திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் வசிப்பவர் காஞ்சனா. கணவரை இழந்த இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். பதினேழு வயது நிரம்பிய மூன்றாவது மகனான பிரதீப், பிளஸ்-2 செல்கிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் அவருக்கு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன. அதற்காக தனது தாயார் காஞ்சனாவிடம் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.
பிறகு வாங்கித் தருவதாக காஞ்சனா சமாதானம் செய்துள்ளார். இதில் சமாதானம் அடையாத பிரதீப் தனது தாயிடம் கோபித்துக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றுவிட்டார். ஆறுதல் கூறிய பிரதீப்பின் நண்பர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார். நேற்று மீண்டும் வீட்டைவிட்டு வெளியே சென்ற பிரதீப்பை பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காந்தி கிராமம் அம்பாத்துரை இடையிலான ரயில்வே பாதையில் பிரதீப் இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க செல்போன் வாங்கி தராததால் தற்கொலை என்ற விஷயம் உளவியல் ரீதியாகவும் பார்க்கப்பட வேண்டும். இது குறித்து உளவியல் நிபுணர் நப்பின்னை சேரன் கூறும்போது" பொதுவாகவே பள்ளிக் கல்லூரி மாணவர்களைப் பொருத்தவரை தன் நண்பர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி தானும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பெற்றோர்கள் நல்லது கெட்டது எது என எடுத்துக் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்காது. Peer Acceptance என்று சொல்லப்படுகிற, நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற நிர்பந்த மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் இப்போதுள்ள இளைஞர்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட வயதில் தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த தன் நண்பர்கள் வைத்திருப்பதைப் போலவே தனக்கென சில பொருள் களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்"
மேலும் " பெற்றோர்களும் இந்த மனநிலைக்கு முக்கிய காரணம். சிறிய வயதிலிருந்தே தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக எதற்கும் நோ சொல்லாமல் கேட்டவற்றை எல்லாம் வாங்கிக்கொடுப்பது. மற்றொன்று பிற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முன்னால் தான் தாழ்ந்துபோகக்கூடாது என்ற எண்ணமும் காரணம். பின்பு சிறிய வயதில் தான் ஆசைப்பட்டது கிடைக்காமல் போனதால் தன்னுடைய குழந்தைக்கு அப்படி நடக்கக்கூடாது என எல்லாவற்றையும் வாங்கிக்கொடுப்பது. சிறிய வயதிலிருந்தே ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்த குழந்தைகளுக்கு நோ என்ற பதிலை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருப்பதில்லை." என்கிறார் நப்பின்னை சேரன்
தொடர்ந்து பேசிய அவர் "பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்களுடைய இல்லாத சூழ்நிலையை எடுத்துக் கூறுவதில்லை. பல நேரங்களில் குழந்தை ஆசைப்படுகிறதே என கடன் வாங்கி செய்யும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவசியம் ஆடம்பரம் என்ன என்பதற்கான வித்தியாசத்தை உணருவதே இல்லை. சில பெற்றோர்கள் இவ்வளவு மார்க் எடுத்தால் இதை வாங்கித் தருகிறேன் என்று வாக்குக்கொடுத்து பிள்ளைகளைப் படிக்கச் சொல்லுவார்கள். ஆனால் மதிப்பெண் பெற்றவுடன் வாங்கித் தராமல் மறுத்துவிடுவார்கள். இதனால் குழந்தைகளுக்கு கோபத்துடன் கூடிய ஏமாற்றம் ஏற்படுகிறது. இப்போது ஆன்லைன் க்ளாஸில் பங்குபெற கட்டாயம் ஆண்ட்ராய்டு போன் தேவை. நண்பர்கள் எல்லாரும் வைத்திருக்கிறார்கள். என்னிடம் இல்லை என்றபோது அதைக் குழந்தைகளால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டும் என்ற அகக்காரணங்கள் ஒருபுறம் இருக்க, தேவை என்ற புறக்காரணங்களும் கிடைக்காதபட்சத்தில் தவறான முடிவெடுக்க வழிவகுக்கின்றன" என்றார்.
இந்தத் தற்கொலை குறித்து பேசிய நப்பின்னை சேரன் "Pleasure Principle என்று சொல்லப்படுகிற கேட்டதும் கிடைக்கவேண்டும் என்ற மனநிலையால் சிலர் பெற்றோரை மிரட்டுவதும் உண்டு. இதனால் சில குழந்தைகள் சாகப்போகிறேன் வீட்டைவிட்டுச் செல்கிறேன் என மிரட்டுவார்கள். ஆனால் இந்தச் செய்தியைப் பொருத்தவரை மிரட்டுவதைத் தாண்டி கிடைக்கவில்லை என்ற விரக்தியும் ஏமாற்றமும்தான் அந்தச் சிறுவனை தற்கொலை செய்துகொள்ள தூண்டியிருக்கிறது. இதற்கு மனநிலை, சமுதாயம், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருமே ஒரு காரணம்" என்றார் அவர்