்பு வல்லுநர் குழு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அது குறித்த விவரம் இதோ...
இந்திய குடிமக்களின் அலைபேசிகளில் அல்லது பிற தொழில்நுட்ப சாதனங்களின் சேமிக்கப்பட்ட தரவுகளை எடுக்கவும், உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும், அவர்கள் தொடர்பான தரவுகளை டவுன்லோடு செய்யவும் இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதே இந்தக் குழுவின் முக்கியப் பணி.
இத்தகைய உளவு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட வேண்டும்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் இத்தகைய உளவு தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில், இதைத் தடுக்க அல்லது கண்காணிக்க மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது சம்பந்தமான விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
இந்திய அரசு இந்த பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியக் குடிமக்களை உளவு பார்த்ததா? அப்படி உளவுபார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் கீழ், எந்த விதிமுறைகளின் கீழ் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்திய நாட்டின் குடிமக்கள் மீது ஏதேனும் ஓர் உள்நாட்டு நிறுவனம் இத்தகைய உளவுத் தாக்குதலை செய்திருந்தால், அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதையும் இந்தக் குழு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன்படி, எழுந்துள்ள உளவுத் தாக்குதல் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தற்பொழுது உள்ள சட்டம் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான மற்றும் தனி உரிமையை பாதுகாப்பதற்கான புதிய சட்டம் அல்லது சட்டத் திருத்தங்களை செய்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கலாம்.
சட்டவிரோதமாக இந்திய குடிமக்களை உளவு பார்க்கும் செயல்முறையை தவிர்க்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்கலாம்.
இணையவழி தாக்குதல்களாலான சைபர் அட்டாக்குகளை கட்டுப்படுத்துவதற்கான முழு தொழில்நுட்பமும் அடங்கிய தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் யோசனைகளை முன்வைக்கலாம்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த ஒரு யோசனையையும் கருத்துகளையும் அறிவுறுத்தல்களையும் இந்த குழு வழங்கலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திக் கட்டுரைகள்: