இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று உயர்படிப்பு மேற்கொள்ளும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. வெளிநாடு என்றாலே இந்தியர்களுக்கு மோகம் என்பதால் , கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் தவற விடாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளிநாடு செல்லும் பழக்கத்தில் கல்வியும் ஒட்டிக் கொண்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் இப்போது வெளிநாட்டில் படித்தவர்களாக வலம் வருகிறார்கள். இதை ஏன் மாற்றக் கூடாது என எண்ணியதன் விளைவுதான் “Study In India” திட்டம்.
முன்னதாக மேக் இன் இந்தியா (Make In India) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, வெளிநாட்டு நிறுவனங்களை , இந்திய பெரும் முதலாளிகளையும் இந்தியாவில் தொழில் தொடங்கவும், அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் உற்பத்தியை உள்நாட்டில் மேற்கொள்ளவும் முயற்சி எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் 1 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் படிக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.300 கோடி திட்ட மதிப்பீட்டில் சுமார் 25 நாடுகளை சேர்ந்த மாணவர்களை ஈர்க்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு மற்ற நாடுகளின் உற்பத்தி நிலவரம், பொருளாதார நிலை, வேலை வாய்ப்புகளை கணித்து அதன் அடிப்படையில் படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின்படி, 35 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படித்து வருகின்றனர். இவர்களை அதிகரிக்கும் நோக்கிலும், குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்த மாணவர்களை ஈர்க்கும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இதற்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் இதர 115 கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறூ சேர்க்கும் போது வெளிநாட்டு மாணவர்களுக்கென நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு , மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தியாவை பொறுத்தவரை அண்டை நாடுகளான நேபாளம், ஆப்கனிஸ்தான்,பூடான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். அதே போல் கல்விச் சுற்றுலா என்றா பெயரில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருவது அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி மத்திய அரசு தொடங்க உள்ள அடுத்த திட்டமே “இந்தியாவில் படியுங்கள்” – “ Study In India”