பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதா என்பதைக் கண்டறிய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பின்புலம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன்: பத்திரிகையாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரையில் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் உளவு மென்பொருள் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட குழுவிற்கு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமை தாங்குகிறார். இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டவர்.
1946-ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிறந்த இவர், 1968-ஆம் ஆண்டு வழக்கறிஞர் பட்டம் பெற்றார். 1993-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றத் தொடங்கியவர், 2004-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, கிருஷ்ணா கோதாவரி நதி நீர் பிரச்னை வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளை இவர் கையாண்டுள்ளார். ஓய்வு பெற்றதற்குப் பிறகும் பல்வேறு விவகாரங்களை விசாரிக்கும் குழுவிற்கு தலைமை ஏற்றிருந்த இவர், தற்பொழுது விவகாரத்திற்கும் தலைமை ஏற்றுள்ளார்.
அலோக் ஜோஷி: இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொருவர் அலோக் ஜோஷி. 1976-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர், இந்திய புலனாய்வு அமைப்பின் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அமைப்பின் செயலாளராக இருந்த இவர், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
சந்தீப் ஓபராய்: மூன்றாவதாக, சைபர் தொழில்நுட்பத்தில் வல்லுநரான சந்தீப் ஓபராய், ஐஎஸ்ஓ சர்வதேச மின்னணு தொழில் நுட்ப கமிஷனின் குழுவின் தலைவராக உள்ளார். சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான சைபர் தொழில்நுட்ப வல்லுநரான இவர், டிசிஎஸ் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு துறையின் தலைவராக இருந்துள்ளார்.
உறுதுணைபுரியும் மூவர் குழு: இந்த மூன்று பேர் கொண்ட குழுவிற்கு உதவுவதற்காக மற்றொரு 3 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல டிஜிட்டல் தடயவியல் வல்லுநரான குஜராத் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் நவீன் குமார் சவுத்ரி இடம்பெற்றுள்ளார். இவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் பணிபுரிந்து வருபவர். மேலும் சர்வதேச அளவில் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
கேரளாவில் உள்ள அமிர்தா விசுவ வித்யாபீடம் பொறியியல் கல்லூரியின் பேராசிரியரான பிரபாகரன், தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை மேற்கொள்ள உள்ள 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் அனுபவம் பெற்றவர். இவர் கணிப்பொறி அறிவியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
ஐஐடி மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்வின் அணில் குமாஸ்தே, இந்தத் தொழில் நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்த துறை சம்பந்தமாக மூன்று புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இந்தத் துறை சார்ந்து பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
| தொடர்புடைய செய்திக் கட்டுரை: உளவு விவகாரம்: விசாரணைக் குழுவை அமைத்ததுடன் 'வெளுத்து வாங்கிய' உச்ச நீதிமன்றம் |